full screen background image

“ரஜினியை இயக்கும் அளவுக்குத் திறமையுள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி..!” – நடிகை ஊர்வசி பாராட்டு..!

“ரஜினியை இயக்கும் அளவுக்குத் திறமையுள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி..!” – நடிகை ஊர்வசி பாராட்டு..!

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் திரைப்படம் வீட்ல விசேஷம்.’

பிளாக் பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். RJ.பாலாஜி – N.J.சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ‘ஆடியோ விஷேசம்’ என்ற பெயரில் நேற்று மாலை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், ஆர்.ஜே.பாலாஜி. நடிகை ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, தயாரிப்பாளர் போனி கபூர், கவிஞர் பா.விஜய் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நடிகை அபர்ணா பாலமுரளி பேசும்போது, “இதுதான் எனது முதல் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி. நான் நடித்த முந்தைய படங்களின் வெற்றியை கொண்டாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு பாலாஜிக்கு நன்றி. சத்யராஜ் மற்றும் ஊர்வசி போன்ற பெரிய நடிகர்களுக்கு மத்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.  படத்தின் பெரிய பலமே ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் என இருவரும்தான். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்…” என்றார்.

நடிகை ஊர்வசி பேசும்போது, “என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாகவே ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. நான் பொதுவாக நான் நடித்த சினிமாவின் நிகழ்ச்சிகளுக்கே போவதில்லை. பாலாஜி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

இந்தப் படம் பல நாட்களாக தியேட்டர்களுக்கு வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரை புரிந்து கொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. பழைய சத்யராஜை இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளனர். இந்தப் படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்க வைத்துள்ளார். ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி. அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை. நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குநர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள்.“ என்றார்.

தயாரிப்பாளர் போனி கபூர் பேசும்போது, “நான் தயாரிப்பாளராக அறிமுகமானது ஒரு ரீமேக்காக உருவான படத்தில் இருந்துதான். தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை நான் இந்தியில் ரீமேக் செய்துள்ளேன்.

என் குடும்ப வாழ்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். தென்னிந்தியா என் வாழ்வில் எப்போதும் தொடர்பில் இருக்கும்.

நான் தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ் திரைப்பட கலைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க, பழக்க வழக்கங்களை கேட்டு நான் முன்பே வியந்திருக்கிறேன். இப்போது தமிழ்ப் படங்களை தயாரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் நிறைய தமிழ்ப் படங்களை தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன்.

ஶ்ரீதேவி, ஊர்வசியை பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார். நானும் அதை ஒத்துக் கொள்வேன். அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர்தான் இந்த படத்தின் முதுகெலும்பு.

பாலாஜி தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த படமாக வீட்ல விஷேசம்’ படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது…“ என்றார்.

இயக்குநர் N.J.சரவணன் பேசும்போது, “எங்களுக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்த போனி கபூர், மற்றும் ராகுலுக்கு நன்றி. இந்தி படத்தை பார்த்த பிறகு இதை தமிழில் எப்படி உருவாக்க போகிறோம் என்ற எண்ணத்தை போக்க எங்களுக்கு இருந்தவர் உறுதுணையாக இருந்தவர் ஊர்வசிதான். நான் பார்த்து வியந்த சத்யராஜ் அவர்களை இயக்கியதில் எனக்கு மகிழ்ச்சி. எங்கள் படக் குழுவினர் எங்களுக்கு பெரிய ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் பெருமைப்படும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்.“ என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “நான் ‘கட்டப்பா’ போன்ற சீரியஸ் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை இப்போது இந்தப் படத்தின் மூலமாக மீட்டு கொண்டு வந்தவர் பாலாஜிதான். இந்தப் படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த காரணம் என்ன என்று நான் பாலாஜியிடம் கேட்டபோது, “உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை” என்றார்.

ஊர்வசி மேடம் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வரம். ஊர்வசியை தவிர வேறு யாரும் இந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட முடியாது. அவருடைய நடிப்பு அவ்வளவு அபாரமானது.

அபர்ணா பாலமுரளியின் நடிப்பு சூரரை போற்று’ படத்தில் இருந்ததுபோல் சிறப்பாக இருந்தது. கே.பி.ஏ.சி.லலிதா போன்ற திறமை மிகுந்த நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது எனக்கு சவாலாய் இருந்தது.

ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இருவரின் கூட்டணி சிறந்த காம்போ. இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். இந்த படம் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகிறேன்.“ என்றார்.

படம் குறித்து RJ.பாலாஜி பேசும்போது, “நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில் நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணி புரிந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக் குழுவினர் சார்பாக நன்றிகள். தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் தல அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, இப்போது என்னையும் வைத்து படம் தயாரிப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

அவருடன் தயாரிப்பாளர் ராகுலின் உழைப்பும் அளப்பறியது. இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல்தான் எங்களை தொடர்ந்து வெற்றிகரமான இரண்டு படங்களை உருவாக்க வைத்துள்ளது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிப் பிடித்துள்ளார்.

நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகரான சத்யராஜ் சாரை இயக்கியதிலும் எனக்கு சந்தோசம்தான். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார்.

தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்தப் படத்தில் தங்களது பெரிய உழைப்பினை கொடுத்துள்ளனர். பா.விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். அவர் இப்போதுவரையிலும் என்னுடைய படங்களில் தொடர்ந்து பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட இசையை கொடுத்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை’, ‘கர்ணன்’ போன்ற படங்களின் படத் தொகுப்பாளரான செல்வா, என் படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்தப் படம் இப்படிப்பட்ட சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இந்த வீட்ல விசேஷம்’ படம் குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்…“ என்றார்.

 
Our Score