full screen background image

வலியுடன் ஒரு காதல் – சினிமா விமர்சனம்

வலியுடன் ஒரு காதல் – சினிமா விமர்சனம்

புதியவர்கள் சினிமாவுக்கு தேவைதான்.. ஆனால் அதற்கான தகுதி இருக்க வேண்டுமே..? பணம் மட்டுமே இருந்தால் போதுமா..? அதை வைத்து இயக்குநர்களை விலைக்கு வாங்கி தன் முகத்தைத் திரையில் பார்த்துக் கொள்ளும் திருப்தியை, என்றைக்கு சிறிய தயாரிப்பாளர்களும், அறிமுக நடிகர்களும் கைவிடுகிறார்களோ அன்றைக்கு நிச்சயம் தமிழ்ச் சினிமாவுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும்..

கிராமத்து கதை.. கதிர் என்னும் வெட்டி ஆபீஸர்.. ஊரில் தேங்கா தோப்பு.. பூசணிக்கா தோட்டம் என்று ஒரு இடம்விடாமல் தனது நண்பர்களுடன் சென்று திருடும் ‘நல்ல’ பழக்கமுடையவர். திருடுவதற்கு இன்றைக்கு எதுவுமே கிடைக்கவில்லையா..? நிலத்தைச் சுற்றி போட்டிருக்கும் கம்பி வலையைக்கூட அறுத்துக் கொண்டு போய் எடைக்கு எடை போடும் அளவுக்கு உத்தமர்.

இந்த உத்தமரின் கண் பார்வையில் படுகிறார் யசோதா. அந்த ஊர் பண்ணையாரான சரவணப் பொய்கையின் ஒரே மகள். சரவணப் பொய்கை அக்மார்க் ரவுடிக்கு ரவுடி.. இந்த யசோதாவுக்கு ஒரு முறை மாப்பிள்ளை வீட்டோடு தயாராகவே இருக்கிறான். இதில் நமது ஹீரோ இடையில் நுழைந்து நூல் விடுகிறார். இது தெரிந்து யசோதாவின் முறை மாப்பிள்ளை ஹீரோவை அழைத்து துவைத்து எடுத்து காயப் போட்டு அனுப்பி விடுகிறார்.

இதனை பார்த்தவுடன் வழக்கம்போல ஹீரோயின் யசோதாவுக்கு காதல் உணர்வு பீறிட்டு வர.. ஒரு காதல் பாட்டுக்கு சிச்சுவேஷன் கிடைச்சிருச்சு.. மறுபடியும் காதல் துளிர்விட்டிருச்சு என்பதை அறிந்து ஹீரோவின் வீட்டுக்கு ஆள் அனுப்பி வீட்டையே துவசம் செய்கிறார்கள். ஆனாலும் காதல் இன்னமும் பெவிகால் போட்டு ஒட்டியது போலவும் ஆகிறது..

ஹீரோயின் தனக்கு போடப்பட்ட கட்டுக்காவலை மீறி செங்கல் சூளைக்கு ஹீரோவை வரச் சொல்கிறாள். ஹீரோவும் அங்கே போக.. ஒரு ரொமான்ஸ் பாடல்.. அதன் முடிவில் அடிதடி துவங்குகிறது.. தெரியாத்தனமாக முறை மாப்பிள்ளை தாக்கியதில் ஹீரோயின் மயக்கமாகிறாள். ஹீரோவும்தான்.. என்ன செய்வது என்பது தெரியாமல் ஹீரோயின் இறந்துவிட்டாள் என்று பயந்து அவளை உயிருடன் எரித்துவிடுகிறார் முறை மாப்பிள்ளை..

இதன் பிறகு சில உட்டாலக்கடி வேலைகளைச் செய்து நம்மை குழப்பியிருக்கிறார் இயக்குநர். ஹீரோவும் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று நினைத்தால்.. ஒரு சோகப் பாட்டு பாடுகிறார். சரி.. இவர் உயிருடன் இருக்காப்புல போலிருக்கு என்று நினைத்தால் அப்படியே ஹீரோ வீட்டுக்கு வருகிறார்.. அங்கே ஒரு சாவு.. அம்மாவா? அப்பாவா? தங்கையா? என்றெல்லாம் நினைத்து நாம் எதிர்பார்ப்பில் இருக்க.. செத்துக் கிடப்பதே ஹீரோதான்.. தான் இறந்து கிடப்பதே தானே பார்க்கிறார் ஹீரோ..

எந்தக் காட்சியில் இருந்து எந்தக் காட்சிவரையிலும் ஹீரோ ஆவி ரூபத்தில் நமக்கு கதை சொல்லியிருக்கிறார் என்பதை கண்டறிய இன்னொரு முறை படத்தைப் பார்த்தால்தான் தெரியும்..

ஹீரோ கதிராக நடித்திருக்கும் ராஜேஷ்.. நாம் கிண்டல் செய்யவில்லை.. ஆனால் முகத்திரைக்கென்றே ஒரு முகம் வேண்டுமல்லவா..? சரி..போகட்டும்.. நடிப்பு.. ம்ஹூம்.. ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கார். இவருக்கு நடிப்பை வரவழைக்க இயக்குநர் என்ன பாடுபட்டிருப்பாருன்னு நினைச்சா நமக்கு பாவமா இருக்கு..! எப்போதும் ஒரே மாதிரியான முகம்.. காதலியை பார்க்கும்போதும் அதே முகம்.. வீட்டில் அப்பா, அம்மாவுடன் பேசும்போதும் அதே முகம்..

ஹீரோயின் யசோதாவாக கெளரி நம்பியார். மலையாளப் பொண்ணு.. கார்த்திகா நாயருக்கு ஒண்ணுவிட்ட அக்காவாம்.. மலையாளத்தில் சில படங்களில் நடித்த அனுபவம் இருப்பதால் இவர் ஒருத்தர்தான் நடித்திருக்கிறார். காருக்குள் உட்கார்ந்து கொண்டு பயத்துடன் ‘போ போ’ என்று ஹீரோவை விரட்டுவதிலும், செங்கல் சூளைக்குள் காதலுடனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியிலும் கொஞ்சூண்டு படத்தில் இயக்குதல் இருக்கின்றது என்பதைக் காட்டியிருக்கிறார்.

வில்லன் என்றவுடன் ஏதோ பயங்கரமான முகத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும். சரவணப்பொய்கையாக நடித்திருக்கும் ஜே.கே.செல்வா தனது உருட்டும் விழிகளால் ஸ்கிரீன் முழுவதையும் ஆக்கிரமிக்க… ஒளிப்பதிவாளர் என்ன பாடுபட்டிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

‘வலியால் உயில் வலியாய்’ என்ற ஒரேயொரு பாடல் மட்டுமே கேட்க பிடித்தது..  சரவணப் பொய்கையாய் நடித்த வில்லன்தான் இசையமைப்பாளராம்.. வாழ்க வளமுடன்..!

ஒளிப்பதிவில் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் குறை.. பட்ஜெட் பற்றாக்குறையால் 5 டியில் ஷூட் செய்திருக்கிறார்கள் போலும்.. அதையும் டி.ஐ. கூட செய்யாமல் அப்படியே திரைக்கு கொண்டு வந்துவிட்டார்களோ. தெரியவில்லை.. டப்பிங் மிஸ்டேக்குகள்.. கேமிரா கோணங்கள் எங்கயோ இருக்க.. ஆர்ட்டிஸ்ட்டுகள் எதை பார்த்தோ பேசுகிறார்கள்.. டைமிங் இடிக்கிறது.. பல காட்சிகளில் நாடகத்தனமாக படமாக்கப்பட்டுள்ளன.. ஹீரோவின் நண்பர்களை ஊருக்குள்ளேயே தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் போலும்.. சொதப்பலான வசனங்கள்.. சொதப்பலான இயக்கம்..

ஒரேயொரு காட்சி மட்டுமே படத்தில் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அது வில்லன் சரவணப் பொய்கை கோஷ்டி பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொரு வில்லனின் மர அறுவை மில்லுக்கு போய் பஞ்சாயத்து பேசும் காட்சி.. சரவணப் பொய்கையின் கூட்டத்தில் லூஸு மாதிரியிருக்கும் ஒரு ஆளு நைஸாக போய் அந்த எதிர் வில்லனை போட்டுத் தள்ளும் காட்சி மட்டுமே மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கிறது..

மற்றபடி இயக்குநர் சஞ்சீவன், இயக்குதல் பற்றி இன்னும் கொஞ்சம் பாடம் படித்துவிட்டு வருவது நல்லது. ‘வலியுடன் ஒரு காதல்’ என்று டைட்டில் போட்டதினால் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் வலிக்க, வலிக்க உதைத்துதான் அனுப்ப வேண்டுமா..? இது போன்ற தரமில்லாத படங்களை பார்ப்பவர்கள் மறுபடியும் தியேட்டர்களுக்கு எப்படி வருவார்கள்..?

படம் பார்த்தவர்களுக்குத்தான் வலிக்கிறது..!

Our Score