full screen background image

பத்து தல – சினிமா விமர்சனம்

பத்து தல – சினிமா விமர்சனம்

தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் Studio Green நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர்,  டீஜே, மனுஷ்யபுத்திரன், அனு சித்தாரா, சந்தோஷ் பிரதாப், கலையரசன், கன்னட நடிகர் மது குருசாமி, டீஜே அருணாச்சலம், கண்ணன் பொன்னையா, செண்ட்ராயன், ஜோ மல்லூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஜெயந்திலால் கடா, கே.ஈ.ஞானவேல்ராஜா, இணை தயாரிப்பு – நேகா ஞானவேல்ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ கிரீன், தலைமை செயல் அலுவலர் – ஜி.தனஞ்செயன், ஒளிப்பதிவு – பரூக் ஜெ.பாஷா, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – மிலன், வசனம் – ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், நடன இயக்கம் – சாண்டி, சண்டை இயக்கம் – சக்தி சரவணன், திரைக்கதை – ஓபிலி என்.கிருஷ்ணா, கதை – நார்தன், பாடல்கள் – சிநேகன், கபிலன், விவேக், உடைகள் வடிவமைப்பு – உத்ரா மேனன், ஒலிப்பதிவு – எஸ்.சிவக்குமார், ஒலி வடிவமைப்பு – கிருஷ்ணா சுப்ரமணியன், புகைப்படங்கள் – வி.சித்தரசு, விளம்பர வடிவமைப்பு – தண்டோரா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.

‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ஓபிலி N.கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தச ‘பத்து தல’ திரைப்படம். கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும், ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்தியும் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இதுவரையிலும் போலீஸ் –  தாதாக்கள் இடையேயான பகையை முன் வைத்து நிறையவே திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன. அந்த வரிசையில் அடுத்தப் படைப்பாக இந்தப் ‘பத்து தல’ படமும் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடி கட்டிப் பறக்கும் தாதா ‘ஏ.ஜி.ஆர்.’ என்கிற ‘ஏ.ஜி.ராவணன்’. முக்கிய தொழிலாக மணல், மற்றும் கனிம வளங்களை மொத்தமாக சுரண்டியெடுத்து கடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் வருவாயை வைத்து தமிழகத்தையே மறைமுகமாக ஆண்டு வருகிறார்.

தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரையே இவர்தான் தேர்வு செய்திருக்கிறார். எதிர்க்கட்சியினரையும் அடக்கி வைத்திருக்கிறார். துணை முதல்வரான கெளதம் மேனனுக்கு மட்டும் பரம எதிரி.

இப்போதைய முதல்வராக இருக்கும் சந்தோஷ் பிரதாப்புக்கும், கௌதம் மேனனுக்கும் இடையில் கமிஷன் பிரச்சினையில் மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சந்தோஷ் பிரதாப் நள்ளிரவில் கடத்தப்படுகிறார். போலீஸாராலேயே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போதும் உள்கட்சி மோதலால் கெளதம் மேனன் முதல்வராக முடியவில்லை. ஏ.ஜி.ஆரின் ஆதரவு இருந்ததினால் ஓபிலி என்.கிருஷ்ணாவே முதல்வராகிறார். இதனால் மேலும் ஏ.ஜி.ஆர். மீது மேலும் கோபமடைகிறார் கெளதம் மேனன்.

முதல்வர் கடத்தல் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ.க்கு ஏ.ஜி.ஆர். மீது சந்தேகம் வருகிறது. ஏ.ஜி.ஆரை. கையும், களவுமாக ஆதாரத்துடன் பிடிக்க நினைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான கெளதம் கார்த்தியை ஏ.ஜி.ஆரிடம் சேருவதற்கான வழிவகைளை செய்கிறது மத்திய புலனாய்வு துறை.

மிகப் பிரயத்தனப்பட்டு கௌதம் கார்த்திக் வேறொரு பெயரில் சிம்புவிடம் வேலைக்கு சேர்ந்து சி.பி.ஐ.-க்காக உளவு வேலை பார்க்கிறார்.  இந்த உளவு வேலை சிம்புவுக்கும் தெரிய வரும் அதே நேரத்தில் அமைச்சரவையில் இருந்தும், கட்சியில் இருந்தும் கெளதம் மேனன் கழற்றிவிடப் படுகிறார்.

இந்தக் கோபத்தில் கெளதம் மேனன் சிம்பு மீது படையெடுக்க. அதே நேரம் சி.பி.ஐ.யும் சிம்புவை கைது செய்ய களத்தில் இறங்க யாருக்கு என்னவாகிறது என்பதுதான் இந்தப் பத்து தல படத்தின்  கிளைமாக்ஸ்.

‘கே.ஜி.ராவணன்’ என்ற கதாபாத்திரத்தில் மணல் மாஃபியா தலைவனாக சிலம்பரசன் மிரட்டியிருக்கிறார். கருப்பு வேட்டி, கருப்பு சட்டையுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அமைதியான தோற்றத்துடன் படம் முழுவதும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் சிம்பு.

அவரது தற்போதைய வயதை மீறிய காட்சியமைப்புகள், திரைக்கதையிருந்தாலும் இளமையின் கடைசியிலும், முதுமையின் துவக்கத்திலும் இருப்பது போன்ற தோற்றத்தில் இருக்கும் சிலம்பரசனின் ஒவ்வொரு அசைவும், நடிப்பும் மாஸாகவும், கிளாஸாகவும் இருக்கிறது.

கே.ஜி.ஆர். என்ற தாதாவைப் பற்றி முதல் பாதி முழுவதிலும் கொடுக்கப்படும் பில்டப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இடைவேளை பிளாக்கில் எண்ட்ரி கொடுக்கும் சிம்பு, இரண்டாம் பாதி முழுவதையும் தானே சுமந்திருக்கிறார்.

அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலேயே படம் நெடுகிலும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் சிலம்பரசன். “நான் ஆண்ட பரம்பரைடா” என்று கவுதம் மேனன் பேசும் வசனத்திற்கு, “நான் உங்களை அழிச்ச பரம்பரை” என்று சிலம்பரசன் பதில் சொல்வதும் டாப் கிளாஸ் என்றே சொல்லலாம்.

“மண்ணை ஆள்றவனுக்குத்தான் எல்லை… அள்ளுற எனக்கு அது இல்லை”, என்றும், “படியேறி மேலே வந்தவன் நான் கிடையாது… எதிரியை மிதிச்சேறி வந்தவன்” என சிம்பு பேசும் பன்ச் வசனங்களும் தியேட்டரில் கை தட்டலை அள்ளுகிறது.

மேலும் “என்னால எத்தனை பேர் வாழ்ந்தாங்க… எத்தனை பேர் அழிஞ்சாங்கன்னெல்லாம் எனக்கு தெரியாது..!” என்று சிம்பு பேசும் பன்ச் வசனம் அவருக்காகவே எழுதப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சிம்புவை கொடூரமானவராக சித்தரித்துவிட்டு, திடீரென்று ராபின் ஹூட் ஸ்டைலில் நல்லவராகவும் மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஆனால் “ஆமாம். நான் கனிம வளங்களை கொள்ளையடிக்கிறேன்…” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் சிம்பு மீதான பரிதாபமோ, பாசமோ நமக்கு வரவில்லையே இயக்குநரே..!

படத்தின் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் கெளதம் கார்த்திக், இதுவரை இல்லாத வகையில் தோற்றத்திலும், நடிப்பிலும் முற்றிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். அவரது அறிமுகக் காட்சியிலேயே தனி கவனம் பெறும் கெளதம் கார்த்திக் நிஜ தாதா போலவே இருந்து திடீரென்று தனது உண்மை ரூபத்தைக் காட்டும்போது நமக்கும் திக்கென்றாகிறது.

தனது இன்னசென்ட் முகத்தை முரட்டுத்தனமான முகமாக மாற்றிக் கொண்டு, அழுத்தமான நடிப்பின் மூலமாக அவரது ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் கவர்ந்திழுத்து.. அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடித்து ஆக்சன் ஹீரோவாகவும் ரசிக்க வைக்கிறார் கெளதம் கார்த்திக்.

கல்லூரி காலத்திய கெளதம் கார்த்திக் சிறிது நேரமே வந்தாலும் அந்த டூயட்டுக்கும், பிரியா பவானியினுடனான காதலுக்கும் புது ரூட்டு போட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

கடைசிவரையிலும் கதையுடன் பயணிக்கும் தாசில்தார் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியா பவானியின் அந்த ஹேர் ஸ்டைல் புதிதாகவும், அழகாகவும் இருக்கிறது.

கெளதம் கார்த்திக்கை காதலிக்கும் பிரியா, அவருடன் நெருக்கமாக டூயட் பாடமல் சற்று எட்டத் தள்ளி நின்று மாண்டேஜ் காட்சிகளியே காதலித்திருக்கிறார். இந்த மாண்டேஜ் காட்சியில் குட்டை டவுசர் போட்டு அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.

‘நாஞ்சிலார் குணசேகரன்’ என்ற அரசியல் தலைவர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதம் மேனன், ‘மன்னர் பரம்பரை’ என்ற ஆணவத்தோடு படம் நெடுகிலும் வலம் வருகிறார். அரசியல் தில்லுமுல்லுகளையும், சில்லுண்டித்தனமான அரசியல் வேலைகளையும் தொடர்ந்து செய்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் கெளதம் மேனன். தொடர் தோல்விகளால் துவண்டு போன நிலையில், சிம்பு மீது இருக்கும் கோபத்தை தனது உதவியாளர் மீது காட்டும் காட்சியில் நம்மை பதற்றமடைய வைத்துள்ளார்.

முதலமைச்சராக சந்தோஷ் பிரதாப் சில காட்சிகளே ஆனாலும் கெத்தாக நடித்திருக்கிறார். இவரது மனைவியாக அனு சித்தாரா.. பரிதாப உணர்வைத் தூண்டும்வகையில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏன் தமிழில் பெரிய கதாப்பாத்திரங்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை.

மேலும் கலையரசன், மது குருசாமி, ஜோ மல்லூரி, சென்ட்ராயன் மற்றும் பல நட்சத்திரங்களும் தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். சென்ட்ராயனின் கவர்மெண்ட் எம்ப்ளாயி கேரக்டர் சுவாரஸ்யம்தான்.

கன்னியாகுமரி மாவட்ட சமூக சேவகராக கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடித்திருக்கிறார். நடிப்பு வரவில்லை. தெளிவாகத் தெரிகிறது. திரும்பவும் அவரை தொந்திரவு பண்ணாதீங்கப்பா. ரெடின் கிங்ஸ்லியும் ஆங்கங்கே நம்மை சிரிக்க வைக்கிறார்.

’ராவடி…” என்ற குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் நடிகை சாயிஷாவின் அங்க அசைவுகளும், காட்டியிருக்கும் அதீத கவர்ச்சியும் ஆர்யாவுக்கு நன்றி சொல்லச் சொல்கிறது.

பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறது. சிலம்பரசன், கெளதம் கார்த்திக் இருவரையும் இதுவரையிலும் நாம் பார்த்திருக்காத தோற்றத்தில் அசத்தலாகக் காட்டியிருக்கிறார்.

படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சிவரை மொத்தப் படத்தையும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிக்க வைத்திருக்கிறார். இறுதிக் காட்சியின் துப்பாக்கி சண்டையை படமாக்கியவிதமும் படத்திற்கு பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டுதான். ‘நம்ம சத்தம்’, ‘நினைவிருக்கா’,  ராவடி பாடல்கள் சிம்புவின் ரசிகர்களைப் பதம் பார்க்கிறது. சிம்புவுக்கான தீம் மியூஸிக்கும், கெளதம் மேனனுக்குக் கொடுத்திருக்கும் பின்னணி இசையும் இசையிலேயே மோதலாகியிருக்கிறது. கலை இயக்கமும், உடையலங்காரமும், வடிவமைப்பும் கூடுதல் சிறப்பாகவே அமைந்துள்ளது.

கம்பராமாயணம் புத்கத்ததைக் கையில் வைத்திருக்கும் ராவணனை இந்தப் படத்தில்தான் நாம் பார்க்க முடியும். அந்த புத்தகத்துக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது அப்போதே தெரிநதுவிட்டது. இதனாலேயே இதன் மூலமாக கெளதம் கார்த்திக் கண்டறியும் உண்மை நமக்குப் பெரிதாக இம்பாக்ட் கொடுக்கவில்லை.

இது சிம்புவின் வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்றாலும் இந்தப் படத்தில் இந்தக் கேரக்டரை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா. இருந்தாலும், கிளைமாக்ஸில் சிம்பு மீதான குற்றங்களுக்கு ஆதாரமில்லை என்று சொல்லி அவரை நடுவழியில் இறக்கிவிடப்படுவதெல்லாம் ரொம்பவே டூ மச் இயக்குநரே..!

சிம்பு இடைவேளைக்கு பின்னர் வருவது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. ‘பத்து தல ராவணன்’ என்ற டைட்டில் ரோலில் நடித்திருக்கும் சிம்புவை படத்தின் துவக்கத்திலேயே வர வைப்பதாக திரைக்கதை எழுதியிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

படம் முழுக்க, முழுக்க ஆக்‌ஷன் படமாகவே இருந்தாலும், காதலையும், செண்டிமெண்ட்டையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

பத்து தல – சிம்புவுக்கு வெற்றிதான்..!

RATING : 3 / 5

Our Score