இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் வித்தியாசமான நடிப்பில் மலையாள இயக்குநர் ஜி.பத்மகுமாரின் இயக்கத்தில் உருவாகி கடந்த மே 6-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விசித்திரன்’.
இது மலையாள ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். மலையாள வெர்ஷனை இயக்கிய ஜி.பத்மகுமாரே இந்தத் தமிழ்ப் பதிப்பையும் இயக்கியுள்ளார்.
நாயகிகளாக பூர்ணா மற்றும் மதுஷாலினி நடித்திருந்தனர். பக்ஸ், இளவரசு, மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் வெளியானது முதலே பத்திரிகையாளர்களிடமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் ஜான் மகேந்திரனின் வசனங்கள் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளியது. உடல் உறுப்புகள் தானம் என்ற பெயரில் வியாபாரம் பேசும் மெடிக்கல் மாஃபியாக்களை நம் கண் முன்பு நிறுத்தியது. இது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அரசியல் பிரபலங்களும், திரைப் பிரபலங்களும் ஆர்.கே.சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் ஷிவானி, பாலாஜி, ஜூலி, தாமரை உள்ளிட்டோர் “தாங்கள் ‘விசித்திரனை’ கண்டு வியந்தோம்” என தெரிவித்தனர்.
இந்தப் படத்தின் தான் ஏற்றிருந்த ‘மாயன்’ என்ற கதாப்பாத்திரத்திற்காக 80 கிலோ எடை… 90 கிலோ எடை.. 120 கிலோ எடை என தன் உடல் எடையை அவ்வப்போது ஏற்றி, இறக்கி நடிப்பிற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
மலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ் இந்தக் கேரக்டரில் நடித்திருந்தார். அவரின் சாயல் வந்துவிடக் கூடாது என்பதிலும் தான் கவனமாக இருந்ததாக தெரிவித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.
தற்போது அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இந்த ‘விசித்திரன்’ படம் பெற்று வருவதால், தற்போது தமிழகத்தில் சில தியேட்டர்களில் இந்தப் படத்திற்கான காட்சிகள் அதிகரித்துள்ளதாம்.
“ஒரு நல்ல படைப்பை கொடுத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்பதற்கு இந்த ‘விசித்திரன்’ படம் ஒரு நல்ல உதாரணம்…” என்கிறார்கள் தமிழ்த் திரையுலகத்தினர்.









