full screen background image

விடுதலை – சினிமா விமர்சனம்

விடுதலை – சினிமா விமர்சனம்

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, RS Infotainment நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த ‘விடுதலை’ படத்தினை தயாரித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், தமிழ், சேத்தன், மூணாறு ரமேஷ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

மேஸ்ட்ரோ இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி கலை இயக்கம் செய்ய, பீட்டர் ஹெயின் சண்டை இயக்கம் செய்துள்ளார். ஆர்.ராமர் படத் தொகுப்பு செய்துள்ளார். கதை – ஜெயமோகன்(துணைவன்), பாடல்கள் – சுகா, யுகபாரதி, வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார். பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி ஒன்.

“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள்தான் இந்தப் படத்தின் மையக் கரு. 

இதன் அர்த்தம், “நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர்… மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்” என்பதுதான்..!

1992-ம் ஆண்டில் ஆனந்த விகடன்’ பத்திரிகையில பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த துணைவன்’ என்ற சிறுகதையைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

சிறுகதைதான் இந்தப் படத்திற்கான அடித்தளம் என்றாலும் அந்த  சிறுகதை பேசிய நக்சல்கள் உருவான வரலாறு தவிர வேறு எந்தக் கதையையும் அதிலிருந்து இயக்குநர் எடுத்தாளவில்லை. அதேசமயம் இத்திரைப்படம் அந்த சிறுகதைக்கு நேரெதிராக நக்ஸல்களுக்கு ஆதரவான கண்ணோட்டத்திலேயே உருவாகியிருக்கிறது. இதுதான் வெற்றிமாறன் என்ற உண்மையான படைப்பாளியின் தரம்.

‘நக்ஸல்கள்’ என்றழைக்கப்பட்ட மிக தீவிரமான அரசியல் செயல்பாட்டாளர்கள் மிதமான அரசியல் தன்மை நாட்டில் செத்துவிட்டதை உணர்ந்த பின்பு தங்களது கைகளில் ஆயுதமேந்த ஆரம்பித்தார்கள். முதலில் மேற்கு வங்காளத்தில் 1967-ல் ‘நக்ஸல்பாரி’ என்ற சிற்றூரில் துவங்கிய இந்தப் பொறி, நாளடைவில் இந்தியா முழுவதுமே பரவியது.

மேடையேறி மைக் பிடித்து தங்களது அரசியல் கொள்கைகளை முன் வைத்து பேசி கை தட்டல்களை வாங்கிக் கொண்டு தங்களது சமூக அக்கறையை முடித்துக் கொள்ளும் அரசியல் இயக்கங்களின் தலைவர்களால் ஏழை, எளிய மக்களின் பிரச்சினைகள் தீரப் போவதில்லை.

அப்பாவி மக்களின் அவலக் குரலைக் கேட்கக் கூட விரும்பாத அரசுகளை அப்புறப்படுத்த தேர்தல் மட்டுமே நேர் வழியல்ல. ஆயுதப் போராட்டத்தையும் இதில் சேர்த்துக் கொண்டால்தான் இந்த வர்க்கப் போராட்டம் ஜெயிக்க முடியும் என்று நினைத்த சில இளைஞர்களால் உருவான இந்த இயக்கம் தமிழகத்திலும் 1980-களில் கொடி கட்டிப் பறந்தது.

தஞ்சாவூரில் துவங்கி அப்போதைய வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் இருந்த காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருந்தபடி ஆயுதமேந்தி அரசுகளை எதிர்த்த நக்ஸல்கள் என்ற அந்தப் போராளி குழுக்களில் ஒரு பகுதியினரின் கதைதான் இந்த ‘விடுதலை’ திரைப்படம்.

கு.கலியப்பெருமாள், அப்பு, பொன்பரப்பி தமிழரசன் என்று அப்போதைய தமிழகத்தின் நக்ஸல் தலைவர்களின் பின்னணியில் நடந்த கதையில் கொஞ்சத்தையும், மீதியை இப்படித்தான் நடந்திருக்கும் என்கிற கற்பனையினாலும் இந்த இரண்டரை மணி நேர படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

1987-ல் அருமபுரி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை பார்த்து அப்போதைய அரசு அதே காட்டுப் பகுதியிலேயே அவர்களை அடக்குவதற்காக தனி போலீஸ் கம்பெனியை உட்கார வைத்திருக்கிறது.

அந்தக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்கும் நக்ஸல்களின் தலைவரான பெருமாள் என்னும் வாத்தியாரை தேடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த போலீஸ் கம்பெனியில் ஜீப் டிரைவராக வேலை செய்ய வருகிறார் சூரி. அந்தக் கம்பெனிக்கு கமாண்டிங் ஆபீஸராக இருப்பவர் சேத்தன். சூரி நல்லவர்.. அதே சமயம் சூதுவாது தெரியாத மனிதர்.

சேத்தனின் கட்டளையை மீறும் சூரியை அவருக்குப் பிடிக்கவேயில்லை. சூரிக்கு தண்டனைக்கு மேல் தண்டனையைக் கொடுக்கிறார். இதைக்கூட சூரி பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் நான் செய்ததில் தவறில்லை என்கிறார்.

அதே சமயம் அதே காட்டுப் பகுதியில் வசித்து வரும் நாயகி பவானிஸ்ரீயுடன் நட்பாகி பழக, சூரிக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. நாயகிக்கும் அதே உணர்வுதான். இந்தக் காதல் கை கூடும்போது அந்தக் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சில காவலர்கள் இறந்துபோக நிலைமை தீவிரமாகிறது.

இப்போது அந்தப் பெருமாள் வாத்தியாரை கைது செய்ய தமிழக அரசு சுனில் மேனன் என்ற கெளதம் மேனனை அனுப்பி வைக்கிறது. கெளதம் மேனன் அந்தக் கிராமத்து மக்களிடையே நல்லவிதமாகப் பேசி பழகி அவர்களது அன்பைப் பெற்று பெருமாள் வாத்தியாரைப் பிடிக்க முயல்கிறார்.

இது முடியாமல் போக.. அடுத்து நடந்த ஒரு மோதலில் காவலர்கள் மேலும் பலியாக, அந்தப் பகுதியில் வசித்து வந்த மொத்த மக்களையும் பிடித்து வரும் போலீஸ் அவர்கள் அனைவரையும் சித்ரவதை செய்கிறது.

இந்தப் பட்டியலில் தனது காதலி பவானிஸ்ரீயும் இருப்பதை அறியும் சூரி அவரை மட்டுமாவது காப்பாற்ற தனது உயரதிகாரிகளிடம் கெஞ்சுகிறார். ஆனால் பலனளிக்காமல் போக.. “அந்தப் பெருமாள் வாத்தியார் இருக்கும் இடம் எனக்குத் தெரியும்…” என்று கெளதம் மேனனிடம் சொல்கிறார்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த விடுதலை’ முதல் பாகத்தின் கதை.

இதுநாள் வரையிலும் தான் நடித்த காமெடி கதாப்பாத்திரங்கள் அத்தனையும் வீண் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு அப்பாவியான கிராமத்து பட்டிக்காட்டான் வேடத்தை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார் சூரி.

சூரி நகைச்சுவை நடிகர் என்பது உலகத்துக்கே தெரிந்தது என்பதால் அவருடைய அப்பாவித்தனமான பேச்சாலேயே நமக்கு சில இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குநர்.

ஒத்தையடிப் பாதையில் நுழையும் சப்-இன்ஸ்பெக்டரிடம் “எனக்கு வரலை ஸார். நீங்க போயிட்டு வாங்க” என்று சூரி சாதாரணமாகச் சொல்ல அவரோ, “இதுதான் பாதை. வா” என்று சொல்லும்போது படத்தின் தன்மையையும் மீறி சிரிப்பலை எழுகிறது. இ்ப்படித்தான் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சோடு ஒன்றிப் போய் பல இடங்களில் தனது அப்பாவித்தனத்தினாலேயே சிரிக்க வைத்திருக்கிறார் சூரி.

வழமையான சினிமாக்களில் வரும் காதல் இல்லாமல்… காதல் என்ற உணர்வு எப்படி மெல்ல, மெல்ல தலை தூக்கி கடைசியில் கல்யாணப் பேச்சில் வந்து முடிவதாக இயக்குநர் எழுதியிருக்கும் புதுமையான இந்தக் காதல் திரைக்கதை படத்தின் மிகப் பெரிய பலம்.

கல்யாணப் பேச்சை எடுத்த பின்பு ஒட்டு மொத்தக் காவல் துறையும் தேடி வரும் பெருமாளின் உறவுக்காரப் பெண்தான் பவானிஸ்ரீ என்பதை அறிந்தவுடன் பேச்சை முறித்துக் கொண்டு செல்லும் சூரி, பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் காதலை வளர்த்துக் கொள்ள வரும்போது நமக்கே மிகவும் பிடித்தமானவராகிறார்.

பவானிஸ்ரீ போலீஸில் சித்ரவதைப்படும்போது அந்த மைதானத்தில் அங்கிட்டும், இங்கிட்டுமாக ஓடிப் போய் காதலியை மீட்க அல்லலோகப்படும் சூரி, நமது ஒட்டு மொத்த பரிதாபத்தையும் பெற்றுவிட்டார்.

இறுதியில் பெருமாளிடம் “தயவு செஞ்சு வந்து சரண்டராகிருங்க ஸார்… உங்களாலல அப்பாவி மக்களெல்லாம் கஷ்டப்படுறாங்க…” என்று சொல்லி கெஞ்சும்போது அப்பாவித்தனத்தின் உச்சத்துக்கே போய்விட்டார் சூரி.

இந்தப் படத்தின் மூலமாக சூரிக்கு தமிழ் சினிமாவில் புதிய வாசல்கள் திறக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதில் அவர் ஜாக்கிரதையாக நடந்து சென்றால் பெயரும், புகழும் கிட்டும். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.

நாயகியாக நடித்திருக்கும் பவானிஸ்ரீ அச்சு அசலாக அந்தக் கிராமத்துப் பெண்ணாகவே மாறிவிட்டார். அவருடைய தோற்றமும், உடல்வாகும்கூட அந்தக் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

சூரியுடனான காதலை சொல்ல முடியாமல் தவித்து மறைமுகமாக எடுத்துச் சொல்லி பின்பு காதலாகி உருகும் காட்சிகளிலும், தனது பாட்டி இறந்தவுடன் அவர் கதறும், கதறலும், போலீஸ் சித்ரவதையில் அவர் படும் துயரமும் மொத்தமாக இந்தக் கதாப்பாத்திரத்தை அவர் ஏற்றதினால், சிறப்பான அறிமுகத்தை அவருக்குத் தந்திருக்கிறது.

விஜய் சேதுபதி படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் போலீஸுக்கும், நமக்கும் தண்ணி காட்டுகிறார். இரண்டாம் பகுதியில் அவர் நடித்திருக்கும் காட்சிகளின் கிளிப்பிங்ஸை பார்க்கும்போது சென்சார் போர்டுக்கு நிறையவே வேலைகளை கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்பது புரிகிறது.

சுனில் மேனனாக நடித்திருக்கும் கெளதம் மேனன் முதலில் நல்லவராக வேடமிட்டு தனது முகத்தைக் காட்டியவர் பின்பு தனக்குள் இருக்கும் இன்னுமொரு மிருக குணத்தையும் காட்டுகிறார். சீருடையணிந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு என்ன மன நிலையிருக்குமோ அதையே வெளிப்படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.

இவருக்குச் சற்றும் சளைக்காத சாடிஸ்ட் இன்ஸ்பெக்டரான சேத்தன் இறுதியில் மிகக் கொடிய கிரிமினல் போலீஸாகாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். சூரி தன்னிடம் மன்னிப்பு கேட்காததால் அவருக்குத் தண்டனை கொடுத்து அதை ரசிப்பவராகும், சூரி மன்னிப்பு கேட்கும்வரையிலும் அவரை பார்க்கவே விரும்பாத மனிதராக தனது பேச்சுக்கள் அனைத்திலும் காட்டும் போலீஸ் துரை தோரணையில் சேத்தனை ரசிக்க முடிகிறது.

மேலும் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தமிழ், உளவாளியாக இருக்கும் போலீஸ் ஏட்டு என்று அனைவருமே போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் ஆண்டான்-அடிமை கலாச்சாரத்தை வெளிச்சமாக்கியிருக்கிறார்கள்.

தலைமைச் செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனனின் கதாப்பாத்திரம் இன்னொரு பக்கம் சிறப்புப் பெற்றது. அவர் பேசும் வசனங்கள் அனைத்துமே இந்தியா முழுமைக்கும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஒட்டு மொத்த மன நிலையைத்தான் காட்டுகிறது. அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களுக்குமான இடைவெளி ஏன் இத்தனை ஆண்டு காலமாக தீர்க்கப்படவில்லை என்பதை இந்த ராஜீவ் மேனன் பேசும் பேச்சில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

அந்த மலைப் பிரதேச மக்களாக நடித்தவர்களும் இறுதிக் காட்சியில் போலீஸில் சித்ரவதைப்படும் மக்களாக நடித்தவர்களுக்கும் நமது கோடானு கோடி நன்றிகள். இந்த உண்மை நடிப்பை வரவழைக்க அவர்கள் பட்டிருக்கும் கஷ்டமும், படக் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கும் மனக் கஷ்டத்தையும் நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.

படத்தில் நாயகன் போன்று வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். துவக்கக் காட்சியில் காட்டப்படும் ரயில் விபத்தினை படமாக்கியிருக்கும்விதமே அற்புதம். அழகு.. படத்தின் மிகப் பெரிய பட்ஜெட்டை இந்தக் காட்சியே பிடித்துவிட்டது என்று இயக்குநர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை என்றே சொல்லலாம்.

காட்டுப் பகுதிகளை அங்குலம், அங்குலமாக அலசி ஆராய்ந்து நம் கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறார் வேல்ராஜ். சூரி முதல் நாளிலேயே போலீஸ் செக்போஸ்ட்டுக்கு நடந்து போகும் காட்சியில் கேமிராவும் உடன் நடக்க நாமும் நடந்து போகும் உணர்வுதான் ஏற்பட்டது.

இறுதிக் காட்சியில் நடக்கும் துப்பாக்கி சண்டை ஹாலிவுட் படங்களுக்கு நிகராகப் படமாக்கப்பட்டுள்ளது. அந்த 20 நிமிடங்களில் படம் பார்க்கும் ரசிகர்களின் ரத்த அழுத்தத்தையே ஏற்றிவிடும் அளவுக்கு உழைத்திருக்கிறார் வேல்ராஜ். இதே உழைப்பை படத் தொகுப்பாளரும் இதே காட்சியில் கொடுத்திருக்கிறார். அவருக்கும் நமது வாழ்த்துகள்.

சில சித்ரவதை காட்சிகள், நிர்வாணக் காட்சிகளை அந்த பீலிங் குறையாமலும், காட்சியுணர்வை சிதைக்காத வண்ணமும் படமாக்கியிருக்கிறார்கள்.

காட்டு மல்லி’, ‘உன்னோட நடந்தா’ என்ற இரண்டு பாடல்களும் பொருத்தமான இடங்களில் அமைந்து நம் மனதுக்கு இதமாகியிருக்கின்றன. இளையராஜா குரலில் ஒற்றை வரியாக ஒலிக்கும் ‘ஆராரிரோ’ பாடல் அந்த நொடியில் மனதைப் பிசைகிறது.

பின்னணி இசையிலும் இளையராஜா வழக்கம்போல இசைத்திருக்கிறார். சூரி – பவானிஸ்ரீ காதல் காட்சிகளிலும், பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் பின்னணியில் ஒலிப்பதெல்லாம் காதல் மூடை நமக்கே ஏற்படுத்துகின்றன.

சூரி மைதானத்தில் இங்கேயும், அங்கேயுமாக அதிகாரிகளைப் பார்க்க ஓடும் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையே நமக்குள் ஒரு பரிதாப உணர்வைத் தூண்டிவிடுகிறது. இப்படியாக படத்திற்கு இன்னொரு இயக்குநராகியிருக்கிறார் இளையராஜா.

கலை இயக்குநர் ஜாக்கியின் கடும் உழைப்பையும் நாம் பாராட்ட வேண்டும். இது போன்ற காடு, காடு சார்ந்த பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த வேண்டுமெனில் அதற்கு எத்தனை உழைப்பை நல்க வேண்டும் என்பது சினிமா துறையினருக்குத் தெரியும். அந்த உழைப்பை கலை இயக்குநரும் கொட்டியிருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

கலைப் படைப்பாகும் சூழல் இருந்தும் அப்படியொன்று நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரசுத் தரப்பு, நக்லஸ்கள் தரப்பு, அப்பாவி பொதுமக்கள் என்று மூன்று தரப்பினரின் வாக்கு மூலத்தையும் சமமான அளவில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் கதை 1987-ல் நடக்கிறது. அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆரின். தலைமையில் அதிமுக ஆட்சி நடந்து  கொண்டிருந்தது. அப்போது இதே தர்மபுரி மாவட்டத்தில் கோலோச்சி கொண்டிருந்த நக்ஸலைட்டுகளை தீர்த்துக் கட்ட அப்போதைய டி.ஐ.ஜி. தேவாரத்தின் தலைமையில் போலீஸ் படையை அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

தேவாரத்தின் தலைமையிலான போலீஸ் படை சில ஆண்டுகளிலேயே அந்தப் பகுதியில் இருந்த மொத்த நக்ஸலைட்டுகளையும் ஒழித்துக் கட்டினாலும், அப்பாவி பொதுமக்களுக்கு அவர்கள் செய்த கொடுமைகள் மிக அநியாயமானவை. அகோரமானவை. அருவருக்கத்தக்கவை.

மனித உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வு அப்போது அதிகமாக இல்லாததும், இப்போதிருப்பதுபோல மீடியாக்களின் பலம் அப்போது இல்லை என்பதாலும் அந்த அப்பாவி மலைவாழ் மக்களின் அழுகுரல்கள் யாரையும் எட்டவில்லை.

இதே மாதிரியான போலீஸின் வேட்டையைத்தான் சில ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மாதேஷ்வரன் மலைப் பகுதியில் வசித்து வந்த மக்களிடம் கொடூரமான முறையில் காட்டியது இதே தேவாரத்தின் தலைமையிலான போலீஸ் படைதான்.

அரசை நிர்வகிக்கும் கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் தனது ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்ற பெயர்தான் இருக்க வேண்டும் என்கிற ஆசை. போலீஸுக்கோ தங்களைத் தவிர வேறு யாரும் நாட்டில் ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற ஆசை.

ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டித்தான் பொதுமக்களில் சிலர் ஆயுதமேந்தினார்கள் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாற்றலும், சிந்தனையும் இவர்களுக்கு இல்லாததுதான் பொதுமக்களாகிய நமக்குக் கிடைத்த சோகம். அதன் விளைவுதான் இந்தக் கதை.

1987-ல் வால்டர் தேவாரம் தலைமையில் நடத்தப்பட்ட ஆபரேஷனின் பெயர் அஜந்தா’. நக்சல்கள் வைத்த குண்டு வெடிப்பில் இறந்த இஸ்பெக்டரின் ஒருவரின் மகள் பெயர்தான் இது. இந்தப் படத்தில் ‘ஆபரேஷன் கோஸ்ட் ஹண்ட்’ என்று மாற்றியிருக்கிறார்கள்.  

படத்தில் கதைக் களமான தருமபுரி, அருமபுரியாக மாறியிருக்கிறது. நக்ஸல்களின் தலைவரான கு.கலியபெருமாளை நினைவூட்டுகிறது பெருமாள் என்ற வாத்தியார் கதாப்பாத்திரம்.

ஒரு காட்சியில் கதாநாயகியின் பெயரை கேட்டு போலீஸ்காரர்கள் அவளை அடிக்கிறார்கள். நாயகியும் “தமிழரசி” என்கிறாள்.  “அதான்” என்கிறார் இன்ஸ்பெக்டர் சேத்தன். இது நக்ஸல்களில் தளபதியாக இருந்த பொன்பரப்பி தமிழரசனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

யாருக்கும் முகச் சாயம் பூசாமல் மூன்று தரப்பினரின் நியாயத்தையும் இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் வெற்றி மாறன். அதே நேரம் அரசுகள் சொல்வதை மட்டுமே செய்தியாக்கி விளம்பரப்படுத்தும் மீடியாக்களின் செயல்களையும் அப்பட்டமாக்கியிருக்கிறார்.

இன்னொரு பக்கம் அரக சொல்வது நியாயமா.. நியாயமில்லையா என்பதையெல்லாம் யோசிக்காமல் அரசு சொல்லிவிட்டது. நாம் செய்ய வேண்டியதுதான் என்ற எந்திரத்தனத்துடன் செயல்படும் காவல் துறையையும் குத்திக் காட்டியிருக்கிறார் வெற்றி மாறன்.

அதேபோல் காவல் துறைக்குள்ளேயே இருக்கும் ஏற்றத் தாழ்வுகள், சாதிய உணர்வு, ஆண்டான், அடிமை கலாச்சாரம், அரசுகள் மீதான அவர்களது கசப்புணர்வு எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

ஏற்கெனவே கர்ணன்’, ‘விசாரணை’, ‘ஜெய் பீம்’, ‘டாணாக்காரன்’ போன்ற படங்களில் போலீஸ் சித்ரவதை என்பது எப்படி இருக்கும் என்பதை பார்த்திருக்கிறோம். இதிலும் அப்படியே அதைக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். வேறு வழியில்லை. காட்டித்தான் ஆக வேண்டும்.

ஏற்கெனவே சிறந்த இயக்குநருக்கான பட்டியலில் நீங்காத இடம் பிடித்திருக்கும் இயக்குநர் ஒருவர் மீண்டும், மீண்டும் அந்த இடத்தைத் தக்க வைக்கும்விதமாக படங்களைக் கொடுப்பது அசாத்தியமான ஒன்று. அந்த அசாத்தியத்தை அலட்சியமாக இந்தப் படத்தின் மூலமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

இனி வெற்றி மாறனுக்கு போட்டியே அவரது முந்தைய படங்கள்தான் என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதுவரையிலான வெற்றி மாறனின் படங்களில் இது சாலச் சிறந்தது என்பதையும் உறுதியாகச் சொல்லலாம்.

படத்தில் கடைசியாகக் காண்பிக்கப்பட்ட விடுதலை பாகம்-2’-ன் முன்னோட்ட காட்சிகளே அடுத்த பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காத்திருப்போம்..!!!

RATING : 4.5 / 5

Our Score