நடிகர் விதார்த் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லை எட்டிப் பிடித்திருக்கிறார். விதார்த் தற்போது 25 படங்களில் நாயகனாக நடித்து முடித்திருக்கிறார்.
2001-ம் ஆண்டு ‘மின்னலே’ படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார் நடிகர் விதார்த்.
அதன் பின்பு 9 வருடங்களாக பல்வேறு படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த விதார்த் 2010-ம் வருடம் ‘மைனா’ படத்தின் மூலமாக நாயகனாக பிரமோஷன் பெற்றார்.
இந்தப் படத்திற்குப் பிறகு முதல் கதாநாயகனாக அல்லது இரண்டாவது நாயகனாக என்று பல்வேறு படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
‘மயிலு’, ‘ஜன்னல் ஓரம்’, ‘வீரம்’, ‘ஆள்’, ‘காடு’, ‘குற்றமே தண்டனை’, ‘முப்பரிமாணம்’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’, ‘மகளிர் மட்டும்’, ‘கொடி வீரன்’, ‘பில்லா பாண்டி’, ’காற்றின் மொழி’, ‘வண்டி’, ‘சித்திரம் பேசுதடி-2’ ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார்.
தற்போது ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விதார்த் நாயகனாக நடிக்கும் 25-வது படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை Benchmark Films சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, ‘மூணார்’ ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த், கலை இயக்கம் – ஜெயச்சந்திரன் B.F.A., படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – சாம்.சி.எஸ்., சண்டை இயக்கம் – கனல் கண்ணன், எழுத்து, இயக்கம் – சீனிவாசன்.
விதார்த்தின் 25-வது படம் என்ற அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் புதிய கதைக் கருவுடன், மாறுபட்ட கதைக் களத்தில், மிகப் புதுமையான முறையில் உருவாகியுள்ளது. மிக அழுத்தமான கதை கொண்ட இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தற்போது முடிந்துவிட்டது.

மேலும் படத்திற்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதால், படத்திற்கு மிக சரியான இசையமைப்பாளரை படக் குழு தேடி வந்தது. தற்போது இறுதியாக, பின்னணி இசையில் பெரும் புகழ் பெற்று வரும் இளம் திறமையாளரான சாம் C.S. இப்படத்திற்கு, இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் சீனிவாசனின் வித்தியாசமான அணுகுமுறை கொண்ட திரைக்கதைக்கு சாம் C.S.-ன் இசை மிகப் பொருத்தமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக இருக்குமென படக் குழு கருதுகிறது.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இரண்டுமே இந்த மாதமே வெளியாகவுள்ளது.