full screen background image

கெளதம் மேனன்-சிம்பு இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம்

கெளதம் மேனன்-சிம்பு இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம்

நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது இணையும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும், இருவரும் இந்தப் படத்தில்தான் இணைந்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சற்று முன்னர் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சிம்பு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

சிம்பு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அழுக்கு சட்டை, கைலி கட்டியபடி கையில் ஒரு சொரட்டு கோல் வைத்துள்ளார். மேலும் அவர் நிற்கும் இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை கெளதம் மேனன் இயக்கிய படங்களில் இருந்து இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகத் தெரிகிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 
Our Score