full screen background image

வடிவேலுவின் புதிய படத்திற்கு எழுந்துள்ள புதிய பிரச்சினை..!

வடிவேலுவின் புதிய படத்திற்கு எழுந்துள்ள புதிய பிரச்சினை..!

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதைதான் வடிவேலுவுக்கு நடக்கிறது.

இப்போதுதான் தனக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை முறியடித்துவிட்டு களத்தில் குதித்திருக்கிறார் வடிவேலு. அதற்குள்ளாக புதிய பிரச்சினையொன்று அவரது புதிய படத்திற்கு முளைத்துள்ளது.

தற்போது வடிவேலு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவிருக்கும் முதல் படம் இயக்குநர் சுராஜின் இயக்கும் படம்தான். லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 10-ம் தேதி துவங்குகிறதாம்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பில் புதிதாக பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்தப் படத்திற்கு தற்போது ‘நாய் சேகர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் கவுன்சிலில் இதே பெயரில் ஏற்கெனவே ஒரு படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய படத்தில் காமெடியன் சதீஷ் ஹீரோவாகவும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி புகழ் பவித்ரா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். அந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறதாம். அதனால் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்கிற பெயர் வைக்க முடிவு செய்து தலைப்பையும் பதிவு செய்துவிட்டார்கள்.

இந்நிலையில் வடிவேலுவின் புதிய படத்தின் தலைப்பும் இதுதான் என்பதைக் கேட்டு சதீஷ் படத்தைத் தயாரிக்கும் படக் குழு அதிர்ச்சியடைந்துவிட்டது.

நாய் சேகர்’ என்கிற தலைப்பை விட்டுக் கொடுக்குமாறு வடிவேலு கேட்டும், “எங்க படத்திற்கு அந்த தலைப்புதான் முக்கியம். அதனால் ‘நாய் சேகர்’ தலைப்பினை விட்டுக் கொடுக்க முடியாது…” என்று கூறிவிட்டார்கள் முதல் படத்தின் தயாரிப்பாளரான ஏ.ஜி.எஸ். நிறுவனத்தினர்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த ‘நாய் சேகர்’ என்ற பெயரை சினிமாவில் பயன்படுத்தியதே இயக்குநர் சுராஜ்தான். அவர் இயக்கத்தில் சுந்தர்.சியும், வடிவேலுவும் இணைந்து நடித்திருந்த ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயரே இந்த ‘நாய் சேகர்’தான்.

இதனால்தான் இந்தப் பெயரை வடிவேலுவின் இந்தப் புதிய படத்திற்கு வைக்க இயக்குநர் சுராஜ் விரும்பியிருக்கிறார். ஆனால் இந்தப் பெயரை உருவாக்கியவருக்கே அந்தப் பெயரை தன்னுடைய சொந்தப் படத்திற்கு வைக்க முடியாத சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.. என்ன செய்ய..? தொழிற்சங்கங்களின் விதிமுறைகள் அப்படியிருக்கின்றன.

ஆக இப்போது வடிவேலு படத்திற்குப் புதிய தலைப்பு தேடும் பணி துவங்கியிருக்கிறதாம்.

Our Score