நேற்று தமிழகம் முழுவதிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வந்தா மல’ படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் அதன் ஹீரோயின் பிரியங்கா.
பக்கா சென்னை தமிழ் பாஷையை அட்சரம் பிசகாமல் பேசி நடித்திருப்பதோடு, பெரிய நடிகைகளே பேச தயங்கும் டயலாக்குகளையெல்லாம் அசராமல் அள்ளி வீசி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் பிரியங்கா.
இதற்கு முன்பாகவே ‘அகடம்’, ‘13-ம் பக்கம் பார்க்க’, ‘கங்காரு’, போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் இவர். தன்னுடைய திரையுலக அனுபவங்கள் பற்றி நம்மிடம் மனம் திறந்து பேசினார் பிரியங்கா.
“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு. சொந்த ஊரு பாண்டிச்சேரி. இப்போவெல்லாம் நல்லா தமிழ் பேசி நடிக்கிற பொண்ணுங்கதான் வேணும்னு நிறைய இயக்குநர்கள் விரும்பறாங்க.. அப்படி கிடைக்கமல்தான் மற்ற மாநிலத்திற்கு ஹீரோயின்களை தேடிப் போறாங்க.. ஆனால் இப்போ அப்படி இல்லை.. நிறைய தமிழ் பொண்ணுங்க சினிமாவுல நடிக்கிறாங்க.. அந்த வரிசைல நானும் ஒருத்தின்றதுல எனக்கு சந்தோஷம்தான்.
ஹோம்லி ஹீரோயின் தேவையுள்ள படங்களுக்கு ஏன் மும்பைக்கும், கேரளாவுக்கும் போகணும்..? இங்கேயுள்ள தமிழ்ப் பொண்ணுங்களையே நடிக்க வைக்கலாமே..? அப்போ நிறைய தமிழ்ப் பெண்கள் நடிக்க முன் வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு நான் முன்னுதாரணமா இருக்க விரும்புறேன்.
மாடர்னான நடிக்கணும்னு எனக்கு ஆசைதான். இந்த ‘வந்த மல’ படத்துலயே ‘சைபர் ஆகலாம்’ பாடல் காட்சில நானும் மாடர்ன் கேர்ளா நடிச்சிருக்கேன்… அதுக்காக எல்லை மீறி மாட்டேன். நான் இப்போ நீச்சல் உடையில வந்தா யாரும் ரசிக்க மாட்டாங்க. என் உடல் வாகுக்கு அதெல்லாம் நல்லாயிருக்காது. அதோட, ‘எல்லா படத்திலேயும் ஹோம்லியாத்தான நடிச்சிட்டிருந்த.. என்னாச்சும்மா?’ன்னு நீங்களே கேள்வி கேப்பீங்க..
இந்த ‘வந்த மல’ படத்துல சேரியில வாழுற சென்னை பொண்ணு நான்.. இயக்குநர் இகோர் ஸார் ஸ்பாட்ல சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசினேன். அந்த ஸ்லாங் முதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்புறம் போகப் போக பழகிருச்சு.. ஷூட்டிங் சமயத்தில் நாக்கு சுளுக்குன மாதிரியிருந்தது.
‘என்ன படத்துல இவ்ளோ வல்கரான டயலாக்குகளை பேசியிருக்கீங்க?’ன்னு எல்லாரும் கேக்குறாங்க. இந்த படத்துல எனக்கு ரொம்ப போல்டான கேரக்டர்.. அங்க உள்ள பெண்கள் ஆண்களுக்கு சமம். அவங்களே ஆம்பள மாதிரி எல்லா வேலையும் செய்வாங்க. காதலைக்கூட மென்மையா சொல்லத் தெரியாது. ரோட்டோரம் படுத்திருக்கிறவங்களோட தாம்பத்திய வாழ்க்கை வெட்கப்பட்டா நடக்குமா..? அப்படித்தான் இந்த ‘வந்தா மல’ ஹீரோயின் வசந்தாவும். அவளுக்கு எதையும் ஒளிச்சிப் பேசத் தெரியாது. இப்படித்தான் பேசுவாங்க. உண்மையா, படத்துல வசந்தா பேசுனது கொஞ்சம்தான்.(!)
இப்போ ‘ரீங்காரம்’, ‘திருப்பதி லட்டு’, ‘சாரல்’னு மூணு படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். ‘திருப்பதி லட்டு’ படத்துல சுரேஷ் காமாட்சி சார் இயக்கத்துல விஜய் வசந்த் சார்கூட ஜோடியா பண்றேன்.. அது முழுக்க முழுக்க காமெடி படம்…
எனக்குக் கல்யாணம் இப்போதைக்கு இல்லை. ஆனால் நிச்சயமா காதல் கல்யாணமா இருக்காது. எனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கத்தான் அம்மா, அப்பா இருக்காங்களே..? எனக்கு, என்ன செய்தால் நான் நல்லா இருப்பேன்னு அவங்களுக்கே தெரியும்.. எனவே அம்மா அப்பா பார்க்கிற சமத்து பையனைத்தான் நானும் சமத்தா கல்யாணம் செஞ்சுக்குவேன்..” என்கிறார் சமர்த்துப் பொண்ணு பிரியங்கா.