‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ – சினிமா விமர்சனம்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ – சினிமா விமர்சனம்

தியேட்டருக்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவது மட்டுமே இந்தப் படத்தின் நோக்கம் என்று ஒரு இயக்குநர் தீர்மானித்துவிட்டால் அதில் உறுதியுடன் இருந்துவிட வேண்டும். சிரிக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதையெல்லாம் லாஜிக் மீறல்கள் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையேபடாமல் எடுத்துக் கொடுக்க ஒரு தைரியம் வேண்டும். இயக்குநர் எழிலுக்கு அது வாய்த்திருக்கிறது.

‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளைக்கார துரை’ என்ற வரிசையில் தனது அடுத்தப் படைப்பையும் வெற்றிகரமாக நகைச்சுவை தர்பாரோடு கொணர்ந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கிருஷ்ணாபுரத்தில் வேலை வெட்டி இல்லாத ஆள் நம்ம ஹீரோ முருகன் என்ற விஷ்ணு விஷால். அந்த ஊர் எம்.எல்.ஏ.வான ஜாக்கெட் ஜானகிராமன் என்னும் ரோபோ சங்கரிடம் எடுபிடி வேலை செய்கிறார். ரோபோ சங்கர்  மாவட்ட மந்திரிக்கு இப்போது நெருக்கமானவர். இதனால் மந்திரியிடம் முன்பு நெருக்கமாக இருந்த அதே மாவட்டத்து இன்னொரு எம்.எல்.ஏ.வான நரேனுக்கு ரோபோ சங்கர் மீது கோபம். மந்திரியின் மச்சானான ரவி மரியா, அரசியல் வாரிசாக யார் வேண்டுமானலும் இருந்துவிட்டு போங்கள். ஆனால் அமைச்சரின் சொத்துக்கு நான் மட்டுமே வாரிசு என்கிற நினைப்பில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் மந்திரியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டி 25 இளம் ஜோடிகளுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார் எம்.எல்.ஏ. ரோபா சங்கர். இந்தக் கல்யாண நிகழ்வை கெடுக்க நினைக்கும் நரேன், தனது ஆட்களை வைத்து முந்தைய நாள் இரவிலேயே சில மாப்பிள்ளைகளை கடத்திப் போய்விடுகிறார்.

நள்ளிரவில் இது தெரிந்தவுடன் களத்தில் குதிக்கும் நமது ஹீரோ விஷ்ணு விஷால் இடைப்பட்ட நேரத்திற்குள்ளாக மாப்பிள்ளைகளை செட் செய்து கல்யாண மேடையில் நிறுத்துகிறார்.

தனது அம்சமான மாமன் பொண்ணு அம்சவேணியை அடுத்த மாதம் கரம் பிடிக்கும் ஆசையில் பத்திரிகை அடித்து ஊரெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கும் சூரி, பத்திரிகை கொடுக்க வரும்போது விஷ்ணுவின் கண்ணில்படுகிறார்.

கடைசியான ஒரு மாப்பிள்ளை வேஷத்துக்கு சூரியை பிடித்துப் போடுகிறார் விஷ்ணு. ஒரு பவுன் மோதிரம் கிடைக்குமே என்பதால் சூரியும் இதற்கு ஒத்துக் கொள்கிறார். புஷ்பா என்கிற அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலியும் கட்டிவிடுகிறார்.

அன்று மாலையே இது புகைப்படமாக பேப்பரில் வெளியாக அம்சவேணியின் வீட்டில் பூகம்பம் வெடிக்கிறது.. இதுவொரு செட்டப்புதான் என்பதை அம்சவேணியிடம் சொல்லியும் அவள் கேட்க மறுத்து புஷ்பாவுடனான உறவுக்கு விடை கொடுத்துவிட்டு விவகாரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டு வந்தால்தான் நமக்கு கல்யாணம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்கிறார்.

இன்னொரு பக்கம் அதே ஊரில் ஹோட்டல் நடத்தும் ஞானவேலுவின் மகளான ஹீரோயின் நிக்கி கல்ரானியுடன் அறிமுகக் காட்சியிலேயே மோதி விடுகிறார் விஷ்ணு. ஆனாலும் நிக்கியின் அசத்தும் அழகை பார்த்தவுடன் விஷ்ணு அம்பேலாகி நிக்கியின் பின்னாலேயே காதல் பித்துப் பிடித்து லோ லோவென்று அலைகிறார்.

நிக்கி போலீஸ் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று குறியாக இருப்பதால், ஞானவேலு தனது மகளுக்காக 10 லட்சம் ரூபாயை விஷ்ணுவிடம் கொடுத்து எம்.எல்.ஏ. ரோபா சங்கரிடம் சொல்லி நிக்கிக்கு சப் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தரும்படி சொல்கிறார்.

விஷ்ணுவும் 10 லட்சம் ரூபாயை ரோபாவிடம் கொடுக்க. அன்றைக்கு பார்த்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மந்திரியைப் பார்க்க அவசரமாக செல்கிறார் ரோபோ சங்கர். அப்போது 500 கோடி ரூபாயை முறைகேடாக சேர்த்து பதுக்கி வைத்திருக்கும் இடத்தை ரோபாவிடம் சொல்லிவிட்டு மந்திரி இறந்து போகிறார்.

பணம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்ட ரோபோ சங்கர் வேகமாக வெளியேற.. அவரை காரில் துரத்துகிறார்கள் ரவி மரியாவும் அவர் ஆட்களும். வழியில் ரோபோவின் கார் விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்து 10 வயது பையனை போலாகிறார் ரோபோ.

இதற்கிடையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை நிக்கி கல்ரானிக்கு தானாகவே வந்து சேர்கிறது. இதைத் தெரிந்து கொண்ட நிக்கி தன் அப்பா கொடுத்த 10 லட்சத்தை கேட்டு விஷ்ணுவை டார்ச்சர் செய்ய..

இன்னொரு பக்கம் குழந்தை மனதுடன் இருக்கும் ரோபோ சங்கரிடமிருந்து 500 கோடி இருக்குமிடத்தை அறிந்து கொள்ள ரவி மரியா கோஷ்டியும் முயற்சி செய்ய..

இதில் எது நடந்தது என்பதை தயவு செய்து தியேட்டருக்கு சென்று சிரிப்பலைகளுக்கு நடுவில் நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்..!

சூரி, ரவி மரியா, ரோபோ சங்கர் இந்த மூவருக்குமிடையில் யார் காமெடியனாக நடிப்பது என்பதில் போட்டியே நடந்திருக்கிறது. இந்த மூவரின் டன், டன்னான நடிப்பில் தியேட்டரில் சற்றும் இடைவெளியே இல்லாமல் சிரிப்பலைகள் துள்ளி வருகின்றன.

நிச்சயம் சூரி இந்தப் படத்தில் ஹீரோ விஷ்ணு விஷாலை காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். “புஷ்பா புருஷன் நீங்கதானா..?” என்கிற இந்தக் கேளவி தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய டிரெண்ட்டை நிச்சயம் ஏற்படுத்தும். சூரிக்கு வாழ்நாள் முழுவதும் பெயர் சொல்லும் படம் இது என்று உறுதியாகச் சொல்லலாம்.

விவகாரத்து பத்திரத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டே அதற்காக அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கும் அவரைப் பார்த்தாலே குபீர் சிரிப்பு வருகிறது. “புஷ்பாவோட புருஷன்தான நீங்க..?” என்று கடைசியாக புரோகிதர்வரையிலும் அவரைக் கேட்கும்போதும் எத்தனை முறை கேட்டும் சலிக்காமல் சிரிப்பு வருகிறதெனில் சிறந்த இயக்கம் என்று அடித்துச் சொல்லலாம். இதேபோல், “அண்ணே நீ வயசுக்கு வந்துட்டண்ணே..” என்று சூரி சொல்லும் அந்த ஒரு டயலாக்கிற்கு தியேட்டரே அதிர்கிறது.

பிற்பாதியில் ரோபோ சங்கரை கடத்தி வைத்துக் கொண்டு ரவி மரியா டீம் படும்பாடு வயற்று வலி வரும் அளவுக்கு சிரிப்பைக் கொடுக்கிறது. அதிலும் ரவி மரியாவின் ஆக்சன்கள்.. ஒவ்வொரு சீன் இடைவெளியிலும் அவர் காட்டும் மேனரிசம் அனைத்துமே கச்சிதம்.. எவ்வளவு பெரிய சிடுமூஞ்சியாக இருந்தாலும் நிச்சயம் இந்தக் காட்சியில் சிரித்துவிடுவார்கள்.

கிளைமாக்ஸில் வரும் மொட்டை ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்றும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்டு. இந்த டிவிஸ்ட்டோடு இருக்கும் பாடல் காட்சியும் தொடர்ந்த கிளைமாக்ஸும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

“அம்மா இங்கே வா.. வா.. ஆசை முத்தம் தா.. தா..” என்று பாடுவதில் துவங்கி “காலைல 6 மணிக்கு எந்திரிச்சன்னா..” என்று ஆரம்பிக்கும் ரோபோ சங்கரின் அந்த நடிப்பு வெகு யதார்த்தம்.. எத்தனை நிகழ்ச்சிகளில் நடித்து, நடித்து பண்பட்ட அனுபவம் பெற்றிருக்கும் ரோபோ சங்கருக்கு, இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்.

ஹீரோயின் நிக்கி கல்ரானிக்கு போலீஸ் டிரெஸ்ஸுதான் பொருத்தமாக இல்லை. கம்பீரமாக இருக்க வேண்டிய தோற்றம் சாதாவாக இருப்பது ஒன்றுதான் இடறல். ஆனாலும் பாப்பா நடிப்பில் மிச்சம் வைக்கவில்லை. ‘பப்பரமிட்டாய்’ பாடல் காட்சியில் கிளாமர் சற்று தூக்கலாக இருக்கிறது. இருந்தும் அழகு இருப்பதால் தன்னையே ரசிக்க வைத்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணுவின் தைரியத்திற்கு ஒரு பாராட்டு.. ஒரு ஷொட்டு. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து தானே தயாரித்திருக்கிறார். அந்தத் தைரியத்திற்கு இந்தப் படத்தின் ரிசல்ட் கொடுத்திருப்பதுதான் பரிசு.

காமெடி படம் என்பதால் பெரிதாக மெனக்கெடாமல் நடித்திருக்கிறார் விஷ்ணு. ‘பரதேசி’ போல ஒரு படம் கிடைத்தால் மட்டுமே இவரை போன்றவர்கள் வெரைட்டியாக நடித்து திறமையைக் காட்ட முடியும். இல்லாவிடில் இது போன்ற வெற்றிப் படங்களில் ஹீரோவாக தலையைக் காட்டிய பெருமையுடன், அடுத்தடுத்த படங்களுக்கு ஓட வேண்டியதுதான்.!

சக்தியின் ஒளிப்பதிவும், சத்யாவின் இசையும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு பங்கு பெற்றிருக்கின்றன. பாடல் காட்சிகளில் கேமிராவின் வேலை அபாரம் என்றால் இறுதிக் காட்சியிலும், பேய் தொடர்பான காட்சிகளிலும் பின்னணி இசை நயம்.. பாடலில் ‘பப்பரமிட்டாயும்’, ‘ஆரவல்லி சூரவல்லி’யும் கேட்கும் ரகம்.

படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் படத்தின் வசனங்கள்தான். குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கும் வசனங்களை எழுதியிருக்கும் எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தனுக்கு நமது வாழ்த்துகள். கதையை மட்டுமே தான் எழுதி, திரைக்கதை, வசனத்திற்கு அரவிந்தனை பயன்படுத்தி படத்தையும் வெற்றி பெற வைத்திருக்கும் இயக்குநர் எழிலின் இந்த விட்டுக் கொடுத்தலை தமிழ்ச் சினிமாவுலக புதிய இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாத் திறமையும் ஒருங்கே ஒருத்தனுக்கே கிடைக்கவில்லை. வேறு, வேறு திறமைசாலிகளை ஒருங்கிணைத்து படமாக்கினால் படத்தின் தரம் உயர்ந்து வெற்றியைத் தொடும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம்.

நகைச்சுவை படங்களை இயக்குவது மிக கடினம். ஏனெனில் நகைச்சுவையை திரைக்கதையிலும், இயக்கத்திலும் கொண்டு வருவதற்கெல்லாம் தனி திறமை வேண்டும். இந்த்த் திறமை இயக்குநர் எழிலுக்கு வாய்த்திருக்கிறது. இனி வரும் படங்களிலும் இவர் இது போன்ற வெற்றிகளைக் கொடுத்தால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை நிச்சயம் உயரும்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ அவசியம் பார்த்து சிரிக்க வேண்டிய படம்..!

Our Score