தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை.’
இந்த ‘வட சென்னை’ படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர் குமார், பவன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்தப் படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
மேலும் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ தேசிய விருதை பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ திரைப்படமும் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘வட சென்னை’ படத்திற்கு ‘காலா’, ‘கபாலி’ படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இது இவருக்கு 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது…!
இப்படத்தின் பாடல்கள் நேற்று இணையத்தில் வெளியானது. தனுஷ், சித்ஸ்ரீராம் மற்றும் கானா பாடல்களை பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
படத்தின் பாடல்கள் வெளியான நிமிடத்தில் இருந்து இப்போதுவரையிலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
பாடல்கள் யூ டியூப் ட்ரெண்டிங்கிலும் மற்றும் Saavn, Jio மியூசிக் ஆகியவற்றிலும் அதிக முறையில் கேட்கப்பட்டு வருகின்றது. மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதனால் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.









