பந்தல் தொழிலாளி குடும்பத்தில் மகனுக்கு பெண்ணெடுத்த நடிகர் வடிவேலு..!

பந்தல் தொழிலாளி குடும்பத்தில் மகனுக்கு பெண்ணெடுத்த நடிகர் வடிவேலு..!

நேற்று முன்தினம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற வைகைப் புயல் வடிவேலுவின் மூத்த மகன் சுப்ரமணியனின் திருமணம் திரையுலகத்தினரையும், மீடியாவையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆச்சரியத்திற்கு முதல் காரணம் எந்த சினிமாவுலக நண்பர்களையும் அழைக்காமல் நடத்தியது.. இரண்டாவது அவர் தேர்ந்தெடுத்த மணமகள் திருப்புவனத்தைச் சேர்நஅத ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும்தான்..

இது குறித்து வடிவேலு அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “சுப்பிரமணியன் எனக்கு மூத்த மகன். தலைமகன் என்பதால் தை மாதம் திருமணம் நடத்தக் கூடாது என்று சொன்னார்கள். மாசி மாதம் அவனுடைய பிறந்த மாதம் என்பதால், மாசியிலும் திருமணம் நடத்த முடியாது. அதனால்தான் இந்த மாதத்தில் திருமணத்தை நடத்தினோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.

குறுகிய காலத்தில் என் மகன் திருமணத்தை நடத்தியதால், சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்க முடியவில்லை. அப்படி அழைக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் வேண்டும். அதனால்தான் சொந்த பந்தங்களை மட்டும் அழைத்து, திருமணத்தை நடத்தினேன். என் மகனையும், மருமகளையும், சொந்தபந்தங்கள் அனைவரும் மனதார வாழ்த்தினார்கள்.

மருமகள் புவனேஸ்வரி, என் மனைவி விசாலாட்சி வழியில் உறவுப் பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு பந்தல் தொழிலாளி. நான் ஏழையாக பிறந்ததால், ஏழை வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன்.

அன்னை மீனாட்சி அம்மன் அருளில், நான் பிறந்த மண்ணில்தான், என் மகள், மகன் இருவருக்கும் சம்பந்தம் செய்திருக்கிறேன். என்னை பெற்ற தாய் 80 வயதை தாண்டிவிட்டார். அவரால் நடக்க முடியவில்லை. பேரன் திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டார். நடக்க முடியாததால், திருமண மண்டபத்துக்குக்கூட அவரால் வர முடியவில்லை. அதனால் திருமணம் முடிந்த பின், மகனையும், மருமகளையும் மணக்கோலத்தில் அழைத்துப்போய், என் அம்மாவிடம் ஆசி பெற செய்தேன்.

நான் ஒரு கிராமத்தை தத்து எடுக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை. இப்போது ஒரு ஏழை குடும்பத்தை தத்து எடுத்திருக்கிறேன். ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக ஆக்கிக் கொண்டதில் பெருமைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அப்படியொரு வறுமை நிலையில் இருந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்துகொண்டதில் எனக்குச் சந்தோஷம்..” என்று சொல்லியிருக்கிறார். 

அதோடு மணமகளுக்கு இன்னமும் திருமண வயது ஆகவில்லை என்று யாரோ ஒரு வடிவேலுவுக்கு வேண்டிய நல்லவர் சமூக நலத் துறைக்கு போன் செய்து சொல்ல.. அந்த அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் படை திருமண மண்டபத்திற்கு ஓடி வந்து விசாரணை நடத்தி உண்மை தெரிந்து பின்பு மணமக்களை வாழ்த்தி சாப்பிட்டுவிட்டு  போனார்களாம்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு, நிஜத்தில் ஹீரோதான்..!

Our Score