சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3’.
இந்தப் படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார் நடிகர் ரோஷன். ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷிதா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகிஸ்த்வா, வம்சி கிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து, ஆர்.என்.ஆர்.மனோகர், அணு கிருஷ்ணன், ரிஷா, செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெ.ஸ்ரீதர், இசை – ஷ்யாம் நம்பூதிரி, பாடல்கள் – யுகபாரதி, கதிர்மொழி, முருகேஷ் பாரதி, படத் தொகுப்பு – டி.எஸ். ஜெய், வசனம் – பி. வெங்கட சுந்தரம், கலை – எம்.ஜி. முருகன், நடனம் – ராதிகா, சண்டை பயிற்சி – ஆர். சக்தி சரவணன், தயாரிப்பு – சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ், தயாரிப்பாளர்கள் – ரோஷன் மற்றும் ஜி.ஸ்ரீநிவாசன், கதை, திரைக்கதை, இயக்கம் – முருகேஷ் பாரதி.
படம் பற்றி நாயகன் ரோஷன் பேசும்போது, “இந்த படம் ஒரு புரட்சிகரமான கருத்தைச் சொல்லும் படம். பொய் பேசுபவர்கள் யாரும் அப்படி பேசுவது பிடித்துப் போய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள்.
அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசக் கூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது.
மாபெரும் புரட்சியாளன் சேகுவேரா, செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக பிறந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும். இதுதான் எங்கள் படத்தின் கதையின் களம். நான்தான் சேகுவேரா என்ற புரட்சிக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
படத்தில் நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மைக் செட் போடும்போது சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த பிரச்சனைகளின் மூலம்தான் கதை சூடு பிடிக்கும். படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல், சூப்பர் ஸ்டார் ரஜினிவரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம்.
இந்தப் படத்துக்காக நான் 250 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். படத்தை இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில்தான் அதிகம் படம் பிடித்துள்ளோம். இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது..” என்றார்.