full screen background image

வெப்பம் குளிர் மழை – சினிமா விமர்சனம்

வெப்பம் குளிர் மழை – சினிமா விமர்சனம்

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுகின்றன. அந்த வரிசையில் ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான திரவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான வெப்பம் குளிர் மழை’ படமும் இடம் பெறுகிறது.

படத்தின் தயாரிப்பாளரான திரவ், இந்தப் படத்தின் சிக்கலான முதன்மை கதாபாத்திரமான பெத்த பெருமாளாகநடித்திருக்கிறார். அசுரன்’, ‘பொம்மை நாயகிபடத்தில் நடித்திருந்த இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யாஎன்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனது தனித்துவமான உடல் மொழியோடு, கோபமான மாமியார் பாத்திரத்தில் ரமா நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பேயே படப்பிடிப்பு நடத்திய கிராமத்துக்கு சென்று, அந்த மக்களுடன் பழக் தொடங்கிய இப்படத்தின் நட்சத்திரங்களோடு சேர்ந்து கிராமத்து மக்கள் பலரும் நடித்திருக்கிறார்களாம்.

குறிப்பாக இயக்குநரின் அம்மா, சகோதரி  என்று அவரது உறவினர்கள் சிலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்களாம்.

ஷங்கர் ரங்கராஜன் இசையமைக்க, பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரவ் படத்தொகுப்பு செய்ய, ஆனந்த், திரவ், அருண் ஆகியோர் ஒலி வடிமைப்பு பணியை செய்துள்ளனர். ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, திரவ் பாடல்கள் எழுதியுள்ளார்.

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல்படத்தில் உதவி இயக்குநராகவும், ‘மகளிர் மட்டும்மற்றும் சுழல்வெப் சீரிஸில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து, இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது. அவர்களிடையே உருவாகும் சமூக தாக்கங்கள் மனம், உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்பதைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

இது குழந்தையின்மையைப் பற்றி பேசும் படம். இன்றைய 21-ம் நூற்றாண்டில் விஞ்ஞான ரீதியாக நாம் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும் உயிர், பிறப்பு பற்றிய அறிவியல் பார்வை மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. அதை ஒரு குடும்பத்தின் வழியாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

குழந்தையின்மை இப்போதைய சமூகத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு பிரச்சனையே இல்லை. அது ஒரு விளைவு. ஆணும், பெண்ணும் இணைவதால் ஏற்படக் கூடிய விளைவு.

அது நடப்பது நம் கையில் இல்லை என்ற போதிலும் அதை மிகப் பெரிய பிரச்சனையாக இந்த சமூகம் பார்க்கிறது. அது ஏன் என்ற கேள்விதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தின் டிரைலரில் இடம் பெறும் கணவன் – மனைவி இடையிலான பிரச்சனை எப்படி பல கேள்விகளை எழுப்பியதோ, அதுபோல் இத்திரைப்படமும் பல கேள்விகளையும், விவாதங்களையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.

முதலில் குழந்தையின்மை என்பது தனி மனித பிரச்சனை இல்லை, சமூகம் சார்ந்த பிரச்சனை. ஆனால், நம்மை சுற்றியிருப்பவர்கள் அதைப் பற்றி பேசி பேசியே அதை தனி மனிதப் பிரச்சனையாக உருமாற்றி, சம்மந்தப்பட்டவர்கள் மனதளவில் உடைந்துபோக செய்துவிடுகிறார்கள்.

அப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளும் நாயகன், நாயகி வாழ்க்கையை மையமாக வைத்துக் கொண்டு, குழந்தையின்மை பிரச்சனையையும் அதைச் சார்ந்த சில சம்பவங்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

ந்தப் படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கிறது. வெப்பமும், குளிரிரும் சரிவிகிதமாக இணைந்தால்தான் மழை வரும். அதேபோல் ஆணும், பெண்ணும் இயற்கையாக இணைந்தால்தான் குழந்தை உண்டாகும் என்ற கருத்தை முன் வைக்கிறது இத்திரைப்படம்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிடுதிக்கோட்டை என்ற கிராமம்தான் படத்தின் கதைக் களம்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் திரவ் மாடுகளுக்கு செயற்கை முறை கருத்தரித்தலுக்கு, சினை ஊசி போடும் வேலையைச் செய்து வருகிறார். இவருக்கு இஸ்மத் பானுவுடன் திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தாலும், தம்பதிகள் இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால், ஊராரின் தொடர்ந்த குத்தல், நக்கல், நையாண்டி பேச்சுக்கள் இவர்களை பெரிதும் காயப்படுத்தி வருகிறது. இஸ்மத் பானுவின் மாமியாரான ரமா, எல்லாருக்கும் மேலாக தனது மகனுக்கு தனது பேத்தியை இரண்டாம்தாரமாக திருமணம் செய்து வைக்கவும் முயல்கிறார்.

ஊராரின் கேலிப் பேச்சுக்களும், இன்னொரு திருமண விஷயமும் இத்தம்பதிகளிடையே மனக் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. ஏதாவது செய்து பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க இருவரும் விரும்புகின்றனர்.

இதனால் ஊராருக்கும், வீட்டாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குச் செல்கின்றனர் தம்பதியினர். அங்கே பரிசோதனை செய்த்தில் திரவுக்கு குறைபாடு இருப்பது தெரிய வருகிறது. ஆனாலும், வீட்டில் மாமியாரின் குத்தல் பேச்சுக்கள் தாங்காமல் கணவருக்குத் தெரியாமல் விந்தனு தானம் மூலமாக கருவுறுகிறார் நாயகி இஸ்மத்.

ஆண் குழந்தை பிறக்கிறது. பையன் வளர்ந்து 5 வயதான பின்பு ஒரு நாள் தனது கணவரிடம் உண்மையை சொல்லிவிடுகிறாள் நாயகி. இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் கணவன்.

இது தம்பதிகளிடையே பிரிவையும், பிளவையும் உண்டாக்குகிறது. இதன் பின் என்ன நடக்கிறது..? தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்தார்களா..? அல்லது பிரிந்தார்களா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிடுதிக்கோட்டை என்ற ஊர்தான் இந்தப் படத்தின் கதைக் களம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த ஊருக்குள்ளேயே படமாக்கப்பட்டிருக்கிறது.

ஆணாதிக்கத்தன்மை கொண்ட கிராமத்துக் கதாப்பாத்திரத்தில் பொருத்தமான தோற்றத்துடன் அழகாக, இயல்பாக நடித்திருக்கிறார் பெத்தபெருமாளான நாயகன் திரவ். மனைவியுடனான கூடலிலும், ஊடலிலும்கூட தனது ஆண் என்ற திமிரை நைச்சியமாகக் காட்டி தனது கேரக்டரை வலுவாக செய்திருக்கிறார்.

குழந்தையின்மையை சுட்டிக் காட்டி சண்டைக்கும் இழுக்கும் ஊர்க்கார இளைஞர்களுடன் மல்லுக் கட்டுவதும், மனைவியின் மன வலியைப் புரிந்து கொள்ளாமல் தனது ஆண் என்ற பெருமித எண்ணத்தை மட்டுமே மனதில் வைத்துப் பேசும் நேரங்களில் பார்வையளர்களின் கோபத்தையும் சம்பாதிக்கிறார்.

மனைவியின் வற்புறுத்தலினால் மருத்துவமனைக்கு வந்தாலும் அங்கேயும் தனது ஆண் என்ற ஈகோவினால் மனைவியை முதலில் அனுப்பிவிட்டு பின்பு மெதுவாக உள்ளே செல்லும் காட்சிகளில் அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இறுதியில் இவர் மனம் மாறும் காட்சியில் “அப்பாடா.. ஆளை விடுங்கடா சாமி” என்று நம்மைப் பெருமூச்சுவிடவும் வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

நாயகி பாண்டி’யாக நடித்தியிருக்கும் இஸ்மத் பானு படம் முழுவதும் நடித்துத் தள்ளியிருக்கிறார். கருத்த முகம் என்றாலும் களையான முகம். தன்னுடைய முகத்தாலேயே பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கணவருடனான ஊடல், கூடல் காட்சிகளிலும், மாமியார் ரமாவுடன் சண்டையிடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் “நான் மலடியா.. நான் மலடியா…” என்று கத்திக் கூப்பாடு போடும் காட்சியில் நடிப்பின் உச்சத்துக்கே போய்விட்டார்.

மாமியாராக நடித்திருக்கும் ரமா ‘மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு தனது அழுத்தமான நடிப்பை இந்தப் படத்தில்தான் காண்பித்திருக்கிறார். மருமகளை அவ்வப்போது குத்திக் காட்டிக் கொண்டேயிருக்கும் சாடிஸ்ட் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

“நான் மலடியா..?” என்று மருமகள் கத்திக் கூப்பாடுபோடும் காட்சியில் தனது மகன் பற்றிய உண்மையை குறிப்பால் உணர்ந்ததை தன் முகத்தில் காட்டி அந்தக் காட்சிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் ரமா. அதேபோல் கடைசியில் பேரன் பற்றிய உண்மை தெரிந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “போகப் போகப் புரிஞ்சுக்குவான்” என்று கூலாகும் காட்சியில் அனைவருக்கும் பிடித்துப் போகிறார் ரமா.

ஊருக்குள் அவ்வப்போது அலம்பல் செய்து வரும் பெரிசாக எம்.எஸ்.பாஸ்கர் இன்னொரு பக்கம் தன் பங்குக்கு சிறிது நேரம் சிரிக்க வைக்கிறார். மேலும், மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் கார்த்திகேயனும் சிறப்புதான். படத்தில் நடித்திருக்கும் ஏனைய கிராமத்துக் கதாப்பாத்திரங்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் மண் வாசம் வீசுகிறது. சங்கரின் இசையில் பாடல் வரிகளும், இசையும் சிறப்பு. பாடல்களை படமாக்கியவிதமும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் திரவ்தான் இந்தப் படத்திற்கு பாடல்களை எழுதி, படத் தொகுப்பும் செய்து, படத்தையும் தயாரித்திருக்கிறார்.

சிவகங்கை வட்டாரப் பகுதியின் பேச்சு வழக்கையும், பேசும் விதத்தையும் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள் நடிகர், நடிகைகள்.

கிராமத்து பின்னணியில் தற்போதைய சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தினை, மிக, மிக எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. ஆனால் இது போன்ற சென்சிட்டிவ் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது உண்மையையும், சரியான வழிமுறையையும்தான் சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் அது அரைகுறையாகப் போய்விடும்.

விந்தனு தானம் மூலமாகத்தான் இந்தப் பையன் பிறந்திருக்கிறான் என்பதை வசனத்தின் மூலமாக இயக்குநர் வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டும். அதேபோல் விந்தனு தானம் என்றாலும் சட்டப்படி கணவன், மனைவி இருவரின் ஒப்புதல் இன்றி அதைச் செய்யவும் முடியாது. அப்படி பார்த்தால் இஸ்மத் செய்திருப்பது அந்த மருத்துவமனையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. வாய்ப்பே இல்லாத ஒரு விஷயத்தை நடந்ததாகக் காட்டியிருப்பது சரியா இயக்குநரே..!?

குழந்தையின்மை பிரச்சினையை அப்படியே மேலோட்டமாக பேசிவிட்டுப் போவதும் இந்தப் படம் செய்திருக்கும் ஒரு மிகப் பெரிய குறை. மாமியாரே “ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வாங்க…” என்று சொல்வதைவிட்டுவிட்டு “இரண்டாம் கல்யாணம் செய்து கொள்” என்கிறார். படத்தில் நாயகியே ஒரு கட்டத்தில் இதைத்தான் சொல்கிறார்.

அட்லீஸ்ட் சிகிச்சையளிக்கும் அந்த மருத்துவராவது குழந்தையின்மை பிரச்சினையை வெளிப்படையாகப் பேசி, அதற்கான தற்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளையும், தீர்வுகளையும் சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் நிச்சயமாக இந்தப் படம் ஒரு தீர்வைச் சொல்ல வந்த படம் என்று உறுதியாக அடித்துச் சொல்லியிருக்கலாம்.

இதைச் செய்யாததால் இந்தப் படம் இந்தப் பிரச்சினையை அரைகுறையாய் கையாண்டு மீண்டும், மீண்டும் கிராமத்து மக்களின் மூடத்தனத்தை முன் வைக்கும் படமாக மட்டுமே வந்திருக்கிறது என்று அடித்துச் சொல்கிறோம்..!

வெப்பம் குளிர் மழை – அரைகுறை வைத்தியம்!

RATING : 3 / 5

Our Score