full screen background image

இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது..!

இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது..!

தமிழ்ச் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ஷங்கருக்கு தமிழகத்தின் புகழ் பெற்ற தனியார் பல்கலைக் கழகமான வேல்ஸ் பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து வேல்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், “சினிமா என்பது பல கலைத் துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம். இப்படிப்பட்ட துறைக்கு பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞனைத்தான் இன்று நாம் போற்றுகிறோம்.
 
கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இயக்குநர் ஷங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களுக்கு கதை  எழுதத் தொடங்கினார். கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார், இவரின் திறமை இவரை தனித்து அடையாளப்படுத்தி பல கை தட்டல்களையும் விருதுகளையும் கொண்டு வந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது.

பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சி பெற்றார். இவரின் திறமை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. அவர் ஷங்கரை தன் உதவியாளராக அழைத்துக் கொண்டார்.

1986 – 87-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தன்னுடைய சொந்த முயற்சியில் சிறு, சிறு விளம்பரப் படங்களை எடுத்து திரை இயக்குநரானார், 1993-ல் வெளியான ‘ஜென்டில்மேன்’, என்ற திரைப்படம் இயக்குநர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிப்படுத்தியது.

தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய அனைத்துத் திரைப்படங்களும் வணிக ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய் என இன்றைய திரை உலகின் சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைத்து அதில் வெற்றிமேல் வெற்றி சூடியவர் இயக்குநர் ஷங்கர்.

இவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.
 
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன் மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டப் பெருமித இயக்குநர் இவர்தான்.  எப்போதும் தமது இரண்டு கால்களையும், தரையில் ஊன்றி பறக்க நினைக்கும் கலைஞன் இவர்.

தயாரிப்பாளராகயும் பரிமாணங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது…” என்று குறிப்பிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் ஸாருக்கு தமிழ்சினிடாக் இணையத்தளம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Our Score