full screen background image

வாய்மை – சினிமா விமர்சனம்

வாய்மை – சினிமா விமர்சனம்

இந்தியாவில் தூக்கு தண்டனை தேவையா..? தேவையில்லையா..? என்ற வாதப் பிரதிவாதங்கள் உச்சநீதிமன்றத்தில நடந்து வரும் வேளையில், சந்தேகத்தின் பேரிலேயே தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றில் நிறுத்தப்படும் அப்பாவிகளுக்காகவாவது அந்த்த் தண்டனை அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

தேசியக் கட்சியின் தேசியத் தலைவர்  ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும்போது திடீரென்று சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்தக் கொலை எதிரில் இருக்கும் கட்டிடத்தின் உச்சியில் இருந்து பறந்து வந்த ஒரு துப்பாக்கிக் குண்டினால் நடந்திருக்கிறது. அப்போது அந்தக் கட்டிடத்தில் வாட்ச்மேனாக இருக்கும் பிருத்விராஜன் போலிஸிடம் சிக்கிக் கொள்கிறார்.

தான் கொலை செய்யவில்லை என்று சொல்லியும், அந்த நேரத்தில் அந்த பில்டிங்கில் இருந்தது.. வேறு யாரும் உடன் இல்லாதது.. துப்பாக்கி இருந்த இடத்தில் இருந்து அவர் ஓட முயற்சித்தது போன்ற சில காரணங்களைக் காட்டி ஒருவேளை இவராக இருக்கலாம் என்கிற சந்தேக சாட்சியத்தின் அடிப்படையில் பிருத்விராஜன் குற்றவாளியாக கருதப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளாகி தூக்கிலிடப்படுகிறார்.

கூடவே இவரது தாயார் பூர்ணிமாவும் இந்தக் கொலைக்கு உடந்தை என்று குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொள்கிறார். இவர் மீதான குற்றங்களுக்கான சாட்சியங்களும், இவரையும் தூக்கு மேடைக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவே தெரிய வருகிறது.

சுதந்திரம் அடைந்த இத்தனையாண்டுகளில் ஒரு பெண்கூட இந்தியாவில் தூக்கிலிடப்படவில்லை என்பதால் வழக்கத்திற்கு மாறாக.. சட்டத்திற்கு விரோதமாக.. 12 ஜூரிகளைக் கொண்ட குழுவை நியமிக்கிறார் விசாரணை நீதிபதி. அவர்கள் இந்த வழக்கை விசாரித்து ஒருமித்த கருத்தோடு பூர்ணிமாவை நிரபாரதி அல்லது குற்றவாளி என்று சொன்னால் அதனை தான் அப்படியே ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறார் நீதிபதி.

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் அந்த 12 பேரும் ஒரு மூடப்பட்ட அறைக்குள் அமர்ந்து தங்களுக்குள் கலந்தாலோசிக்கிறார்கள். இவர்கள் என்ன முடிவெடுத்தார்கள்..? பூர்ணிமா தப்பித்தாரா..? உண்மை குற்றவாளி யார்..? என்பதெல்லாம் இதற்கு பின்னான திரைக்கதையாகும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களெல்லாம் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதனால் இவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் அனைத்துமே நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருந்தன. இதனால்தான் அனைவருமே குற்றவாளிகளாக சி.பி.ஐ.யின் சிறப்பு கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்கள்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சி.பி.ஐ.யின் காவலில் இருந்தபோது தடா சட்டப் பிரிவின்படி காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கும் வாக்குமூலமே செல்லுபடியாகும். அப்போது சி.பி.ஐ.யில் கண்காணிப்பாளராக இருந்த தியாகராஜன் என்பவரே குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடத்தில் வாக்குமூலம் பெறும் அதிகாரம் பெற்ற அதிகாரியாக இருந்தார்.

இவரிடத்தில்தான் தற்போது சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட பலரும் வாக்குமூலம் அளித்தனர். அப்படி பேரறிவாளன் வாக்குமூலம் அளித்தபோது, சிவராசனுக்கு தான் ரேடியோ பேட்டரிகளை வாங்கிக் கொடுத்த போதிலும், அதனை எதற்காக சிவராசன் வாங்கித் தரச் சொன்னார் என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றுதான் கூறியிருக்கிறார். ஆனால் எஸ்.பி. தியாகராஜன் அதைப் பதியாமல் விட்டுவிட்டதாக இப்போது கூறியிருக்கிறார்.

எதற்காக சிவராசன் பேட்டரி கேட்டார் என்பது தனக்கு தெரியாது என்றும், அது கொலைக்கான குண்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விஷயமும் தனக்கு அப்போது தெரியாது என்றும் பேரறிவாளன் கூறியதால், அது ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக அல்லாமல், ஒரு விடுதலை வாக்குமூலமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால், அந்த வாக்குமூலத்தை தான் பதிவு செய்தபோது, தொழில் ரீதியான ஒரு தர்மசங்கடம் தனக்கு ஏற்பட்டதாக தியாகராஜன் கூறுகிறார். தான் அப்படிச் செய்ததை ஒரு தவறு என்று கூடச் சொல்லலாம் என்றும் அவர் சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், தமது தாக்குதல் திட்டம் எவருக்கும் தெரியாது என்று ஒரு வயர்லஸ் தொடர்பில் சிவராசன் கூறிய தகவல் விசாரணைக் குழுவுக்கு கிடைத்தபோது, முன்னர் தனக்கு கொலை பற்றி தெரியாது என்று பேரறிவாளன் கூறியது உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தியாகராஜனின் இந்த வாக்குமூலத்தின்படி பார்த்தால், எதற்கு என்று தெரியாமலேயே ஒரு சாதாரண ரேடியோ பேட்டரியை வாங்கிக் கொடுத்த ஒரே காரணத்திற்காக பேரறிவாளன் என்கிற அறிவு, 25 வருடங்களாக சிறையில் வாடி வருவது எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம் என்பதை புரிந்து கொள்ளலாம். நல்லவேளையாக உச்சநீதிமன்றம் இவருடைய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிவிட்டது. இல்லையெனில் இந்திய நீதித்துறையே மிகப் பெரிய அவமானத்திற்குள்ளாகியிருக்கும்.

இது போன்ற சின்னச் சின்ன தவறுகள் அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்தப்பட்டு, ஆள்பவர்களையும், ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த அப்பாவிகளை சிக்க வைத்துவிடுவதெல்லாம் இந்திய நீதித்துறையிலும், காவல்துறையிலும் சர்வ சாதாரணம். அப்படியொரு வழக்குதான் பிருத்விராஜனின் இந்த வழக்கு.

ராம்கியின் தலைமையில் கூடியிருக்கும் 12 ஜூரிகளில் இந்தத் தண்டனைக்கு எதிராக முதலில் குரல் கொடுக்கிறார் சாந்தனு. பின்பு இவரே தன்னுடைய வாதங்களை திறமையாக அனைவரின் முன் எடுத்து வைத்து எப்படி 11 பேரையும் கவர்ந்து விடுதலைக்கு உத்தரவாதம் பெறுகிறார் என்பதை மிகச் சுவையான திரைக்கதையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.செந்தில்குமார்.

துவக்கம் முதலே பூர்ணிமாவுக்கு எதிராகவே பேசி வரும் முன்னாள் ராணுவ அதிகாரி தியாகராஜனுக்கு மட்டுமே அதிகப்படியான வசனங்களும், காட்சிகளும் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அவரவர் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கின்றன.

“51 பேரைக் காப்பாத்த 49 பேரை கொல்வீங்க. சட்டம் கொல்லுதா..? காப்பாத்துதா..? காசு இருக்கிறவன் தப்பிச்சிருவான். இல்லாதவன் மாட்டிக்குவான். இதுதானே உங்க சட்டம். சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, ஜெயிலு, தூக்கு, எல்லாமே இங்கே இல்லாதவனுக்குத்தான்.. எல்லா தண்டனையும் ஏழைகளுக்கு மட்டும்தான்..” – இப்படி சாட்டையடியாய் வசனங்கள் ஒலிக்கின்றன.

அவ்வப்போது இடையிடையே ரிலாக்ஸுக்காக கவுண்டமணியும், ஊர்வசியும் அடிக்கும் வசன காமெடியும் தியேட்டரில் கைதட்டலை பெறுகிறது. கவுண்டரின் வசனங்களில் அவரது பேமஸான பன்ச் டயலாக்கும் தவறாமல் இடம் பிடித்திருக்கிறது.

கண்காணிப்பாளர் தியாகராஜன் கேரக்டரில் பாக்யராஜே நடித்திருக்கிறார். தான் செய்த தவறினால் ஒரு உயிர் அநியாயமாக கொலை செய்யப்பட்டதையும், இன்னொரு உயிரின் கழுத்தில் கயிறு தொங்குவதையும் உணர்ச்சிகரமான வசனத்தின் மூலம் தேவையான இடத்தில், தேவையானவிதத்தில் அளவான நடிப்பின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

“பரிதாப உணர்வில் இதனை நாம் அணுக வேண்டாம். உண்மையின் அடிப்படையிலேயே இதனை அணுகுவோம்…” என்ற சாந்தனுவின் பேச்சில் இருக்கும் நியாயத்திற்கு ஏற்றாற்போல பல வசனங்கள் படத்தின் ஆணிவேராக இருக்கின்றன.

“உற்றார், உறவினர்கள் துணையில்லாமல் தாயுடன் இருப்பவன்.. எந்த அரசியல் இயக்கத்தையும் சேராதவன்.. மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவன்.. அதிகம் படிக்காதவன்.. துப்பாக்கியை நேரில் பார்த்திராதவன் எப்படி அந்தக் கொலையைச் செய்திருப்பான் என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் இருந்தும் நீதிமன்றம் எதையும் நினைத்துப் பார்க்காமல் அவனை கொலை செய்துவிட்டது. இப்போது அந்தக் கேள்விகள் அனைத்தும் இந்த்த் தாய்க்கும் பொருந்தும். நாமும் அந்தக் கொலையை செய்துவிட வேண்டாம். யோசிப்போம்..” என்கிறார் சாந்தனு.

சட்டம் குற்றத்தை ஆராயட்டும். நாம் குற்றத்திற்கான பின்னணியை பார்ப்போம் என்கிற நோக்கத்தில் ஜூரிகளின் இந்த அனைத்துவித பேச்சுக்களும், சண்டைகளும், முட்டல், மோதல்களும் ஒரு சுவாரஸ்யமான கதைக்களனை கொடுத்திருக்கின்றன.

வெறும் ஒன்றரை மணி நேரமே கொண்ட இந்தப் படத்திற்கு பெரும் தடையே பாடல் காட்சிகள்தான். அவை இல்லாமலும் படம் பார்க்க திருப்தியாக்த்தான் இருந்திருக்கும். நீதிபதி பி.கண்ணன் வித்தியாசமாக நீதிமன்றத்தின் உச்சத்தில் அமர்ந்து தன் டென்ஷனை குறைப்பதும்.. எல்லாம் கூடிவரும் நேரத்தில் தான் வாழ விரும்பவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும்விதமாக தான் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக பூர்ணிமா சொல்வதும் நல்லதொரு திருப்பம்.

சில காட்சியமைப்புகள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக வருவதால் அவற்றை மட்டும் நீக்கியிருந்தாலும், சில கதாபாத்திரங்களின் நடிப்புத் திறனை வேறு மாதிரியாக மாற்றியிருந்தாலும் படம் இன்னும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

படத்தின் துவக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டோம்’ என்கிற கார்ட்டூன் வடிவ பாடல் காட்சி அசத்தல். பாடியவரின் குரலும், பாடல் வரிகளும், காட்சியமைப்புகளும் கண்ணைக் கவர்கின்றன. இயக்குநரின் இந்தச் சிறப்பான படைப்பாக்கத்திற்கு நமது பாராட்டுக்கள்.

கவுண்டமணி, ஊர்வசி, தியாகராஜன், பானு, ரோஸ், வெளிநாட்டுக்காரர், வெங்கட் என்று ஜூரிகள் அனைவரும் ‘நாட் கில்ட்டி’, ‘கில்டி’ என்கிற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் ஒரு உயிரைக் காப்பாற்றும் அல்லது போக்கும் மிகப் பெரிய வார்த்தை என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

தூக்கு தண்டனை என்பதே ஒரு அதிகாரப்பூர்வமான கொலைதான் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு கொலைக்கும் இன்னொரு கொலை தீர்வாகாது என்பதை இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இருப்பவர்களும், ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு இந்த ஒரு படம் மட்டுமல்ல.. இன்னும் நிறைய திரைப்படங்கள் வந்து மக்கள் மனதை மாற்ற வேண்டிய தேவையிருக்கிறது. இதனாலேயே இந்தப் படம் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாகவும், ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட வேண்டிய படமாகவும் இருக்கிறது.

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்..!

Our Score