full screen background image

குழந்தையின்மை பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம்

குழந்தையின்மை பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம்

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. அந்த வகையில் ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான திரவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெப்பம் குளிர் மழை’.

படத்தின் தயாரிப்பாளரான திரவ், இந்தப் படத்தின் சிக்கலான முதன்மை கதாபாத்திரமான ‘பெத்த பெருமாளாக’ நடித்திருக்கிறார். ‘அசுரன்’, ‘பொம்மை நாயகி’ படத்தில் நடித்திருந்த இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனது தனித்துவமான உடல் மொழியோடு கோபமான மாமியார் பாத்திரத்தில் ரமா நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஷங்கர் ரங்கராஜன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரவ் படத்தொகுப்பு செய்ய, ஆனந்த், திரவ், அருண் ஆகியோர் ஒலி வடிமைப்பு பணியை செய்துள்ளனர். ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, திரவ் பாடல்கள் எழுதியுள்ளார். 

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘சுழல்’ வெப் சீரிஸில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து, இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது. அதில் உருவாகும் சமூக தாக்கங்கள் மனம், உடல் ரீதியாக உறுதியற்ற தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்பதைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

இப்படத்தின் மையக் கரு மனித உணர்வுகளின் நுணுக்கங்களையும், இருப்பின் அடிப்படைத் தன்மையையும் ஆராய்வதோடு, சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக நெருக்கடியாக உருவாகியுள்ள குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல் பற்றிய அழுத்தமான சிக்கலையும் கையாண்டுள்ளது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து பேசும்போது, “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிடுதிக்கோட்டை என்ற கிராமம்தான் படத்தின் கதைக் களம். இத்தலைப்புக்கும், கதைக்கும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கிறது.

இது குழந்தையின்மையை பற்றி பேசும் படம். இன்றைய 21-ம் நூற்றாண்டில் விஞ்ஞான ரீதியாக நாம் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும் உயிர், பிறப்பு பற்றிய அறிவியல் பார்வை மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. அதை ஒரு குடும்பத்தின் வழியாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

குழந்தையின்மை இப்போதைய சமூகத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு பிரச்சனையே இல்லை. அது ஒரு விளைவு. ஆணும், பெண்ணும் இணைவதால் ஏற்படக் கூடிய விளைவு.

அது நடப்பது நம் கையில் இல்லை என்ற போதிலும் அதை மிகப் பெரிய பிரச்சனையாக இந்த சமூகம் பார்க்கிறது. அது ஏன் என்ற கேள்விதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தின் டிரைலரில் இடம் பெறும் கணவன் – மனைவி இடையிலான பிரச்சனை எப்படி உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியதோ, அதுபோல் இத்திரைப்படமும் பல கேள்விகளையும், விவாதங்களையும் நமக்குள் ஏற்படுத்தும்…” என்றார்.

படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான திரவ் இத்திரைப்படம் குறித்து பேசும்போது, “நான் ஏற்கனவே கிஷோர் சாரை வைத்து ‘மெல்லிசை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அந்த படத்தின் வெளியீட்டுக்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான், இந்தக் கதை என்னிடம் வந்தது.

கதை நன்றாக இருந்ததோடு, நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்தியது. குறிப்பாக என் உறவினர்களில் சிலர் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டார்கள். அதனால் இந்தப் படத்திற்கு உதவி செய்ய முன் வந்தேன்.

அதன்படி படத்திற்காக இரண்டு ஹீரோக்களை நான் சிபாரிசு செய்து, அவர்களிடம் கதை சொல்ல வைத்தேன். அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், அவர்களுடைய தேதி சரியாக அமையாததால் அவர்களால் பண்ண முடியவில்லை.

பிறகு படத்தை நானே தயாரிக்க முடிவு செய்து, அப்போதும் ஹீரோக்களை தேடிக் கொண்டிருந்தபோது அதுவும் சரியாக அமையவில்லை. அப்போதுதான் இயக்குநரிடம் நான் நடிக்கட்டுமா? என்று கேட்டேன். ஆனால், அவர் தயங்கினார்.

உடனே படம் தொடர்பான இரண்டு காட்சிகளை நடித்து குறும் படமாக எடுத்து அவருக்கு அனுப்பினேன். அதை பார்த்த பின்புதான் அவர் சம்மதம் தெரிவித்தார். நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரிக்கவில்லை, படத்தின்  கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று என்பதால்தான் தயாரிக்க முன் வந்தேன்.

முதலில் குழந்தையின்மை என்பது தனி மனித பிரச்சனை இல்லை, சமூகம் சார்ந்த பிரச்சனை. ஆனால், நம்மை சுற்றியிருப்பவர்கள் அதைப் பற்றி பேசி பேசியே அதை தனி மனிதப் பிரச்சனையாக உருமாற்றி, சம்மந்தப்பட்டவர்கள் மனதளவில் உடைந்துபோக செய்துவிடுகிறார்கள்.

அப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளும் நாயகன், நாயகி வாழ்க்கையை மையமாக வைத்துக் கொண்டு, குழந்தையின்மை பிரச்சனையையும் அதைச் சார்ந்த சில சம்பவங்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் மக்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

 நாயகி இஸ்மத் பானு தன் அனுபவத்தை கூறுகையில், “நான் மீடியா தொடர்பாக படித்துவிட்டு, மீடியாவில்தான் பணி புரிந்தேன். பிறகு திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினேன். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தாலும் பாண்டி என்ற கதாபாத்திரமாகத்தான் நடித்திருக்கிறேன்.

என்னை ஒப்பந்தம் செய்யும்போதே, “கணவன் – மனைவி இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கும். அதில் நடிக்க சம்மதமா?..” என்று கேட்டார்கள். “நெருக்கம்” என்றதும் வேறுவிதமாக நினைக்க வேண்டாம். தம்பதிக்குள் இருக்கும் அந்நியோன்யம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலிலேயே அதை சொல்லிவிட்டார்கள். அதன்படி, நானும் பாண்டி என்ற அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

தொடர்ந்து இப்படி நாயகியாகத்தான் நடிப்பேன் என்றில்லை. நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை…” என்றார்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பேயே படப்பிடிப்பு நடத்திய கிராமத்துக்கு சென்று, அந்த மக்களுடன் பழக் தொடங்கிய இப்படத்தின் நட்சத்திரங்களோடு சேர்ந்து கிராமத்து மக்கள் பலரும் நடித்திருக்கிறார்களாம்.

குறிப்பாக இயக்குநரின் அம்மா, சகோதரி  என்று அவரது உறவினர்கள் சிலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்களாம். “ஆனால், அவர்களுடைய நடிப்பை பார்க்கும்போது, இது அவர்களுக்கு முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியாத வகையில் இருக்கும்…”  என்று தெரிவித்த படக் குழுவினர், “இந்த ‘மழை குளிர் வெப்பம்’ படம் நிச்சயம் மக்களுக்கான படமாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்கள்.

Our Score