தெலுங்கு சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ராம் சரணின் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘வினயை விதேயா ராமா’ திரைப்படம் தமிழ், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது.
‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க… ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A.வில்சன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கனல் கண்ணன் சண்டை பயிற்சியை அளித்துள்ளார். வசனம் T.கிருஷ்ணமூர்த்தி, பாடல்கள் – சுகுமார் கணேசன். பிரபல தெலுங்கு இயக்குநரான போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார்.
குடும்பப் பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டமான படமாக இந்த ‘வினயை விதேயா ராமா’ உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியை மட்டும் பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
DDV எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் விநியோகம் செய்யும் இந்த ‘வினயை விதேயா ராமா’ திரைப்படம் வரும் பிப்ரவரி 1-ம் முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.










