சந்தானம் முதல் முறையாக தனி ஹீரோவாக நடித்திருக்கும் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ படம் வரும் 10-ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ‘கோச்சடையான்’ விலகலால் கிடைத்த திடீர் பம்பர் பரிசு.. இந்தப் படத்தை எதிர்த்து ‘யாமிருக்க பயமே’ மட்டுமே வருகிறது. அதனால் கூடுதல் சந்தோஷம் சந்தானத்திற்கு..
இந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் தெலுங்கின் மெகா ஹிட் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘மரியாதை ராமண்ணா’ என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது உங்களுக்கு தெரியும். தெலுங்கில் பிளாக்பஸ்டராக அடித்துத் தூள் கிளப்பியது.. தெலுங்கிலும் சுனில் என்ற காமெடி நடிகர்தான் இதில் நடித்து இன்னும் பெரிய பெயரெடுத்தார். அதனால்தான் தமிழுக்கு சந்தானம் ஷூட் ஆகியிருக்கிறார்.
ஒரு காமெடி நடிகர் நடிக்க வேண்டிய கதை என்றவுடனேயே கதையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருக்கும். இது சஸ்பென்ஸ் திரில்லர் டைப் கதையல்ல. அதே நேரத்தில் ஹீரோயிஸ கதையும் இல்லை. கதைதான் ஹீரோ. நகைச்சுவை கலந்த கிராமத்து கதை.. தெரிந்து கொள்வதில் தப்பில்லை. எப்படியிருந்தாலும் காமெடி என்பதால் தியேட்டருக்கு போகத்தான் போகிறீர்கள்.. கதையை லைட்டாக தெரிந்து கொள்ளலாமா..?
ராயலசீமா மாவ்டடத்தில் தாடிபத்ரி நகரம் அருகே காந்திபேடா என்ற கிராமத்தில் பெரிய தாதா குடும்பம். அடிதடி, வெட்டுக் குத்து, கொலைகளுக்கு அஞ்சாத குடும்பம். ஆனால் அவர்களுக்கென்று சில கொள்கைள் இருக்கின்றன. அதாகப்பட்டது அவர்களது வீட்டுக்கு விருந்தாளியாக எதிரியே வந்தாலும் சரி.. வீட்டுக்குள் கால் வைத்துவிட்டால் அவர்களை வரவேற்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதே எதிரி அவர்களது வீட்டுக்குள்ளேயிருந்து வெளியில் கால் வைத்துவிட்டால் போட்டுத் தள்ளிவிடுவார்கள்.. சுருக்கமாக.. ‘எதிரியே ஆனாலும் விருந்தாளியாக வந்தால் கை வைக்கக் கூடாது’ என்பது அவர்களது கொள்கை..
முன்னொரு காலத்தில் சந்தானத்தின் அப்பா அதே ஊரில் இருந்தவர். இந்த தாதா குடும்பத்திற்கும், அவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு இப்போதைய தாதா குடும்பத்தின் மூத்தவரை கொலை செய்துவிட்டு தானும் இறந்து போகிறார் சந்தானத்தின் அப்பா. அதன் பின் சந்தானத்தின் அம்மா சந்தானத்தை தூக்கிக் கொண்டு ஹைதராபாத்திற்கு ஓடிப் போய்விடுகிறார். தனது தந்தையைக் கொன்றவனின் பரம்பரையே இருக்கக் கூடாது.. எங்கே எப்போது பார்த்தாலும் வெட்டிக் கூறு போட்டுவிட துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் கொலை செய்யப்பட்ட தாதாவின் மகன்கள்.
28 வருடங்கள் கழித்து காட்சிகள் தொடர்கின்றன. சாதாரண ஒரு ஓட்டை சைக்கிளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் சந்தானம். ஒரு டிராலி வாங்கினால் பொழைப்பை நடத்தலாமே என்று நினைத்து 2 லட்சம் ரூபாய் கடன் கேட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது பிறந்த ஊரில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அவருடைய தந்தையின் பெயரில் இருக்கும் நிலத்தை பெற்றுக் கொள்ளும்படி தகவல் வருகிறது. ஓட்டை சைக்கிளை அப்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் தள்ளிவிட்டுவிட்டு, ஊருக்கு டிரெயின் ஏறுகிறார் சந்தானம்.
சென்னை எக்ஸ்பிரஸ் போலவே இதில் டிரெயினிலேயே ஹீரோயினை பார்த்து பேசி பழகி வைத்துக் கொள்கிறார் சந்தானம். ஊருக்கு வந்தவுடன் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நிலத்தை விற்க வேண்டிய சூழல் சந்தானத்திற்கு.. வாங்குவதற்கு ஆள் தேடும்போது ஊர்க்காரர்கள் அந்த தாதாவின் பெயரையே சொல்கிறார்கள். அவருடைய வீட்டிற்குச் சென்று தனது நிலத்தை வாங்கிக் கொள்கிறீர்களா என்கிறார் சந்தானம். அவருடைய பெயர்.. அவருடைய பூர்வீகத்தை தாதா சாதாரணமாகக் கேட்க.. சந்தானம் அதை பெருமையாகச் சொல்ல சூழ்நிலை மாறுகிறது..
‘இவன்தான் நாம ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்த ஆளு’ என்று தாதா கொதிக்க.. தனது குடும்பக் கொள்கை காரணமாய் அமைதியாகி சந்தானத்தை உபசரிக்கிறார். ஆனால் வீட்டு வாசலில் வீச்சரிவாளுடன் ஆட்கள் தயாராய் இருக்கிறார்கள். சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிய வருகிறது.
எக்காரணத்தை முன்னிட்டும் அந்த வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லி.. கலாட்டா செய்து வீட்டுக்குள்ளேயே சுத்திச் சுத்தி வருகிறார். இவரை வெளியே அனுப்ப அவர்கள் செய்யும் முயற்சிகளும் கலாட்டாவாக இருக்க.. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்த தெலுங்கு ஒரிஜினல் முதலில் கன்னடத்தில்தான் ரீமேக் செய்யப்பட்டது. அதே பெயரில்.. கோமல் குமாரும் நிஷா ஷாவும் ஹீரோ, ஹீரோயினாக நடித்தார்கள். படம் சூப்பர் ஹிட். அடுத்து பெங்காளி மொழியில் ரீமேக் செய்தார்கள், ‘Faande Poriya Boga Kaande Re‘ என்ற பெயரில்.. அடுத்தது ஹிந்தி. அஜய் தேவ்கனும் சோனாக்சி சின்ஹாவும் நடிக்க ‘சன் ஆஃப் சர்தார்’ என்ற பெயரில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது.
நிச்சயம் இது தமிழுக்கு புதிதுதான்.. இதுவரையில் யாரும் ராஜமெளலியின் கதையைச் சுடவில்லை.. மிக விறுவிறுப்பான திரைக்கதையில், சூப்பரான இயக்கத்தில் தெலுங்கு படம் போரடிக்காமல் இருந்தது.. தமிழில் எப்படியோ..?
வரும் சனிக்கிழமை பார்த்துவிடலாம்..!