இன்னும் என்னென்ன ரகசியங்களை இயக்குநர்கள் மனதுக்குள்ளேயே வைத்திருப்பார்களோ தெரியவில்லை..?
“தன்னுடைய புகழ் பெற்ற படமான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்..” என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார்.
இன்று காலை நடந்த தனது புதிய படத்தின் பிரஸ்மீட்டில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், என் படங்களுக்கு எப்போதும் இளையராஜாதான் டைட்டில் வைப்பார். அவரே என்னுடைய இந்தப் புதிய படத்திற்கும் டைட்டிலை தயார் செய்து கொடுப்பார்…” என்றார் மகேந்திரன். “என்னுடைய படங்களுக்கு வசனமே இளையராஜாவின் இசைதான்..” என்று வாயாரப் புகழ்ந்த மகேந்திரன் “நான் திரையில் மெளனமாக விடும் இடங்களிலெல்லாம் இளையராஜா தன் இசையால் அதனை வசனங்களாக மாற்றிவிடுவார். இதுதான் என் படங்களின் சிறப்பு..” என்றார் மகேந்திரன்..
மகேந்திரனின் இந்தப் படமும் எழுத்துச் சிற்பி புதுமைப்பித்தனின் கதைதான் என்பதால் நிச்சயம் தலைப்பு வித்தியாசமாகத்தான் தேவைப்படும். புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ கதையைத்தான் உதிரிப்பூக்களாக எடுத்தார் மகேந்திரன். ஆனால் படமாக பார்க்கும்போது ‘சிற்றன்னை’க்கும், ‘உதிரிப்பூக்களுக்கும்’ மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும். அதுதான் இயக்குநர் மகேந்திரனின் சிறப்பு. கதையின் அடித்தளத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு திரைமொழியில் புதுமையாக, எந்தக் காலத்திலும் ரசித்துப் பார்க்கும்படி கொடுத்த்து அவரது தனித்திறமை. அதனால்தான் ‘உதிரிப்பூக்கள்’ இன்றைக்கும் தமிழ்ச் சினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது..!
எப்போதும் இந்தக் கூட்டணி இப்படியே இருக்கட்டும்..! புதிய படத்தின் தலைப்பை கேட்கவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்..!