‘வல்லவன்’ பட ரீமேக் உரிமை விவகாரம் – தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது டி.ராஜேந்தர் புகார்

‘வல்லவன்’ பட ரீமேக் உரிமை விவகாரம் – தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது டி.ராஜேந்தர் புகார்

நடிகர் சிம்பு நடித்த ‘வல்லவன்’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை போலி ஆவணங்களைக் காட்டிக் கைப்பற்ற முயல்வதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் மீது நடிகர் சிம்புவின் அப்பாவும், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மதியம் வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மீது புகார் மனுவையும் அளித்துள்ளார் டி.ஆர்.

அதன் பின்பு பத்திரிகையாளர்களிடத்தில் இது பற்றி டி.ஆர். பேசும்போது, “என் மகன் சிம்பு நடித்த ‘மன்மதன்’ திரைப்படம் இந்தியன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கிருஷ்ணகாந்த் தயரித்த படம். இந்தப் படத்திற்கான ரீமேக் உரிமை சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

t-rajendar

ஆனால் இப்போது எஸ்.என். மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான சஞ்சய் லால்வாணி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் தூண்டுதலின் பெயரில் ‘மன்மதன்’ படத்தின் ரீமேக் உரிமம் தன்னிடம் இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்.

தெலுங்கு மற்றும் வட இந்திய மொழி ரீமேக் உரிமையில் ஒரு பங்கு இயக்குநர் என்கிற அடிப்படையில் சிலம்பரசனுக்கும் உள்ளது. இதேபோல் ‘வல்லவன்’ பட உரிமையை ஹிந்தி மொழிக்கு நான் விற்றவுடன், இப்போது அதைத் தடுக்க பி.எல் தேனப்பன் முயற்சி செய்கிறார்.

இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் எஸ்.என் மீடியா சஞ்சய் லால்வாணி மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இருவர் மீதும் கொடுத்துள்ளேன். ‘மன்மதன்’, ‘வல்லவன்’ ஆகிய படங்களின் ரீமேக் உரிமைகளை கோடிகளை இழந்தாலும் விட்டுத் தர மாட்டேன்…” என்றார் ஆவேசமாக.

இது தொடர்பாக ‘வல்லவன்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் பதில் அளித்துள்ளார்.

p.l.thenappan-1

அவர் அளித்துள்ள பதிலில், “என்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நான் தயாரித்த திரைப்படம் ‘வல்லவன்’. இதில் சிம்பு, நயன்தாரா இருவரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சிம்புவே இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதியன்று வெளியானது.

இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை மற்றும் வட இந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையும் எனது ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கே சொந்தமானதாகும்.

இந்த ரீமேக் உரிமைகளை நான் எஸ்.என். மீடியா நிறுவனத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதியன்று முறையாக ஜெமினி லேபின் கடிதம் மூலமாக விற்பனை செய்துள்ளேன்.

IMG_20181224_0002-3

இந்த நிலையில் இன்று காலையில் ஊடகங்களை சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்தர் ‘வல்லவன்’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமம், மற்றும் வட இந்திய மொழிகளின் உரிமம் தன்னிடம் உள்ளது என்று தெரிவித்ததாக அறிகிறேன். மேலும் அந்த ரீமேக் உரிமையை வாங்கியவர்கள் மீதும், விற்றவர்கள் மீதும் பழி சுமத்தும்விதமாக பேசியதாகவும் நான் அறிகிறேன்.

நான் ‘வல்லவன்’ படத்தை தயாரித்து, அதை சிலம்பரசனை நடிக்க வைத்தும், இயக்குநராக அறிமுகப்படுத்தியபோது அவருடைய ஒத்துழையாமையால் அந்தப் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

vallavan-movie-poster-4

என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் சிலம்பரசனால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் கதைகள் தமிழ்த் திரையுலகம் அறிந்ததே.

இந்நிலையில் ‘வல்லவன்’ படத்தின் தயாரிப்பாளரான என்னையும், எனது 35 ஆண்டு கால திரையுலக அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் என் மேல் அபாண்டமாக பழி சுமத்தும்வகையில் பேசிய டி.ராஜேந்தர் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும் என் பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக டி.ராஜேந்தர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் கொடுக்கவும் உள்ளேன்..” என்று கூறியுள்ளார்.

Our Score