தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், தற்போது மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார்..!
1978-ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படம் இன்றைக்கும் தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியப் படமாக காட்சியளி்க்கிறது.
இதனைத் தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’, ‘அழகிய கண்ணே’, ‘கண்ணுக்கு மை எழுது’, ‘ஊர்ப்பஞ்சாயத்து’, ‘சாசனம்’ ஆகிய 12 படங்களை இயக்கியிருக்கிறார் மகேந்திரன். இப்போது 13-வது படமாக இதனை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்தப் படத்திற்கு இன்னமும் டைட்டில் வைக்கவில்லையாம். இசை இசைஞானிதான். படத்தின் கதை புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையாம். அது என்ன கதை என்பதை பத்திரிகையாளர்கள் எப்படி, எப்படியெல்லாம் கேட்டும் மகேந்திரன் சொல்லவில்லை.. “ஒரு குடும்பத்தில் நடக்கும் கதைதான்.. உங்களுக்கெல்லாம் தெரிந்த கதைதான்..” என்றார் இசைஞானி இளையராஜா.
படத்தின் ஒளிப்பதிவை சஞ்சய் லோக்நாத் மேற்கொள்கிறார். இவர் புகழ்பெற்ற பழம் பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தின் மகன். எடிட்டிங் காசி விஸ்வநாதன். சரவணன் என்ற தயாரிப்பாளர் இதனைத் தயாரிக்கிறார்..!
இப்போதுதான் கேமிரா கவிஞர் பாலுமகேந்திரா ‘தலைமுறைகள்’ படம் எடுத்து இப்போதைய இளம் இயக்குநர்களுக்கு தான் சளைத்தவரில்லை என்பதை நிரூபித்தார். இவருக்கடுத்து இருக்கின்றவர்களில் புதிய அலைவரிசை இயக்குநர்களில் மூத்த இயக்குநரான மகேந்திரனும், இப்போது இயக்க வந்திருப்பது தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு பெருமைக்குரிய விஷயம்..