full screen background image

‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..!

‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..!

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில்… இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில்.. நடிகர் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்திற்கெதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் துணை இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘பிகில்’ படத்தின் கதை தன்னுடைய கதை என்றும், அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ‘கல்கி’ என்கிற பெயரில் ஏற்கெனவே தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் ‘பிகில்’ படத்தின் கதையின் காப்புரிமை வேண்டியும், தனக்கு கதைக்கான அங்கீகாரம் கொடுக்காமல் அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று கோரியும் தான் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.

ஐந்து மாதங்களாக இந்த வழக்கு விசாரணை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கினை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வாபஸ் பெற்றார் துணை இயக்குநரான கே.பி.செல்வா.

இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் தகுதி உயர்நீதி மன்றத்திற்குத்தான் உண்டு என்று எதிர்த் தரப்பினர் காலந்தாழ்த்தி வாதாடிக் கொண்டேயிருந்ததால், கால நேர விரயத்தை காக்கும் பொருட்டு தான் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டதாக துணை இயக்குநர் கே.பி.செல்வா தரப்பினர் தெரிவித்தனர்.

இதையடுத்து ‘பிகில்’ படம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் புதிய மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார் துணை இயக்குநர் கே.பி.செல்வா.

இந்த வழக்கு நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘இன்று இது குறித்த தங்களது தரப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அட்லீ தரப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி இன்றைக்கு அட்லீ தரப்பினர் தங்களது தரப்பு வாதத்தையும், ஆவணங்களையும் எடுத்து வைத்தனர். அதில் “தாங்கள் 2018 ஜூலை மாதத்திலேயே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ‘பிகில்’ படத்தின் கதையைப் பதிவு செய்திருப்பதாகவும், துணை இயக்குநர் செல்வா தரப்பினர் 2018 அக்டோபரில்தான் கதையை பதிவு செய்திருக்கிறார்கள்…” என்றும் கூறியிருக்கின்றனர்.

ஆனால், இதனை வெறுமனே வாய்மொழியாகக் கூறிய அட்லீ தரப்பு, இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் வழக்கமாகப் பதிவு செய்யப்பட்ட கதைகளுக்காகத் தரப்படும் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லையாம்.

மேலும், “சிட்டி சிவில் கோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்திருந்த நிலையில் துணை இயக்குநரின் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது…” என்றும் அட்லீ தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்..

இதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிட்டி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் காப்புரிமை எந்தவிதத்தில் மீறப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தைக் கூறவில்லை…” என்றும், “பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும்தான் பட வெளியீட்டின் கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால்… இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்..” என்றும் வாதிட்டுள்ளார்.

இதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, “சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுப்பதற்கு முன்பாக, வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் அந்தக் கோர்ட் எப்படி அனுமதி அளித்தது..?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இரு தரப்பு வாதங்களும் இன்றைக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கினை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி. அநேகமாக அடுத்த திங்கள் அல்லது செவ்வாய்கிழமைகளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிகில்’ திரைப்படம் அடுத்த வெள்ளிக்கிழமையான அக்டோபர் 25-ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டு தற்போது அதற்கான விளம்பர வேலைகளும், விநியோக பிஸினஸ்களும் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் இந்த கோர்ட், வழக்கு போன்ற பிரச்சினைகள் தயாரிப்பாளருக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தாலும், இயக்குநர் அட்லீயின் தரப்பினர் இதை படத்திற்குக் கிடைத்த விளம்பரமாக நினைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்குக் குறித்து வழக்குத் தொடுத்திருக்கும் துணை இயக்குநர் கே.பி.செல்வா தனது சமூக வலைத்தளத்தில் மிக உருக்கமாக ஒரு செய்தியொன்றை இன்றைக்கு எழுதியிருக்கிறார்.

k.p.selva-1

அது இங்கே :

“ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதையைக் கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்ககிட்ட இருந்து ‘ஒரு போன்கால் வராதா…’ ‘நம்ம வாழ்க்க மாறாதா’ன்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குநர்கள்ல நானும் ஒருத்தன்,

போன தீபாவளிக்கு இந்த நேரம்தான் எங்களுக்குள்ள இந்தக் கதை பிரச்னை தொடங்குச்சு!!

உங்ககிட்ட நான் காசு கேட்டு வந்தனா..? இல்ல… எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல… ஏன்னா, நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெக்கார்ட் உங்ககிட்ட இருக்கு… ஒரு வேளை மறந்து இருந்தா அத கேளுங்க..!!

அண்ட்… இது விஷயமா 2019 ஜனவரி-ல எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்தப்ப அவங்க ஷூட்டிங்கூட ஆரம்பிக்கல.. அப்புறம் உண்மையாவே அந்த இயக்குநர் 2018 ஜூலை-ல கதையைப் பதிவு பண்ணியிருந்தா, ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும்போதே இத சொல்லல..?

அப்புறம் எதுக்கு என்ன ‘நீதிமன்றத்துக்கு போங்க’ன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும்..? இப்பவரை அவங்ககிட்ட இருந்து எந்த பதிலும் வரல!! நாங்க ‘படத்தை தடை செய்யணும்’ன்னு ஒருவிதத்துலையும் நினைக்கல!! எங்க நோக்கமும் அது இல்ல..!!

‘காசுக்காக… விளம்பரத்துக்காக… வர்றான். இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு..? இவ்ளோ பெரிய இயக்குநர பத்தி பேசுற’ன்னு நிறைய பேர் சொல்றீங்க.. என் உரிமையை, எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்சு கேட்டேன். அவ்ளோதான்…

இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குநர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டிக்கள்… என்ன பாத்தவிதம் இருக்கே… அந்த வலி யாருக்கும் புரியாது.

எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ணின படத்தை தடை செய்றது இல்ல… அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல.. எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு. நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க..!! Respect your enemy!!

அதனால உண்மையா நேர்மையா பேசுங்க!! அதவிட்டுட்டு ‘பணம் கேட்டான்… அத கேட்டான்’னு சில்ற மாதிரி பேசாதீங்க !!

Ignore negativity!! படத்துலகூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல.. valueவும் இல்ல..!! So I m happy that I m in negative shade in your point of view!! End of the day.. நான் உங்கள ஜெயிக்கல… ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்சேன்..  அது போதும்.

நெறைய கத்துக்கிட்டேன்.. எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல..! இது நீங்க சொல்ற காசவிட பெருசு..

So.. எல்லாத்துக்கும் நன்றி!!”

என்று குறிப்பிட்டிருக்கிறார் துணை இயக்குநர் கே.பி.செல்வா.

செசன்ஸ் கோர்ட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது “இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு தகுதியில்லை…” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த அட்லீயின் வழக்கறிஞர்கள், “துணை இயக்குநர் செல்வாவை அட்லீ சந்திக்கவே இல்லை.. செல்வாவிடம் இயக்குநர் அட்லீ கதையை கேட்கவே இல்லை…” என்றெல்லாம் நீதிமன்றத்தில் வாதிடவில்லையாம்.

அதேபோல் செஷன்ஸ் கோர்ட்டில் முன் வைத்திருக்காத வாதமாக “இந்த ‘பிகில்’ படத்தின் கதையை 2018 ஜூலையில் நாங்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறோம்…” என்ற புதியத் தகவலை இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள் அட்லீ தரப்பினர்.

“இதனை ஏன் அவர்கள் எழுத்தாளர் சங்கத்தில் இதற்கான விசாரணை நடந்தபோதே சொல்லவில்லை. ஆதாரத்தைக் காட்டவில்லை.. அது உண்மையாக இருந்திருந்தால் எழுத்தாளர் சங்கம் அப்போதே கதை யாருடையது என்ற தீர்ப்பினை வழங்கியிருக்குமே…?! அவர்களுக்குக்கூட தெரியாமல் எப்படி அட்லீ தரப்பினர் கதையை அவர்களின் சங்கத்தில் பதிவு செய்ய முடியும்..?” என்று வினவுகிறார் துணை இயக்குநர் செல்வா.

துணை இயக்குநர் செல்வாவும் இந்த வழக்கு விசாரணையின்போது தனக்கு நஷ்டஈடாக பணம் வேண்டும் கேட்கவில்லையாம். “கதையின் மீதான உரிமை தனக்கு உண்டு…” என்பதற்கான தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் ஒப்புதலைத்தான் கேட்டிருக்கிறாராம்.

தீர்ப்பு வரட்டும்.. காத்திருப்போம்..!

Our Score