full screen background image

“மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்…” – தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!

“மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்…” – தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!

கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வெற்றி தமிழர் பேரவை சார்பில் ‘கவிஞர்கள் திருநாள்’ விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகையில் நேற்று நடைபெற்றது. 

விழாவுக்கு, குஜராத் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் வைரமுத்துவை வாழ்த்தி பேசும்போது, “வைரமுத்து சிறிய மனிதர் அல்ல. பார் போற்றும் மிக பெரிய கவிஞர். 7 வயதில் கவிதை எழுத தொடங்கியவர். அவர் 70 வயதிலும் கவிதை எழுதுவார். 100 வயதிலும் கவிதை எழுதுவார். ராமானுஜரை போன்று பல ஆண்டுகள் கவிதை எழுதுவார்..” என்றார். 

விழாவில் 2015-ம் ஆண்டுக்கான ‘கவிஞர்கள் திருநாள்’ விருது கவிஞர் சல்மாவுக்கு வழங்கப்பட்டது. விருதினை, வெற்றி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் கவிஞர் வைரமுத்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

வைரமுத்து தன் பேச்சில், “என் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வைரமுத்துவின் பெருமைக்காக அல்ல. ஏனென்றால் எனக்கு என்று எந்த ஒரு பெருமையும் இருப்பதாக நான் ஒரு போதும் கருதாதவன். நான் ஒரு வேலைக்காரன். தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன்னை மறந்து வேலை செய்கிற ஒரு வேலைக்காரன். இந்த வேலைக்காரனுக்கு என்ன பெருமை இருக்க போகிறது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் மிக பெரிய பின்னடைவு எது என்று யோசித்து பார்த்தேன். கணிப்பொறிகூட பின்னடைவு அல்ல. கணிப்பொறியில் கவிதையை தட்டி விட்டால் கவிதை வருகிறது. செல்போனிலும் கவிதை வருகிறது. ‘வாட்ஸ்-அப்’பிலும் கவிதை வருகிறது. மொழி எங்கும் இருக்கிறது. மொழி எந்த இடத்தில் இல்லை என்றால் மதுசாலைகளில்தான்.

மது குடிக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக மனித வாழ்க்கை துண்டாடப்படுகிறது. விழிம்புநிலை பின்னுக்கு தள்ளப்படுகின்றன. ஒரு செய்தி 4 வயது சிறுவன் ஒருவன் மது குடிக்குமாறு பாதகர்கள் கட்டாயப்படுத்தி ஊற்றி இருக்கிறார்கள் என்று.. கோவையில் ஒரு பள்ளி மாணவி குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார் சீருடையோடு என்கிறபோது பாதிப்பு.

இதை பார்த்தால் அடுத்த தலைமுறையில் குடிக்காதவன் எத்தனை பேர் இருப்பான்.. என்று யோசிக்க வைக்கிறது. ஒரு ஊரில் குடிகாரன் யார்? என்று கேட்டால், கோடி வீடு என்றார்கள் ஒரு காலத்தில், இன்றைக்கு குடிக்காதவன் வீடு எது? என்றால் தேடி பார்த்து சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மது மனித வளத்தை குறைக்கிறது. நாகரீகத்தை குறைக்கிறது. இலக்கியவாதிகளை குறைக்கிறது. கல்வியை குறைக்கிறது. போரில் அதிகமான விதவைகள் உண்டானது இலங்கையில்.. பாரினால் அதிகமான விதவைகள் உண்டாவது தமிழ்நாட்டில். 

அரசுக்கு ஒரு கோரிக்கை, இந்த நாடு மேம்பட வேண்டும் என்றால், நம்முடைய மனித வளம் முழுமை பெற வேண்டும் என்றால் மதுச்சாலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதை என்னுடைய பிறந்த நாள் செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தலைமுறையை பாதுகாப்பதற்கு மதுச்சாலைகளை மூடுவது அவசியம்…” என்று குறிப்பிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில், எழுத்தாளர் சிவசங்கரி, வெற்றி தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ம.முத்தையா, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் அயல் உலக தொடர்பு குழு தலைவர் பெ.ராஜேந்திரன், சுவிட்சர்லாந்து நாட்டின் தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஷ், கபிலன் வைரமுத்து ஆகியோர் கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி பேசினர். முடிவில் மதன் கார்க்கி நன்றி கூறினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வெற்றி தமிழர் பேரவை சென்னை மாநகர செயலாளர் வி.பி.குமார் செய்திருந்தார்.  நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சரண், தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், மாவட்ட தலைவர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, திரைப்பட நடிகர் ராஜேஷ் உள்பட பலரும் கலந்துகொண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Our Score