full screen background image

நேற்று இந்த நேரம் – திரைப்பட விமர்சனம்

நேற்று இந்த நேரம் – திரைப்பட விமர்சனம்

கிளாப்இன் ஃபில்மோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் குமார் தயாரித்துள்ள திரைப்படம் நேற்று இந்த நேரம்’.

பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கெவின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பு பணிகளை என்.கோவிந்த் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவிஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் இணைந்து எழுதியுள்ளனர். கே.ஆர்.சாய் ரோஷன் இயக்கியுள்ளார்.

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம், திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.

ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். தங்களது 3 வருட காதலைக் கொண்டாடுவதற்காக தங்களது நண்பர்களுடன் ஊட்டிக்கு செல்கிறார்கள். ஆனால், போன இடத்தில் அவர்களிடையே சில மோதல்கள் ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஷாரிக் ஹாசன் மர்மமான முறையில் காணாமல் போகிறார். ஷாரிக் ஹாசனின் நெருங்கிய நண்பர் போலீஸில் புகார் கொடுக்கிறார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வரும்போது புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.

காணாமல் போன இந்த இருவரைக் குறித்தும் மற்ற நண்பர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்துகிறார்கள். அங்கே என்ன நடந்தது.? யார், யாருக்கு யார் மீது எதனால் கோபம்..? என்னென்ன பிரச்சினைகள் நடந்தன?.. என்பதைப் பற்றி  நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததை அவரவர் கோணத்தில் போலீஸில் சொல்கின்றனர்.

கடைசியில் என்னவாகிறது.. காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா..? இல்லையா?.. என்பதுதான் இந்த ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் திரைக்கதை.

ஷாரிக் ஹாசன், வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றத்திற்கு இந்த கிரைம், குணாதிசயம் கலந்த நடிப்பு பொருத்தமாகவே இருக்கிறது.

அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக நடித்திருக்கும் நாயகி ஹரிதா இவரது நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த் என்று அனைவருக்குமே ஒரே மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் கொடுக்கப்பட்டிருப்பதால் அனைவரும் ஒன்று போலவே தங்களுக்கு வந்ததை, காட்டியதை, தோன்றியதையே தங்களது நடிப்பாகக் காட்டியிருக்கிறார்கள்.

படம் முழுக்க, முழுக்க ஊட்டியில் படமாக்கியிருந்தாலும் ஊட்டியின் விஷூவல்ஸூம், அழகும், கம்பீரமும், ஒரு காட்சியில்கூட பதிவாகவில்லை என்பது வருத்தமான விஷயம்.

கெவினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒலித்திருக்கிறதாம். படம் முடிந்ததும் அப்படியா என்று கேட்கத் தோன்றுகிறது. படத் தொகுப்பாளர் ஒரே காட்சியை திரும்பத் திரும்ப வெட்டித் தொகுத்தது போலவே தெரிகிறது.

பட்ஜெட் படம் என்பதால் ஒரு வீட்டுக்குள்ளேயே மொத்தப் படத்தையும் முடித்திருப்பதால் நமக்கு அலுப்பு மேல் அலுப்பாய் வருகிறது. விசாரணை நடத்தும் அதிகாரியும், அவருக்குத் துணையாய் வந்திருக்கும் ஏட்டுவும் கடைசிவரைக்கும் டெம்ப்ளேட்டாய் சில டயலாக்குகளை திரும்பத் திரும்ப பேசுவதும் நம்மை ரொம்பவே சோதித்துவிட்டது.

நான் லீனியர் முறையில் நடந்தவொரு சம்பவத்தினை, அவரவர் பார்வையில் சொல்வது என்பது சுவாரஸ்யமாக திரைக்கதையில் விரிய வேண்டும். ஆனால் இதில் எல்லாருமே ஒன்று போலவே கதையைச் சொல்வதும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததும் நமக்கு சோர்வினை ஏற்படுத்துகிறது. ஒரே காட்சியை மறுபடியும், மறுபடியும் பார்ப்பது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் கதையை திசை திருப்புவதற்காக திணிக்கப்பட்டிருக்கும் அந்த சைக்கோ கொலையாளியின் காட்சிகள் எந்தவிதத்திலும் நம்மை பயமுறுத்தவில்லை. ஆனால், கிளைமாக்ஸில் வரும் அந்த திடீர் விஸிட் சற்று சுவராஸ்யத்தைக் கொடுக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குதலில் இருக்கும் போதாமை படத்தில் பட்டவர்த்தனமாய் தெரிவதால் இந்த இயக்குநர் இன்னமும் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்..!

மொத்தத்தில் இந்த ‘நேற்று இந்த நேரம்’ மிகப் பெரிய ஏமாற்றம்தான்..!

RATING : 2 / 5

Our Score