இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கச் சென்றிருக்கிறாராம்.

இயக்குநர் வெற்றி மாறன் ‘அசுரனின்’ அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் ‘துணைவன்’ என்ற கதையின் தழுவல்.

இந்தப் படத்தின் பெரும் பகுதி சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடக்கிறது. இந்தப் படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டியிருந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, சத்தியமங்கலம் பகுதியின் குளிர் தனக்கு ஒத்து வராததால் தான் நடிக்கவில்லை என்று சொல்லி வந்துவிட்டார்.

இதனால் பாரதிராஜாவுக்குப் பதிலாக நடிகர் கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றி மாறன். அந்த அறிவிப்பை எழுதி, வெளியிடுவதற்குள்ளாக அவரையும் மாற்றிவிட்டு தற்போது நடிகர் விஜய் சேதுபதியை அந்த வேடத்திற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் வெற்றி மாறன்.

இந்தப் படத்திற்கான ஒப்பனை டெஸ்ட் நேற்றைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருப்தியடைந்த வெற்றி மாறன் விஜய் சேதுபதியை ‘ஓகே’ சொல்ல.. அவரும் நடிக்கச் சென்றுவிட்டாராம்.

ஏற்கெனவே ‘வட சென்னை’ படத்திலேயே விஜய் சேதுபதி நடித்திருக்க வேண்டியது. அந்தப் படத்தில் இயக்குநர் அமீர் ஏற்றிருந்த வேடத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியைத்தான் வெற்றி மாறன் அணுகியிருக்கிறார். ஆனால் பல நடிகர்கள் நடித்த படம் என்பதால் விஜய் சேதுபதி மறுத்துவிட்டாரம்.

இப்போது ‘அசுரனின்’ வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகத்தின் அனைத்து முன்னணி நடிகர்களும் வெற்றி மாறனின் இயக்கத்தில் நடிக்கப் போட்டி போடுவதால் கிடைத்தவரையிலும் லாபம் என்பதை போல விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் வெற்றி மாறன் கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இன்னொரு பக்கம்… ஏற்கெனவே கை நிறைய படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இதற்கெல்லாம் எங்கே நேரமும், நாட்களும் கிடைக்கிறது என்பதே புரியாமல் கோடம்பாக்க வட்டாரம் முழிக்கிறது.

Our Score