full screen background image

டாடா – சினிமா விமர்சனம்

டாடா – சினிமா விமர்சனம்

Olympia Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கரன் இருவரும் தங்களது பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘ராசுக்குட்டி’  படத்திற்குப் பிறகு, இப்படத்தில்தான் இணைந்து நடிக்கிறார்கள். மேலும்  ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – கே.எழில் அரசு, இசை – ஜென் மார்ட்டின், படத் தொகுப்பு – கதிரேஷ் அழகேசன், கலை இயக்கம் – சண்முகராஜ், ஆடை வடிவமைப்பு – சுகிர்தா பாலன், நிர்வாகத் தயாரிப்பு – A.P.V.மாறன், ஒலி வடிவமைப்பு – அருணாச்சலம் சிவலிங்கம். இப்படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K.பாபு இயக்கியிருக்கிறார்.

பொறியியல் கல்லூரியில் படிக்கும் ‘மணிகண்டன்’ என்ற கவின் வீட்டுக்கு அடங்காத பிள்ளையாகச் சுற்றித் திரிபவர். உடன் படிக்கும் ‘சிந்து’ என்ற அபர்ணா தாஸை காதலிக்கிறார். இந்த இருவரின் காதலும் எல்லை மீற.. சிந்து கர்ப்பமாகிறாள். கர்ப்பத்தைக் கலைக்கும்படி மணி சொல்லியும், சிந்து இதை ஏற்க மறுக்கிறாள்.

விஷயம் அறிந்து இருவரின் குடும்பத்தினரும் இவர்களை ஏற்க மறுக்க.. வேறு வழியில்லாமல் இருவரும் தனியே வீடு எடுத்துத் தங்குகிறார்கள். சிந்து குழந்தையுடன் கர்ப்பிணியாக இருக்க.. மணி வேலைக்குச் செல்கிறான். புதிதாக குடும்பப் பொறுப்பினை ஏற்றதால் பொருளாதாரச் சுமை அவனை பெரிதும் அழுத்துகிறது.

இதனால் குடிக்கவும் துவங்குகிறான் மணி. சிந்து இதைக் கண்டிக்கிறாள். அந்த நாளில் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து சிந்து வீ்ட்டில் தனியே இருக்க பனிக்குடம் உடைந்து பிரசவ வலியால் துடிக்கிறாள்.

மணி, சிந்து மீதுள்ள கோபத்தில் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட.. பக்கத்து வீட்டுக்காரர்கள் சிந்துவை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கே சிந்துவுக்கு பையன் பிறக்கிறான்.

அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் மணி விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு ஓடி வருகிறான். அங்கே குழந்தை மட்டுமே இருக்கிறது. சிந்து அவளது பெற்றோருடன் சென்றுவிட்டதை அறிகிறான் மணி.

பிறந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிந்துவைத் தேடியலைகிறான் மணி. சிந்து அவர்களது வீட்டிலும் இல்லாமல் போக. தன் வீட்டுக்குப் போகிறான் மணி. அங்கே அவனது அப்பா மணியை வீட்டுக்குள்விட மறுக்க.. வேறு வழியில்லாமல் தன் வீட்டுக்கே குழந்தையுடன் திரும்புகிறான் மணி.

இதன் பின்பு பிள்ளையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடவும் முயல்கிறான் மணி. பின்பு திடீரென்று பெத்த மனசு பதற, மறுபடியும் அங்கே சென்று குழந்தையை வாங்கி வந்து பையனுக்கு ‘ஆதித்யா’ என்று பெயர் சூட்டி தானே வளர்க்கிறான் மணி.

இப்போது பையனுக்கு 5 வயது. 1-ம் வகுப்புப் படிக்கிறான். இடையில் சிந்துவுடன் மணிக்கு எந்தத் தொடர்புமில்லை. மணியும் இப்போது ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை தேடுகிறான். போன இடத்தில் மேனேஜர் சாட்சாத் சிந்துதான்.

இனி நடப்பது என்ன.. இருவரும் ஒன்று சேர்ந்தார்களா.. இல்லையா.. தன் பையனை சிந்து பார்த்தாளா.. இல்லையா.. என்பதுதான் இந்த ‘டாடா’ படத்தின் திரைக்கதை.

கல்யாணத்திற்கு முன்பேயே காதலிக்கும் நாட்களில் வாலிப வயதின் காரணமாய், ஹார்மோன் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டு முன்னெச்சரிக்கையில்லாமல் உடலுறவில் ஈடுபட்டு பெண் கர்ப்பமானால், பின் விளைவுகள் என்னவாகும் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது.

கவினுக்கு இது மிகச் சிறந்த உதாரணப் படம். நடிப்புக்கென்று பெயர் சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார். வீட்டில் அப்பா மதிக்கவில்லையே என்ற குறை.. காதலியால் ஏற்படும் திடீர் பிரச்சினை.. இதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத தன்மை.. இதனால் ஏற்படும் விளைவுகளை தனது நடிப்பால் காண்பித்து நம்மைக் கவர்ந்திழுக்கிறார் கவின்.

மகனை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு வந்த பின்பு மீண்டும் மனம் மாறி அங்கே ஓடிப் போய் குழந்தையைக் கேட்கும் காட்சியில் நம் மனதில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார் கவின்.

போகப் போக மகனின் வளர்ச்சியை கண் முன்னேயே பார்த்து சந்தோஷப்படுவதும்,  அபர்ணாவை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தாலும் வேலைக்காக பொறுமையாக இருந்து பேசாமல் இருந்து.. விலகியிருந்து.. நிதானத்தைக் கடைப்பிடிக்கும்விதத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார் கவின்.

இனியும் இது போன்ற இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும்படியான கதைகளைத் தேர்வு செய்து கவின் நடித்தால், அவரது கேரியர் உயர நிறையவே வாய்ப்புண்டு.

சிந்துவாக கேரளத்து அபர்ணா தாஸ் மின்னி, பின்னியிருக்கிறார். அழகும், நடிப்பும் அம்மணிக்கு கை கூடியிக்கிறது. நம்பி வந்த கணவன் குடிக்கிறானே என்று அவர் வருத்தப்படும் காட்சிகளிலும்,. தன் எதிர்பார்ப்பு கொஞ்சம், கொஞ்சமாக கரைவதைப் பார்த்து மனம் கலங்கும் காட்சிகளிலும், கிளைமாக்ஸில் மன்னிப்பு கோரும் காட்சிகளிலும் தன் மொத்த நடிப்பையும் காண்பித்திருக்கிறார் அபர்ணா.

முதலில் பரிதாபம் ஏற்படும் அளவிற்கு காட்டப்பட்டு, பின்பு குழந்தை பிறந்தவுடன் அதை விட்டுவிட்டு சென்றதால் தன் மீது பழி விழாமல் பார்த்துக் கொண்டும்,  அதற்கான உண்மையான காரணத்தை கிளைமாக்ஸில் சொல்லும்போது அபர்ணா தாஸ் இயக்குநரையும், படத்தையும் காப்பாற்றியிருக்கிறார்.

குழந்தை ஆதித்யா அழகாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். பாக்யராஜூம், ஐஸ்வர்யாவும் அப்பா, அம்மாவாக மனம் திருந்தும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அண்ணனின் கல்யாணத்திற்கு பத்திரிகை கொடுக்க வந்த இடத்தில், பாக்யராஜின் பேச்சு நெகிழ்ச்சியானது.

சிறிது நேர கலகலப்பில் விடிவி கணேஷ் கலக்கியிருக்கிறார். கவினின் நண்பன் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரீஷும் கவினுக்கு ஈடு கொடுத்து கவுண்ட்டர் டயலாக்குகளை வெட்டி பெரிதும் சிரிக்க வைத்திருக்கிறார்.

குறையில்லாத ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளரான எழில் அரசு. வெளிப்புறக் காட்சிகள், வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள்.. படத்தின் துவக்கக் காட்சிகள் என்று பலவற்றிலும் கேமிராவின் பங்களிப்பு மிக அதிகம்.

பாடல்களுக்கான இசை மந்தமாக இருந்தாலும் பின்னணி இசை நடிப்பையும், இயக்கத்தையும் மீறாமல் நம்மை படத்தை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறது.

இதுவரைக்குமான படங்களில் கணவன் விட்டுவிட்டுப் போக, பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து கஷ்டப்படும் கதை, திரைக்கதைகளைத்தான் அதிகம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்தப் படம் ஒரு ஆணின் மனப்போக்கில், பார்வையில், தந்தையின் கோணத்தில் நகர்ந்திருக்கிறது. இதோடு கூடவே நட்பு, காதல். செண்டிமெண்ட், நகைச்சுவை, பாசம் அனைத்தையும் கலந்து சுவையான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான கணேஷ் கே.பாபு.

படத்தின் முதல் பாதியில் சிக்கல்களோடு நகரும்  வாழ்க்கையையும், இரண்டாம் பாதியில் அந்த சிக்கல்களைக் களைய வேண்டி நகைச்சுவை கலந்த விதத்திலும் படத்தினை கொண்டு சென்றுள்ளார்.

முதலில் கவின் குடித்துவிட்டு வந்து அபர்ணாவிடம் நடந்து கொள்ளும்விதத்தை பார்க்கும்போது சிந்து செய்தது சரி என்பது போலவே தோன்றி, இதனாலேயே நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும். மகனுக்காகவாச்சும் வாழ வேண்டும் என்ற அளவுக்கு கவினின் மனமாற்றத்திற்கு ஒரு உந்து சக்தியாக  அது அமைந்திருப்பதாகக் காட்டியிருப்பது சிறப்புதான்.  

ஆனாலும் படத்தின் கிளைமாக்ஸில் அபர்ணாவை மன்னிப்பு கேட்க வைத்து.. ஏதோ அபர்ணா மட்டுமே தவறு செய்தது போலவும்.. கவின் தவறே செய்யாதது போலவும், அவரை சுப்ரீம் ஹீரோ போலவும் ஆகி, பெண்ணடிமைத்தனத்தை போதிப்பது போல.. ஆணாதிக்கத் தன்மையுடன் அயோக்கியத்தனமான முடிவைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

முதலில் கல்யாணத்திற்கு முன்பேயே, படிக்கும் காலத்திலேயே காதலர்கள் இருவரும் உடலுறவு கொண்டது தவறு என்பதை இந்தப் படத்தில் ஒரு இடத்தில்கூட இயக்குநர் சுட்டிக் காட்டவில்லை.

கவின் குடித்துவிட்டு வருவதுதான் அபர்ணாவுக்குப் பிரச்சினை என்பதால் அதற்கான மன்னிப்பை கடைசியில் கவினும் கேட்கவில்லை. அவனது புறக்கணிப்பாலேயே தானும் புறக்கணித்ததாக அபர்ணா சொல்லியிருக்க வேண்டும். இது நிச்சயம் ஏற்கக் கூடியதுதான். ஆனால் பெண்ணை மட்டுமே மன்னிப்பு கேட்க வைக்க வேண்டி திரைக்கதையில் இந்த வார்த்தையையே கொண்டு வராமல் முடித்திருப்பது பச்சை அயோக்கியத்தனம்.

தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கவின், குடித்துவிட்டு வருவதும், எடுத்தெறிந்து பேசுவதும், ஏதோ அவர் மட்டுமே உலகத்தில் கஷ்டப்படுவதுபோலவும் நினைத்து மெச்சூரிட்டி இல்லாமல் பேசியிருப்பதுதான் பிரச்சினையின் மூல காரணம்.

ஆனால், இதற்காக ஆண் மகனான கவின் கிஞ்சித்தும் கவலைப்படாமல் பிள்ளையைவிட்டுவிட்டு ஓடிப் போனது ஏன் என்று அபர்ணாவைக் கேட்பதெல்லாம் தடித்த திமிர்த்தனமான திரைக்கதை.

அபர்ணா பிரசவத்துக்குத் தயார் நிலையில் இருக்கும்போது உடன் இருந்து பார்த்துக் கொள்ளும் அக்கறையே இல்லாமல், அது பற்றிய சிந்தனையே இல்லாத அறிவாற்றலுடன் இருக்கும் கவின், கடைசியாக பிள்ளையை விட்டுவிட்டு அபர்ணா சென்றதை மட்டும் ஏன் குற்றம் சொல்வானேன்..?

அதோடு இதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டையும் இருக்கிறது. இதுபோல எந்த மருத்துவமனையிலும் எந்தக் குழந்தையையும் யாரும் அம்போவென்றுவிட்டுவிட்டு போய்விட முடியாது. எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்க மாட்டார்கள்.

மேலும் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்ததாகப் பொய் சொல்லி காப்பகத்தில் குழந்தையை சேர்க்கப் போய், பின்பு மனம் திருந்தி திரும்பி வந்து கேட்டவுடன் குழந்தையைத் தூக்கிக் கையில் கொடுத்துவிட்டதாக திரைக்கதையில் வந்திருப்பதெல்லாம் ஒரு துளிகூட நடக்க வாய்ப்பில்லை.

பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். குழந்தைக்காக ஒன்றுபடல் வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதைச் சொல்லியவிதத்தில்தான் தவறிருக்கிறது.

இரண்டு பக்கம் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி சொல்லி.. கல்யாணத்திற்கு முன்பு இது போன்று கர்ப்பந்தரிக்கும் சூழலை இன்றைய இளைஞர்கள் உருவாக்கக் கூடாது என்ற நாட்டுக்குத் தேவையான அட்வைஸை இந்தப் படம் கொடுத்திருந்தால் நிச்சயமாக நாம் இயக்குநரைப் பாராட்டியிருக்கலாம்.

ஆனால் இதைச் செய்யாமல், கண்டு கொள்ளாமல், பெண்ணை மட்டுமே குறை சொல்லி ஆணாதிக்கத்தன்மையுடன் இந்தப் படத்தை உருவாக்கித் தந்திருக்கும் இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.

டாடா : பாதி சரி..! பாதி தவறு..!!!

RATING : 3.5 / 5

Our Score