full screen background image

20-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் ‘வாய்தா’ திரைப்படம்

20-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் ‘வாய்தா’ திரைப்படம்

கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போதுதான் மெல்ல, மெல்ல தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர்வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது ‘வாய்தா’ என்ற திரைப்படம்.

வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், தமிழகத்தின் மூத்தத் தலைவருமான சி.மகேந்திரனின் மகனான, புகழ் மகேந்திரன் இந்த ‘வாய்தா’ படத்தின் மூலமாக ஹீரோவாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் ‘ஜோக்கர்’, ‘கே.டி.. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘அசுரன்’, ‘வட சென்னை’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்திலும் பணியாற்றியுள்ளார்.

அறிமுக இசையமைப்பாளரான சி.லோகேஷ்வரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சி.எஸ்.மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி கோர்ட் கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை’ என்ற வாசகமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நடிகர் நாசர் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம், இதுவரையிலும் 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Our Score