இந்தப் படத்தை எஸ்.ஆர்.டி. எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் சரத்பாபு, ரமா பிரபா, கொச்சு பிரேமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர்யா ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனங்கள் – எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி, தயாரிப்பு மேலாளர் – நாகராஜ் ஆர்.கே., கதை, திரைக்கதை, இயக்கம் – ரமணன் புருஷோத்தமா, வசனம் – பொன்னி வளவன், ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – ராஜேஷ் முருகேஷன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிமைப்பு – நந்தினி என்.கே., விளம்பர வடிவமைப்பு – டியூனி ஜான், பத்திரிகை தொடர்பு – யுவராஜ். இந்தப் படத்தை இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கியிருக்கிறார்.
சிம்ஹா ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பணியில் தீவிரமாக இருப்பவர். அலுவலகத்தில் யாருமே ஏற்காத ஒரு புராஜெக்ட்டை ஏற்கிறார் சிம்ஹா. மிகக் குறுகிய காலத்தில் அந்தப் பிராஜெக்ட்டை முடித்தாக வேண்டுமே என்பதற்காக இரவு, பகலாக அதில் பணியாற்றியிருக்கிறார் சிம்ஹா.
சிம்ஹா வெற்றிகரமாக அந்தப் பிராஜெக்ட்டை முடித்துவிட்டு தனது காதலியுடன் படம் பார்க்க தியேட்டருக்கு வரும்போது பிராஜெக்ட்டில் குறைபாடு என்பது தெரிய வருகிறது. இது தொடர்பான பிரச்சினைகளினால் மன உளைச்சலுக்குள்ளாகும் சிம்ஹா, தியேட்டரிலேயே மயங்கி விழுகிறார்.
அவரது காதலியான காஷ்மீரா சிம்ஹாவை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார். அங்கே ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் சிம்ஹாவின் மூளையில் அதீத வேலைப் பளுவினால் சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவிக்கிறார்.
“சிம்ஹா அடுத்து ஒரு மாதத்திற்கு மூளைக்கு எந்த வேலையும் கொடுக்காமல் ஓய்வெடுக்க வேண்டும்” என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். காதலியின் அன்புக் கட்டளையினால் மலையோர வாசஸ்தலத்திற்குப் பயணப்படுகிறார் சிம்ஹா.
அங்கே செல்லும் வழியில் தங்களது காரில் ஏதோவொரு விபத்து நடந்துவிட்டதை உணர்கிறார்கள் காதலர்கள். இதனால் அருகில் இருந்த வசந்த முல்லை என்ற ஹோட்டலில் தங்குகிறார்கள்.
ஹோட்டல் அறையில் காதலிக்குத் திடீரென்று மூச்சிரைப்பு ஏற்பட அதற்கான சாதனத்தை வாங்க மீண்டும் காரை எடுத்துக் கொண்டு மெடிக்கல் ஷாப்புக்கு விரைகிறார் சிம்ஹா.
திரும்பி வரும்போது அவரை புதிய மனிதர்போல் ஹோட்டல் மேனேஜர் கேள்வி கேட்கிறார். அந்த அறையிலும் அவரது காதலியான காஷ்மீராவும் இல்லை. குழப்பமான சிம்ஹாவுக்கு இன்னொரு அதிர்ச்சியாக அப்போதுதான் புதிதாக ஒரு கார் வந்து ஹோட்டல் வாசலில் நிற்க.. அதிலிருந்து இன்னொரு சிம்ஹாவும், காதலி காஷ்மீராவும் இறங்குகிறார்கள்.
ஹோட்டல் மேனேஜரும், சிம்ஹாவும் திகைத்துப் போய் நிற்க.. அடுத்து என்ன நடக்கிறது..? இதற்கு முன் என்ன நடந்தது..? என்பதுதான் இந்த சுவையான சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் கதை.
சிம்ஹாவுக்குப் பொருத்தமான கதாப்பாத்திரம்தான். “சேலஞ்சை சந்தித்து ஜெயிப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்று சொல்லிவிட்டு ராத்திரி, பகலாக பிராஜெக்ட்டில் தனது கவனத்தைச் செலுத்தி ஜெயிக்கிறார். ஆனால் அதில் ஏற்படும் சின்னத் தவறினால் பிரச்சினை ஏற்பட.. அந்தத் தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
ஹோட்டலில் ஏற்படும் ஆள் குழப்பம், இடம் குழப்பம், முகம் காட்டாத எதிரியுடன் கத்தி சண்டை என்று ஏன், எதற்கு, எப்படி என்பதே புரியாமல் அவர் அலைபாய்ந்து நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும், பதட்டமான காட்சிகளிலும் ஓடி, ஓடி உழைத்திருக்கிறார் சிம்ஹா. இந்த உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்.
காதலியாக நடித்திருக்கும் காஷ்மீரா பர்தேசி இந்தப் படத்தில் தனது கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார். பாவம்.. சின்னப் பொண்ணு. ஆனால் நடித்திருக்கும்விதம் பெரிய விஷயம்தான். கொட்டும் மழையிலும், குழப்பமான சூழலிலும் தனது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
மேனேஜர் கொச்சு பிரேமன், ரமா பிரபா, சரத்பாபு என்று சிலரும் நடித்திருக்கிறார்கள். ரமா பிரபாவின் மிரட்டல் பார்வை மட்டுமே படத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறது. ஆர்யாவின் கேமியோ ரோல் எதிர்பாராதது.
படத்தில் பாராட்டை பெறும் முதன்மையானவர் ஒளிப்பதிவாளரான கோபி அமர்நாத்துதான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவு கோணங்களே நம்மை ஆட்படுத்துகின்றன. ஹோட்டல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் ரசிகர்களை பிரமிப்பூட்டும்வகையில் படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.
இதேபோல் சண்டை பயிற்சியாளரும், கலை இயக்குநரும் பாராட்டுக்குரியவர்கள். ஹோட்டலை சண்டைக்கேற்றாற்போல் வடிவமைத்து கச்சிதமாக அதைப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். படத் தொகுப்பாளரும் தன் பங்குக்கு கச்சிதமாக காட்சிகளை வரிசைக்கிரமமாக நறுக்கித் தொகுத்திருக்கிறார்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு சில நிமிடங்கள் நீங்கள் திரையைப் பார்க்காமல் போனால்கூட உங்களுக்குக் கதை புரியாது. இதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகும். அந்த அளவுக்குத் திறமையான, புதுமையான வடிவத்தில் திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஆனால் பெரும் செலவில் வீட்டைக் கட்டிவிட்டு வீட்டு வாசலில் நிலைப்படியை சரியாக அமைக்காமல்விட்டால் எப்படியிருக்குமோ அப்படி அமைந்துவிட்டது இந்தப் படம்.
படத்தில் முக்கியமான டர்னிங் பாயிண்ட்டாக இருக்கும் டைம் லேப்ஸின் கீழ் அமைந்த திரைக்கதை, உருவகப்படுத்தப்பட்ட வில்லன் கதாப்பாத்திரக் காட்சிகள் இவை இரண்டையும் இணைப்பவை சிம்ஹாவுக்கு இருக்கும் மன நிலை பிறழ்ந்த நோய்தான். இதைத் தெளிவாக வசனத்தின் மூலமாகச் சொல்லியிருக்க வேண்டும்.
படத்தின் கடைசியில் ஆர்யா கதாப்பாத்திரத்தின் உண்மைத் தன்மையை டாக்டரான சரத்பாபுவே ரசிகர்களுக்கும் புரிவதைப் போல தெளிவுபடுத்தி சொல்லியிருந்தால் இந்தப் படம் நிச்சயமாக படம் பார்க்க வந்த ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும்.
ஆனால், இயக்குநர் இதைச் செய்யாமல், அது தொடர்பான 2 நிமிட விளக்கக் காட்சியும் இல்லாத காரணத்தினால் படத்தின் வெற்றியும், தன்மையும் இடம் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
RATING : 3.5 / 5









