‘வாலு’ திரைப்படம் கடைசிகட்ட முயற்சியாக ஆகஸ்ட் 14-ல் ரிலீஸாம்..!

‘வாலு’ திரைப்படம் கடைசிகட்ட முயற்சியாக ஆகஸ்ட் 14-ல் ரிலீஸாம்..!

அதோ, இதோ என்று இழுத்துக் கொண்டிருந்த ‘வாலு’ படம் கடைசி முயற்சியாக ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் என்று சிம்புவே அறிவித்துள்ளார்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் சிம்பு, ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வாலு’. கடந்த 2 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு முடிவடைந்திருக்கும் இந்தப் படத்திற்கு சோதனைகளெல்லாம் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருந்தது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஹன்ஸிகாவுடன் காதல் ஆரம்பித்து, பின்பு நடுவிலேயே பிரிவு ஏற்பட்டதும் இதே படத்தில்தான். ஆனால் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை என்பதுதான் சிம்புவுக்கு, காதல் தோல்வியைவிட பெரிய சோகம்.

இந்தப் படத்தின் நீண்ட நாள் ஷூட்டிங் காரணமாய் வாங்கிய கடன் குட்டி மேல் குட்டி போட்டு குட்டி தீவு போல உருவாகிவிட்டதால் படத்தை ரிலீஸ் செய்யவே பணமில்லை என்று கையை விரித்துவிட்டார் தயாரிப்பாளர்.

இதனால் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தரே தனது மகனுக்காக களத்தில் இறங்கி தானே ‘வாலு’ படத்தை வாங்கி வெளியிட முன் வந்தார். நல்ல முயற்சிதான் என்றாலும் இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகையைக் கொடுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக கோர்ட் படியேற.. இதுவரையில் 4 முறை வெளியீட்டு தேதி அறிவித்த பின்பும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார்கள் அப்பாவும், மகனும்.

கோர்ட்டில் ‘சமரசமாக போகலாமே’ என்று நீதிபதி அட்வைஸ் செய்ய.. இதையே காரணமாக எடுத்துக் கொண்டு கடன் வாங்கியவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி சில, பல லடங்களை கொடுத்தும், சில லடங்களுக்காக எதிர்கால தொழில் உத்தரவாதத்தை வழங்கியும் பேச்சுவார்த்தையை நல்லதொரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து ‘வாலு’ திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், தியேட்டர் அதிபர்கள் தனது ‘வாலு’ படத்தின் மீது ஆர்வம் கொண்டு தேடி வந்து படத்தினை கேட்பதாகவும் நடிகர் சிம்பு தனது முகநூல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ மீண்டும் வாலுத்தனம் செய்யாமல் ‘வாலு’ படம் வெளிவந்தால் சரிதான்..!

Our Score