full screen background image

வைரமுத்துவின் விளம்பர வெறிக்கு ஜெயகாந்தன்தான் கிடைத்தாரா..?

வைரமுத்துவின் விளம்பர வெறிக்கு ஜெயகாந்தன்தான் கிடைத்தாரா..?

கவிப்பேரரசு வைரமுத்து. கவிஞர், பாடலாசிரியர், கதையாசிரியர் என்பதையும் தாண்டி தமிழ் மொழியின் மிகப் பெரிய ஆர்வலராகவும் இருக்கிறார். தமிழ்ச் சமூகத்தில் ஒரு தவிர்க்க முடியாத பெரிய ஆளுமையாகவும் வளர்ந்திருக்கிறார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இதுவரையில் 6 முறை பெற்றிருக்கிறார். பல முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதுவரையிலும் பெற்றுவிட்டார். ஆனால் அவர் இன்னமும் பாராட்டுரைகளை தேடி அலைவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

இன்று வெளியாகியிருக்கும் ‘குமுதம்’ பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் கவிப்பேர்ரசு வைரமுத்து ‘குமுதம்’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வரும் சிறுகதைகளை எழுத்தாளர் ஜெயகாந்தன் தொடர்ந்து படித்து வந்ததாகவும்,  அதனைப் பாராட்டி வைரமுத்துவிற்கு கடிதம் எழுதியனுப்பியதாகவும் கூறி அக்கடித்த்தையும் வெளியிட்டிருக்கிறது.

jayakanthan-kumudam-2

கூடவே ‘ஜெயகாந்தன் எழுதிய கடைசியான வாழ்த்துக் கடிதம் இது. ஆவணப்படுத்த வேண்டிய விஷயம்’ என்று சொல்லியிருக்கிறது.

jayakanthan-kumudam-1

போதாக்குறைக்கு சமீபத்தில் வெளிவந்த ஒரு ‘குமுதம்’ இதழை ஜெயகாந்தன் படுத்திருக்கும் நிலையிலேயே தன் கையில் ஏந்தியபடியிருக்கும் புகைப்படத்தையும் ஆதாரத்திற்கு வெளியிட்டிருக்கிறது ‘குமுதம்’.

இன்று ‘குமுதம்’ வெளியான காலை நேரத்திலேயே இதைப் பார்த்துவிட்டு உண்மை தெரியாமல் பலரும் ‘அப்படியா..? வைரமுத்துவுக்கு ஏதோ அதிர்ஷ்டம்தான் போங்க’ என்றெல்லாம் இணையத்தில் பேச்சுக்கள் எழுந்திருந்தன.

இந்தச் சூழலில் திடீரென்று ஜெயகாந்தனின் மகளான எழுத்தாளர் தீபா, தனது முகநூல் பக்கத்தில் இன்று காலை இது குறித்து எழுதிய ஒரு நீண்ட கட்டுரை அத்தனையையும் அடித்து நொறுக்கி கவிப்பேரரசுவின் ஜிப்பாவைக் கிழித்துவிட்டது என்றே சொல்ல்லாம்.

தீபா எழுதியுள்ளது இதுதான் :

“சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது :

இந்த வாரக் ‘குமுத’த்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, ‘அவரது கடைசி எழுத்து’ என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ, எழுதவோ இயலாத நிலையில்தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப் பிடித்துக் கொண்டு பேசும் அவர்கள், எதைச் சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோகூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதிக் கொண்டு வந்து, வாசித்துக் காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போட வராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா..?’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்ற பின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே..!?

அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும், அதுவே பெரிய விஷயம்தான் என்று..!

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது..”

இதன்படி தன்னை ‘எழுத்து சிங்கம்’ ஜெயகாந்தன் பாராட்டுவதுபோல ஒரு பாராட்டுக் கடிதத்தைத் தானே எழுதி அதைக் கொண்டு வந்து குற்றியுரும், குலையிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜெயகாந்தனிடம் காட்டி, ‘ஒரு கையெழுத்துப் போட்டுட்டு போயிருங்களேன்’ என்று கெஞ்சி.. அந்தக் கையெழுத்தையும் அவர் போட முடியாமல் தவிக்க.. “ஏற்கெனவே நீங்க போட்டிருக்குற கையெழுத்தையே இதுல யூஸ் பண்ணிக்கிறோமே..” என்று அவருக்குப் புரிஞ்சதோ, புரியலையோ காதோரம் சொல்லிவிட்டு எஸ்கேப்பான கவிப்பேரரசு வைரமுத்து, இதனை இப்படியொரு திரைக்கதை செட்டப்புடன் ‘குமுதம்’ பத்திரிகை துணையுடன் வெளியிட்டிருக்கிறார்.

இதெல்லாம் அவருக்குத் தேவைதானா..? அவர் பார்க்காத பெருமையா..? புகழா..? வாங்காத விருதுகளா..? எதற்கு இந்த திருட்டுத்தனம்..? இப்படியெல்லாமா புகழுக்கும், பெருமைக்கும் அலைவார்கள் இலக்கியவாதிகள்..?

வைரமுத்துவின் இலக்கிய வாழ்க்கையில் மிகப் பெரிய அவமானம்  நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும்..!

Our Score