‘சர்கார்’ சர்ச்சை முடிவடைவதற்குள்ளாக தனது அடுத்தப் படம் பற்றிய இறுதி முடிவை எடுத்துவிட்டார் நடிகர் விஜய்.
இது நடிகர் விஜய்யின் 63-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயின் யார் என்பது இதுவரையிலும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையென்றாலும் நடிகை ரிஹைனா மடோனாதான் ஹீரோயின் என்கிறார்கள்.
இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – எல்.ரூபன் ஆண்டனி, கலை இயக்கம் – டி.முத்துராஜ், சண்டை பயிற்சி – அனல் அரசு, பாடல்கள் – விவேக், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எம்.வெங்கட்மாணிக்கம், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி, எழுத்து, இயக்கம் – அட்லீ.
மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னமும் பெயிரிடப்படாத இந்தப் படத்தின் தயாரிப்பு பற்றி தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட்டின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் பேசுகையில், “இது எங்களின் நீண்ட நாள் கனவு. விஜய்யுடன் இணைந்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் அளவில்லாத உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படம் எங்களது நிறுவனத்தின் 20-வது படமாகும். எங்களது தயாரிப்பிலேயே மிகப் பெரிய பொருட் செலவில் தயாராக உள்ள திரைப்படமும் இதுவேயாகும்.
விஜய், அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இது. ஏராளமான நடிகர், நடிகைகள்.. சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும் இத்திரைப்படம் விஜய்யின் மற்றைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதேசமயம், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மாபெரும் பொழுது போக்கு படமாகவும் இது இருக்கும்..” என்றார் உற்சாகமாய்..!










