full screen background image

‘வீரமே வாகை சூடும்’ – சினிமா விமர்சனம்

‘வீரமே வாகை சூடும்’ – சினிமா விமர்சனம்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, R.N.R.மனோகர்,  பாபு ராஜ், பில்லி முரளி, ரவீனா, K.S.G.வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநரான து.ப.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.்ரீகாந்த் படத் தொகுப்பு செய்திருக்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்துள்ளார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்துள்ளார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் மூவரும் சண்டை இயக்கம் செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்திருக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்துள்ளார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார்.

ஒரு சாமான்யன் அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ள சினிமா பாணியில் வீரத்தைக் காட்டினால்தான் ஜெயிக்க முடியும் என்பதை அதே பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வெழுதி போஸ்ட்டிங்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் போரஸ்’ என்ற விஷால். இவரது தந்தையான மாரிமுத்து போலீஸ் ஏட்டு. விஷாலின் தங்கையான ரவீணா ஒரு கல்லூரி மாணவி. இவர்களது வீட்டுக்குக் கீழேயிருக்கும் ஒரு பையனும், ரவீணாவின் கல்லூரியில்தான் படித்து வருகிறான்.

விஷாலுக்கு, டிம்பிள் ஹயாதி மீது பள்ளிப் பருவத்தில் இருந்தே காதல். ஆனால் டிம்பிளின் தாய், தந்தையருக்கு இந்தக் காதல் பிடிக்கவில்லை. மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து காதலைக் கத்தரிக்க முயல்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ரசாயன ஆலையினால் அதற்கு அருகில் இருக்கும் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆலை தந்த நச்சுவினால் குமரவேலின் மகள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுகிறாள். இதனால் இந்த ஆலையை மூடும்படி கோரிக்கை விடுத்து குமரவேல் தனது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.

இந்த ஆலையை மூன்று தலைமுறையாக நடத்தி வரும் பாபுராஜ் ஆலையை மூட மறுக்கிறார். அதே சமயம் அடாவடியும் செய்ய முடியாத நிலையில் மாட்டிக் கொள்கிறார். அடுத்து வரக் கூடிய பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் அவர் நிற்கும் சூழல் இருப்பதால் எப்படியாவது சமாதானமாகி போய்விட துடிக்கிறார். ஆனால் குமரவேல் சமாதானத்திற்கு வரத் தயாராக இல்லை.

இதனால் சாம, பேத, தான, தண்ட வழிகளை செய்ய தயாராகிறார் பாபுராஜ். இந்த சதி வலையில் குமரவேல் சிக்குகிறார்.

இரண்டாவது கதையில் விஷாலின் தங்கை ரவீணாவிடம் லோக்கல் ரவுடியான மகா காந்தியின் தம்பி பல முறை ரவுடித்தனம் செய்கிறான். இதனை விஷால் கண்டித்துப் பார்த்தும் திருந்தாமல் போக ரவீணா தற்கொலைக்கு முயல்கிறார். இதனால் போலீஸ் மகா காந்தியின் தம்பி மீது வழக்குப் பதிவு செய்கிறது.

கேஸை வாபஸ் வாங்க வீடு தேடி வந்து பேசுகிறார் மகா காந்தி. விஷால் இதற்கு மறுக்க.. செருப்பைக் கழட்டி தன் தம்பியை ரவீணா மூலமாக அடிக்க வைக்கிறார் மகா காந்தி. இதனால் கோபமாகும் மகா காந்தியின் தம்பி, ரவீணாவைக் கடத்திக் கொண்டு போக திட்டம் போடுகிறான்.

மூன்றாவது கதையாக பாபுராஜின்  தம்பியும், போலீஸ் உயரதிகாரியான ஆர்.என்.ஆர்.மனோகரின் மகனும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இந்தக் கூட்டணி இவர்களது கல்லூரியில் இருக்கும் ஒரு மாணவியை படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவள் வர மறுக்கவே அவளை பலவந்தப்படுத்துகிறான். இதனால் இவளும் தற்கொலைக்கு முயல.. பாபுராஜின் தம்பி மற்றும் அவனது நண்பர்கள் மீது வழக்குப் பதிவாகிறது.

இந்த வழக்கினை வாபஸ் பெற வைக்க போலீஸ் உயரதிகாரி முயல்கிறார். இதைத் தொடர்ந்து அவரது மகன் அவமானப்படும் ஒரு செயலை அவனது தந்தையே அந்த மாணவியின் மூலமாகச் செய்ய வைக்கிறார். இதனால் அவமானப்படும் போலீஸ் அதிகாரியின் மகன் அந்தக் கல்லூரி மாணவியைக் கடத்தத் திட்டமிடுகிறான்.

இந்த மூன்று கதைகளின் முடிவுகளும் ஓரிடத்தில் சங்கமிக்க.. பல குழப்பங்கள் ஏற்படுகிறது. விஷாலின் தங்கையான ரவீணா இறக்கிறார். இதையடுத்து தனது தங்கையின் இறப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க பேயாட்டம் ஆடுகிறார் விஷால். அது எப்படி என்பதுதான் இந்த ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் கதை.

“விவேகமில்லாத வீரம் முட்டாள்தனம்” என்பார்கள். அதைத்தான் இங்கே வீரமாக்கிக் காட்டியிருக்கிறார் இயக்குநர் து.பா.சரவணன்.

விஷாலின் கட்டுடலுக்கு ஏற்ற கதாபாத்திரம். சண்டை காட்சிகளில் மிகப் பிரயத்தனப்பட்டு நடித்திருக்கிறார். மூன்று சண்டை காட்சிகளையும் மூன்று சண்டை இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். சிறப்பாக வந்திருக்கிறது. சண்டை பிரியர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.

நடிப்பென்று பார்த்தால் “தளபதி” என்று பேச்சுக்கு பேச்சு யோகிபாபுவை அழைத்துப் பேசும் அந்த டயலாக் டெலிவரியின்போது மட்டும் விஷாலின் கிண்டல் கலந்த நடிப்பு தெரிகிறது. இந்தத் ‘தளபதி’ என்ற வார்த்தைப் பிரயோகம் யாரை கிண்டலடித்து படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது விஷாலுக்கே வெளிச்சம்..!

மற்றபடி கோபம், ஆத்திரம், பாசம், அழுகையெல்லாம் அதே அளவுதான். எதுவும் அளவு கூடவும் இல்லை. குறையவும் இல்லை.

நாயகி டிம்பிள் ஹயாதிக்கு அதிகமான வேலையில்லை. ஒரேயொரு டூயட்டுடன் தனது பணியை முடித்துக் கொண்டார். பின்பு படத்தின் சோகக் காட்சிகளிலெல்லாம் விஷாலின் குடும்பத்தோடு தலையைக் காட்டியிருக்கிறார். அவ்வளவுதான்..!

அளவாகவும், அழகாகவும் நடித்திருப்பது ரவீணாதான். விஷாலின் தங்கையாக.. தனது காதல், பயம், பாசம் என்று பலவற்றையும் காண்பித்து அந்தந்தக் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு அடுத்து நடிப்பில் சிறப்பு செய்திருப்பவர் மாரிமுத்துதான்.

ஏன், எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் போலீஸ் ஸ்டேஷனில் கைதிகளை அடித்துத் துவைப்பதும், விஷாலின் இள வயது கோபத்தைக் கட்டுப்படுத்தி மகா காந்தியிடம் அமைதியாகப் பேசுவதும், கிளைமாக்ஸ் காட்சியில் பொறுத்தது போதும்.. “பொங்கியெழு மனோகரா” என்று வீர வசனம் பேசி மகனை உசுப்பேத்தி விட்டு அனுப்பி வைப்பதிலும் ஜெயித்திருக்கிறார்.

மலையாள நடிகரான பாபுராஜ் வில்லனாக ஜொலித்திருக்கிறார். அடக்கமான, அமைதியான வில்லன் பாத்திரத்திற்கு இவரையே அணுகலாம். மகா காந்தி, ஆர்.என்.ஆர்.மனோகர், துளசி என்று மற்றையவர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஒரு பலம். பாடல்களில் ஒரேயொரு பாடல் சோகத்தைக் காட்டுயிருக்கிறது. இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் பின்னணி இசைதான் நம் கண்களைத் திரையை நோக்கிப் பார்க்க வைக்கிறது.

படத் தொகுப்பாளர் கொஞ்சம் மனம் வைத்து அரை மணி நேர காட்சிகளை நீக்கியிருந்தால்கூட படம் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஏன் இத்தனை நீளத்தை அனுமதித்தார் என்று தெரியவில்லை.

தனக்குப் பெண் கொடுக்க மறுக்கும் காதலியின் வீட்டிக்குள் நுழைந்து காதலியை பிரித்து மேய்ந்ததுபோல மாமனார், மாமியாரிடம் ஆக்சனைக் காட்டிவிட்டு வீட்டுக்கு வரும் விஷால், உடனேயே தனது தங்கையைக் கிண்டல் செய்தவனைத் தூக்கிப் போட்டி மிதிப்பதெல்லாம் தவறில்லையா இயக்குநரே..? ஹீரோ செய்தால் தவறில்லை..! ஆனால், வில்லன் செய்தால் தவறா..? இந்தக் காட்சியில் லாஜிக் பல மீட்டர் தூரம் எல்லை தாண்டி ஓடியிருக்கிறது.

படத்தில் இருக்கின்ற ஒரே தவறு.. பல வருடங்களாக இங்கே பேசப்பட்டு வரும் கதையைப் பயன்படுத்தியிருப்பதுதான். ஆனால் திரைக்கதையில்தான் கொஞ்சம் புதுமையாக.. ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்பட்டு வரும் மர்மக் கதைபோல் விரிந்திருக்கிறது. இது மட்டும்தான் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைக்கிறது என்று சொன்னால் அது தவறில்லை.

இருந்தாலும் ஒரு முறை பார்க்கத் தகுந்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான து.பா.சரவணன்.

அவருக்கு நமது வாழ்த்துகள்..!

RATING : 3.5 / 5

Our Score