‘கத்தி’ திரைப்படம் வெளியாவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிச்சயம் தடுக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
‘கத்தி’ பட விவகாரம் தொடர்பாக ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”கத்தி திரைப்படத்தின் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் படத்தின் கதையோடு எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனும் ‘லைக்கா புரொடஷன்ஸ்’ என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனமும்தான் இப்போது பிரச்னை.
இந்த நிறுவனம், இலங்கையில் மிகப்பெரிய இனப் படுகொலையை நடத்தி அங்கிருந்த தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நேரடியான பினாமி நிறுவனம். லைக்கா டெல், லைக்கா ஃபிளை, லைக்கா மணி, லைக்கா டிராவல்ஸ் என்று பல வியாபாரங்களில் இதுவரை ஒன்றாக செயல்பட்டு வந்த இவர்கள், இப்போது லைக்கா புரொடக்ஷன் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். ராஜபக்ஷேவுக்கு எதிராக உலகத் தமிழர்களிடையே இருக்கும் மனநிலையை மாற்றுவதுதான் இவர்களின் செயல்திட்டம்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன், காமன்வெல்த் பிசினஸ் ஃபோரம்-2013 என்ற பெயரில் அங்கு பல அந்நிய முதலீட்டாளர்களின் கூட்டமும் நடைபெற்றது. அப்போது அதிகப்படியாக ஸ்பான்ஸர் கொடுத்து ‘கோல்டன் ஸ்பான்ஸர்’ ஆக இருந்தது லைக்கா டெல் நிறுவனம்.
ஆரம்பத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை, சமாதானம் செய்து இலங்கைக்கு அழைத்து வந்ததும் லைக்கா டெல் நிறுவனம்தான்.
டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு லைக்கா நிறுவனம் ஏராளமான நன்கொடையை தொடர்ந்து வழங்கியிருந்ததால் அது சாத்தியமானது. இது குறித்து கேள்வி எழுப்பிய லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்ஷாப், ‘ராஜபக்சேவின் தயவில் செயல்படும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து கன்சர்வேட்டிவ் பார்ட்டி தொடர்ந்து நன்கொடை பெறுகிறது. அதனால்தான், மக்களின் உணர்வுகளை மதிக்காமல் டேவிட் கேமரூன் இலங்கை சென்றார். அது ஒரு நாடகம்’ என்று விமர்சனம் செய்தார்.
‘டூரிஸம் பேக்கேஜ்’ என்ற பெயரில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வேலையையும் லைக்கா நிறுவனம் நடத்தி வருகிறது.
சுபாஷ்கரன் அவரது தாய் ஞானாம்பிகையின் பேரில் இலங்கையில் நடத்தும் ‘ஞானம் ஃபவுண்டேஷன்’, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த மாவட்டங்களில் நேரடியாக நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. வடக்கு மாகாண அமைச்சர்களைக்கூட அந்தப் பகுதிக்குள் இலங்கை ராணுவம் அனுமதிப்பது இல்லை. ஆனால் ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, இது போன்ற உதவிகளை சுபாஷ்கரனும் அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் செய்கிறார்கள் என்றால், அவருக்கும் ராஜபக்சேவுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக உள்ள மனநிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். அதற்கு விஜய், முருகதாஸ் போன்றவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திரைப்படத்துக்கு எதிராக அத்தனை வழிகளிலும் போராடி அந்தத் திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதைத் தடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் வன்னி அரசு.
ஆக.. ‘தலைவா’ பட ரிலீஸ் நேரத்தைவிடவும் ‘கத்தி’ பட ரிலீஸ் நேரம் மிகவும் பரபரப்பாகவே இருக்கும் என்று தெரிகிறது..!