‘உத்தமவில்லன்’ திரைப்படத்தின் அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்துவிட்டதால் படம் இன்று மதியக் காட்சி முதல் வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் திருப்பதி பிரதர்ஸிடமிருந்து பணம் பெற்று தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் நேற்று வெளியிட இருந்தது.
படம் ஏப்ரல் 30-ம் தேதியன்று துபாய், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகிவிட்டது. ஆனால் திடீரென்று இந்தப் படம் தயாரிக்க பணம் கொடுத்த பைனான்ஸியர்களின் திடீர் முட்டுக்கட்டையால் படம் நேற்றைக்கு வெளியாகவில்லை.
ஈராஸ் நிறுவனத்திடமிருந்து படத்தின் விநியோக உரிமையை திரும்பி வாங்கிய திருப்பதி பிரதர்ஸ் அதனை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்குக் கொடுத்தார்கள். இதனால் ஈராஸ் நிறுவனம் கொடுத்திருந்து முன் பணத்தையும், படத்தின் தயாரிப்புச் செலவுக்காக கடனாக வாங்கியிருந்த பெருந்தொகையையும் உடனே செட்டில் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
இதற்கிடையில் பைனான்ஸியர்கள் கொடுத்த லேப் கடித்த்தால் டிஜிட்டல் நிறுவனங்கள் படத்தை திரையிட மறுத்த்தால், தியேட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தார்கள் தியேட்டர் அதிபர்கள். அனைத்து தியேட்டர்களிலும் ரீபண்ட் செய்யப்பட்டது. அடுத்த ஷோ, அடுத்த ஷோ என்று நம்பிக்கையுடன் நேற்று முழுவதும் கமலின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
இதற்கிடையில் ஏப்ரல் 29-ம் தேதி மதியத்திலிருந்தே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது குறித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. உடனடியாக பைனான்ஸியர்களுக்கு கொடுப்பதற்கு பணமில்லை என்று திருப்பதி பிரதர்ஸ் நிறவனம் தெரிவித்த்து. படத்தை ரிலீஸ் செய்தவுடன் கிடைக்கும் வசூல் தொகையில் தருவதாகச் சொன்னது. ஆனால் இதனை பைனான்ஸியர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனாலேயே இந்தப் பேச்சுவார்த்தை 3 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று இரவு ஒரு மணி நேர இடைவெளிக்கு பின்பு மீண்டும் நள்ளிரவில் துவங்கிய பேச்சுவார்த்தையின்போது பட அதிபரான ஞானவேல்ராஜாவின் உதவியோடு, வேறு சில தயாரிப்பாளர்களின் உதவியினாலும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வேண்டிய பண உதவி கிடைத்துள்ளது.
இதனை வாங்கிக் கொண்ட ஈராஸ் நிறுவனமும், மற்ற பைனான்ஸ் நிறுவனங்களும் லேப் லெட்டரை விலக்கிக் கொள்ள படம் இன்றைக்கு மதியத்தில் இருந்து ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் சேத்துப்பட்டில் இருக்கும் ஈராஸ் நிறுவனத்தில் இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, ஞானவேல்ராஜா, மதுரை அன்பு, சி.வி.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சரத்குமார் பேசும்போது, “உத்தம வில்லன்’ படத்திற்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் இப்போது முடிவடைந்துவிட்டது. ‘கொம்பன்’ படத்திற்கு பிறகு திரையுலகினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினையில் தலையிட்டு பேசி தீர்த்திருக்கிறோம். இனிமேல் இது போன்ற நிலைமைகள் வராமல் தடுக்க திரையுலகமே தகுந்த முன்னேற்பாடுகளை செய்யப் போகிறது.. இப்படம் வெளியாகாமல் இருந்ததுக்கு எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் இல்லை… இந்தப் பிரச்சினை ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து சங்கத்தினருக்கும் நன்றி..” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “நான் ஒரு சாதாரண ரசிகனாக இருக்கும்போது கமல் ஸார் படம் வெளியானால், முதல் நாள் முதல் காட்சிக்கே சென்றுவிடுவேன். ஆனால் இன்று ஒரு தயாரிப்பாளராக கமல் ஸார் நடித்த படத்தை வெளியிடாமல் போனதுக்கு நானும் ஒரு காரணமாக இருந்துவிட்டேன். இதற்காக அவரது ரசிகர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு கொடுத்திருக்கிறது. படத்தின் பீட்பேக் எனக்கு வந்து கொண்டேயிருக்கிறது. படித்தேன். நன்றாக எழுதியுள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்றைய மதிய காட்சிகளில் இருந்து இப்படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, இப்படம் வெளியாக கடைசி நேரத்தில் எனக்கு பெரும் உதவி புரிந்த ஞானவேல்ராஜா, சி.வி.குமார், மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானவேல்ராஜாவின் உதவியை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது..” என்றார்.
நண்பர்களுக்குள் இந்த உதவியைக்கூட செய்யவில்லையெனில் எப்படி..? கஷ்ட காலத்தில் இன்னொரு தயாரிப்பாளருக்கு மனமுவந்து முன் நின்று உதவிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நன்றி..!