இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.
இந்த ‘வீர தீர சூரன்–பார்ட்-2′ திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், மாருதி பிரகாஷ்ராவ், மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே.பிரசன்னா படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி.எஸ்.பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். முன்னணி இயக்குநரான எஸ்.யூ.அருண்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
பொதுவாக ஒரு திரைப்படம் தொடர்ச்சியான பாகங்கள் எடுக்கப்படும் சூழல் வந்தால் முதல் பாகம்தான் முதலில் வரும். ஆனால், இந்த ‘வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டுள்ளார்கள். இதுவே ஒரு வித்தியாசமான சிந்தனைதான்.
படம் ஒரே நாள் இரவில் நடந்து முடிகிறது. படத்தின் கதைக் களம் மதுரை அருகே இருக்கும் ஒரு சிறிய ஊர்.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டாடாக இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவருக்கும் அதே ஊரில் வசிக்கும் மாருதி பிரகாஷ் ராவ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சாரமோடுக்கும் இடையில் ஒரு நீண்ட கால பகை இருக்கிறது. இவர்கள் இருவர் மீதும் கொலை வெறியோடு இருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பு கிடைத்தால் அப்பன், மகன் இருவரையும் என்கவுண்டரில் போட்டு தள்ளிவிடலாம் என்று பிளான் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு அரிய வாய்ப்பாக மாருதியின் வீட்டுக்கு தன்னைத் தேடிச் சென்ற தன் மனைவி காணவில்லை என்று ஒரு கணவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்து புகார் செய்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அப்பா, மகன் இருவரையும் என்கவுண்டர் செய்துவிடலாம் என்று டி.ஐ.ஜி., ஐ.ஜி. இருவரிடமும் பேசி பெர்மிஷன் வாங்கிவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இதைத் தெரிந்து கொண்ட பெரியவர் மாருதி, நீண்ட நாள் தன்னிடம் வேலை பார்த்து, இப்போது தன்னிடமிருந்து ஒதுங்கி நிற்கும் ‘காளி’ என்ற விக்ரமை தேடி வந்து தன்னையும் தன் மகனையும் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.
மனைவி, இரண்டு பிள்ளைகளோடு அந்த ஊரை விட்டு வந்து வேறொரு ஊரில் ஒதுங்கி ஒரு சாதாரண மளிகைக் கடையை நடத்திக் கொண்டிருக்கும் விக்ரம், முதலில் இதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார். ஆனால், விடாப்பிடியாக மாருதி அவர் காலில் விழுந்து கெஞ்சியவுடன் மனம் மாறி போலீஸ் எஸ்.பி., எஸ்.ஜே.சூர்யாவை கொலை செய்ய ஒப்புக் கொள்கிறார்.
ஒரு பக்கம் பெரியவர் மாருதியையும், அவரது மகன் சூரஜையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று வெறியாக ஓடிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இன்னொரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவையே கொலை செய்து விட வேண்டும் என்று எண்ணி அவர் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார் விக்ரம். இருவரில் யார் நினைத்தது நடந்தது..? இவர்கள் மூவருக்கும் உள்ள பகை என்ன? பகைக்கான காரணங்கள் என்ன? அதற்கான விளக்கம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
58 வயதிலும் விக்ரம் 27 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்பாக ஓடி இருக்கிறார். அற்புதமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சாதாரண சின்ன சின்ன விஷயங்களைகூட தன்னுடைய முகத்தில் நடிப்பாகக் காண்பித்திருக்கிறார்.
மனைவியுடன் சின்ன சின்ன ஊடல்களில் பெண்களைப் பெரிதும் கவர்கிறார். பெரியவர் மீதான மரியாதை.. அவருடைய வார்த்தையைத் தட்ட முடியாத சங்கடம்.. நன்றியுணர்வு.. கடமையுணர்வு.. அதே சமயம் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்.. இவ்வளவையும் திரைக்கதையில் கொடுத்திருப்பதால் இதற்கேற்றபடியான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் விக்ரம். குடும்பம் மட்டுமே முக்கியம் என்பதை சுட்டிக் காட்டி அவர் பல காட்சிகளில் காட்டுகின்ற நடிப்புக்கு விக்ரம் சலோ என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறார்.
படத்தின் இறுதி சண்டைக் கட்சியில் உயிர்ப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் விக்ரம். விக்ரமின் நடிப்பு மட்டும்தான் அந்த கிளைமாக்ஸ் கட்சியை காப்பாற்றி இருக்கிறது. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஒரு பண்பட்ட நடிப்பை காண்பித்து இருக்கிறார்.. என்னய்யா சொல்லுய்யா.. என்ன செய்யப் போற.. கொலை பண்ணப் போறியா.. புள்ளை மேல சத்தியம் பண்ணு.. இப்படியெல்லாம் பல்வேறு காட்சிகளில் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவர் படும் அவஸ்தையும், கேட்கும் கேள்விகளும் நம் மனதைத் தொடுகிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் கணவரை காப்பாற்ற அவரும் சண்டையில் புகுந்து அடி வாங்கி இரத்தம் சிந்தி, தன் வேதனையை காட்டும் போதெல்லாம் நமக்கே பகீர் என்கிறது. ஒரு அற்புதமான ஒரு நடிப்பை சிறந்த கேரக்டரில் ஏற்று நடித்திருக்கிறார் துஷாரா விஜயன்.
ஒரு மிகச் சிறந்த காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் மலையாளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் சூரஜ் இந்தப் படத்தில் ஒரு அட்டகாசமான வில்லன் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். கொடூரமான வில்லனாக இல்லாமல் பெரும் வார்த்தை பசப்புகளிலேயே வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.
அதே சமயம் எஸ்.ஜே.சூர்யாவிடம் மாட்டிக் கொள்ளும் பொழுது ஒரு தர்ம சங்கடமான நிலைமையில் சூர்யாவை ஏறெடுத்துக்கூட பார்க்க முடியாமல் அப்படி இப்படி என்று கண்களை கீழேயே வைத்துக் கொண்டு சங்கடப்படும் காட்சியில் மிக அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு மீண்டும் ஒரு அழகான ஒரு கேரக்டர். தன்னை சிக்கலில் மாட்டிவிட்டு, சஸ்பெண்ட் செய்ய வைத்து தன்னுடைய பிரமோஷனுக்கு ஆப்பு வைத்த மாருதியையும், சூரஜையும் பழிவாங்க துடிக்கும் அவருடைய துடிப்பதுதான் இந்தப் படத்தின் ஆணி வேர்.. மையக் கரு என்றே சொல்லலாம்.
மாருதி அவரிடம் வந்து தன் மகனின் உயிரை காப்பாற்ற கெஞ்சும்போது அவர் காட்டும் கோபக் கனலும், விக்ரமிடம் நைசாக பேசி, பேசி பழைய கதைகளை கிளறிவிட்டு அவரை தன் பக்கமாக நயவஞ்சகமாக பேசி இழுக்கின்ற காட்சிகளிலெல்லாம் கூடுதலாக ஒரு வில்லத்தனத்தையும் சேர்த்து கொடுத்திருக்கிறார் சூர்யா.
தெலுங்கு நடிகரான மாருதி பிரகாஷ்ராவ் இந்தப் படத்தில் பெரியவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு படம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. அவருடைய வில்லத்தனத்தின் உச்சமாக குடும்பத்தையே இல்லை என்றாக்கி விடுவேன் என்று சொன்னவர் சொன்னதையே செய்வதுபோல கிளைமாக்ஸில் அவர் காட்டுகின்ற வெறித்தனமான நடிப்பு எதிர்பாராதது. இயக்குநருக்கு இவருடைய நடிப்பு மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மற்றும் படத்தில் நடித்த மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி, பெரியவரின் மகளாக நடித்தவர் என்று அனைவருமே மிக இயல்பாக தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அழகாக காண்பித்து இருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வரின் கேமரா இந்தப் படத்தின் ஒரு மிகப் பெரிய பலம். படம் நெடுகிலும் இரவு நேர காட்சிகள்தான் என்பதால் இரவு நேர கட்சியிலே அவ்வளவு அழகையும் தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.
அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகளையும், கல்யாண மண்டபத்தில் நடைபெறும் காட்சிகளை நகைச்சுவை ததும்புவதை போல பதிவு செய்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது என்றாலும் விக்ரமின் பராக்கிரமத்தை பாராட்டு வகையில் அமையப் பெற்ற அந்தப் பாடலும் ஆடவே வைக்கிறது. பின்னணி இசை காதை கிழித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு இசையை கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநரும், அதைத் தொகுத்து வழங்கிய படத் தொகுப்பாளரும் நிச்சயமாக பாராட்டப்படத்தக்கவர்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிகவும் அபாரம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நம் மனதை விட்டு அகலகாமல் இருக்கின்ற வகையில் சண்டைக் காட்சிகளின் நடு நடுவே அனைவரின் நடிப்பையும் சேர்த்துக் காண்பித்து படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது படத்தில் இடம் பெற்ற 15 நிமிட நீளமான சிங்கிள் டேக் காட்சி. அருமை என்று சொல்லலாம் அவ்வளவு அழகாக படமாக்கி இருக்கிறார்கள். ஆக, இந்தப் படத்தின் இயக்குநரான எஸ்.யூ.அருண்குமார் மிகச் சிறந்த இயக்குநர் என்பதை இந்தப் படத்திலும் தன்னுடைய சிறந்த இயக்கத்தினால் நமக்கு செய்து காட்டி நிரூபித்து இருக்கிறார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
நமது சக மனிதர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்தான் நாட்டில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது. தன்னுடைய சொந்த கவுரவத்திற்காக அடுத்தவனை கொலை செய்தும், அதற்காக இன்னொரு மனிதர்களின் வாழ்க்கையை அழிப்பதுமாக பலரும் இங்கே பெரிய மனிதர்கள் போர்வையில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அது பரம்பரை, பரம்பரையாக, வழி வழியாக, மறுபடியும் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளுக்கும் மரபணு வாயிலாக பதிந்துபோய் இப்போதைய தலைமுறையிடம் வன்முறை உணர்வு அதிகரித்துள்ளது.
இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் இந்த அடிதடி, வெட்டுக் குத்து, கொலை, ஆயுதக் கலாச்சாரத்தை குறைப்பதென்பது இது போன்ற திரைப்படங்கள் வராமல் இருந்தால்தான் சாத்தியம்.
இப்பொழுது இந்தப் படத்தை பார்க்கின்றவர்கள் எவருக்கும் நிச்சயமாக இது போன்ற பழிவாங்கும் உணர்வு அவருக்குள் இருந்தால், இந்தப் படம் அந்த பழி வாங்கும் எண்ணத்தில் நெய்யை ஊற்றிவிட்டது போலத்தான் இருக்கும். அந்த அளவுக்கு தன்னுடைய கச்சிதமான இயக்கத்தினால் ஒரு உண்மைத்தனமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் இந்த திரைப்படம் மிகவும் அபாரமான ஒரு இயக்கத்தில் உருவாகி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
RATING : 4 / 5









