‘காதலிப்பது உறுதி.. கல்யாணமும் உறுதி. ஆனா அதை நாங்கதான் சொல்லுவோம்’ என்கிற கொள்கையில் இருக்கும் இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் இதுவரையில் திருமண நிகழ்வுகள் பற்றி முறைப்படி வெளியில் சொல்லவில்லையென்றாலும், நிச்சயத்தார்த்த விழா மற்றும் திருமணம் பற்றிய ஏற்பாடுகள் மட்டும் மும்முரமாக நடைபெற்று வருகிறது..
கேரளாவில் அமலாபாலின் பூர்வீக மண்ணில் நடைபெறவிருக்கும் நிச்சயத்தார்த்த விழாவுக்கான அழைப்பிதழ்கள் பிரபலங்களுக்கும், உறவினர்களுக்கும் சென்றுள்ளது. அதில் இருக்கும் தகவலின்படி திருமண நிச்சயத்தார்த்த விழா வரும் ஜூன் 7-ம் தேதி கொச்சியில் சூண்டி என்னுமிடத்தில் இருக்கும் St.Jude Church-ல் கிறித்துவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணத்தை உறுதி செய்யும் வைபவம் நடைபெற இருக்கிறதாம்.. இந்த நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனராம்.
இதைத் தொடர்ந்து அன்றைய தினமே நெடும்பாச்சேரியில் உள்ள CIAL Convention Centre-ல் சினிமா துறையினர் மற்றும் மற்றவர்களுக்காக மிக பிரமாண்டமான விருந்து நடைபெறவுள்ளதாம்..
திருமண விழா ஜூன் 12-ம் தேதி ஏற்கெனவே ரகசியமாக அறிவித்தபடியே மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இந்து முறைப்படி, செட்டியார் குல வழக்கப்படியே நடைபெற இருக்கிறதாம். அன்றைக்கே அங்கேயே திருமண வரவேற்பும் உள்ளது..! இதுதான் இப்போதைய நிகழ்ச்சி நிரல்..
அமலாபால் இப்போதும் ‘மிலி’ என்னும் மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து ஜோஷி இயக்கத்தில் மோகன்லாலுடன் ‘லைலா ஓ லைலா’ படத்தில் நடிக்கவும் கையெழுத்திட்டிருக்கிறார். அவரது திருமணத்திற்குப் பிறகுதான் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறதாம். “திருமணத்திற்குப் பிறகும் நிச்சயம் நான் நடிப்பேன்…” என்று மலையாள பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருக்கிறார் அமலாபால்..!
நல்ல நடிகைகளை கல்யாணமாயிருச்சேன்னு வீட்ல வைச்சு பூட்டி வைக்காதீங்கப்பா.. கொஞ்சம் நடிக்க விடுங்க..!









