ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன் சார்பாக எம்.மெளலி ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் ஆதித்யா கதிர், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மார்க் சாய், இசை – கிரண் ஜோஸ், அறிமுக இயக்குநர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் தலைப்பே இது ஒரு காதல் திரைப்படம் என்பதே நமக்கு உணர்த்தும்.
இது தமிழ், தெலுங்கு கலந்த காதல் படம். தமிழ்நாட்டுக்கும் ஆந்திர பிரதேசத்துக்கும் எல்லைப் பிரதேசமாக இருக்கும் சித்தூர்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.
சித்தூரில் வசிக்கும் கிரேன் மனோகர், செந்திகுமாரியின் ஒரே மகன் படத்தின் நாயகனான டிஜே அருணாச்சலம். அருகில் இருக்கும் கல் குவாரியில் மேனேஜர் வேலை பார்க்கிறார். அவர் குடியிருக்கும் அதே தெருவில் புதிதாக வந்து குடியேறுகிறார்கள் மந்த்ராவும் அவரது மகள் ஜன்னியும். ஜனனி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஜனனியை யார் காதலிப்பது என்கின்ற பிரச்சினையில் டிஜேவுக்கும், அவரது நண்பனுக்கும் இடையில் மோதலும், சண்டையும் ஏற்படுகிறது இதன் பின்புதான் நாமும் அந்த பெண்ணை காதலித்தால் என்ன என்ற எண்ணம் டிஜேவுக்கு வருகிறது.
வழக்கம்போல சினிமா காதலர்கள் என்ன செய்வார்களோ அதையேதான் டிஜேவும் செய்கிறார். ஜனனியை விடாமல் துரத்துகிறார். காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் இந்த காதலை மந்த்ரா ஏற்கவில்லை. நடு வீதியில் வைத்த அவரை செருப்பாலயே அடித்து விடுகிறார் மந்திரா. இதற்குப் பிறகும் காதல் ஜுரம் குறையாத டிஜே ஜனனியை தனியாக சந்தித்து கதறிப்பதாக சொல்ல ஜனனியும் வழக்கம்போல சினிமா காதலியை போல ஸ்ருதி குறைந்து தானும் காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் மந்த்ரா மட்டும் இன்னமும் தன் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கிறார்.
கிரேன் மாணவரின் நண்பர் ஒருவர் வீடு தேடி வந்து டிஜேவுக்குப் பெண் தருவதாக சொல்கிறார். பிரச்சனை வீட்டில் முற்றிவிட்டதால் காதலியை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை டிஜேவுக்கு. ஆனால் ஜனனியின் வீட்டில் இன்னமும் அவருடைய அம்மா அனுமதி தரவில்லை.
இந்த நேரத்தில் ஜனனி டிஜேபி சந்தித்து, “என்னோட அம்மா ஒரு பண பைத்தியம். பணம் கொடுத்தால் எந்த வேலையும் செய்வார். அதனால் எங்க அம்மாவிடம் பணம் கொடுத்து என்னை பெண் கேள்” என்கிறார். இதற்காக டிஜே தன்னுடைய வீட்டுப் பாத்திரத்தை அப்பாவுக்கு தெரியாமல் கொண்டு போய் அடகு வைத்து 20 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு வந்து மந்த்ரா முன்பாகக் கொட்டுகிறார். “ஜனனியை எனக்கு மணமுடித்து கொடுங்கள்” என்கிறார்.
இப்போது மந்த்ரா சரி என்று சொல்ல இருவருக்கும் நிச்சயத்தார்த்தம் நடக்கிறது. இதன் பின்னர் இவர்களின் திருமணம் நடைபெற்றதா… இல்லையா.. கடைசியில் என்னவானது என்பதுதான் இந்த உசுரே படத்தின் கதை.
நாயகன் டிஜே அசுரன் படத்தில் இளைஞராக நடித்திருந்தார். இந்தப் படத்தில் கொஞ்சம் முதிர் இளைஞராக வந்திருக்கிறார். காதலிக்கும் வயதுதான். காதலனுக்கான தோற்றம் இருந்தாலும் காதலனுக்கான நடிப்பில் சற்று சிரமம்தான். இன்னமும் சில படங்களில் நடித்தால் அந்த தயக்கமும் இல்லாமல் போகும். ஆனால் ஒரு சில காட்சிகளில் தன்னுடைய கோபம், ஆத்திரம், துடிப்பு… இதையெல்லாம் மிக சரியாகவே காட்டியிருக்கிறார்.
ஜனனி போன்ற பெண்ணை பார்த்தால் யாருக்குமே காதலிக்கத்தான் தோன்றும். அந்த வகையில் ஜனனி நம்முடைய பக்கத்து வீட்டுப் பெண் போன்று அழகுடன் இருக்கிறார். அழகான பேச்சுக்கள். பாடல் காட்சிகளில் மிக அழகாக கட்டப்பட்டிருக்கிறார். இடைவேளைக்கு பின்பான சில காட்சிகளில் மட்டுமே இவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
1995-களில் தன்னுடைய பளீர் சிரிப்பினாலே அனைவரையும் கவர்ந்த மந்த்ரா இவ்வளவு சீக்கிரமாக அம்மா கேரக்டருக்கு வருவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அம்மா என்றாலும் கொஞ்சம் வில்லித்தனமான கதாபாத்திரம் என்பதால் சட்டென்று நம் மனசு அவரை வில்லியாக ஏற்கவில்லை. ஏற்க முடியவில்லை. ஆனாலும், இந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்து இருக்கிறார். கடைசியாக அந்தப் பாலத்தின் மீது போகும் பொழுது அவர் காட்டுகின்ற சின்ன புன்சிரிப்பு அடிப்பாவி என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியிலும் தன்னுடைய நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மந்த்ரா.
கிரேன் மனோகருக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திரைப்படம். அன்பான, பாசமான அப்பா. “நைனா”, “நைனா” என்ற தன் மகனை அவர் அழைக்கின்ற பாங்கும், மகனுக்காக தான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதை சொல்லும்போதும் ஒரு அப்பாவுக்கான பாசம் வெளிப்படுகிறது.
இவருடைய அம்மாவாக நடித்திருக்கும் செந்திகுமாரியும் இன்னொரு பக்கம் தன்னுடைய மகனை தலையில் தூக்கிக் கொண்டு கொண்டாடுகிறார்.
டிஜேவின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கத்துரை, ஆதித்யா கதிர், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என்ற மூன்று பேருமே அளவான நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். பாவல் நவகீதன் நல்லதொரு அண்ணனாக டிஜேவுக்கு அட்வைஸ் செய்யும் பொழுது எல்லாருக்கும் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க வேண்டுமே என்று நமக்கு சொல்ல தோன்றுகிறது.
இசையமைப்பாளர் கிரண் ஜோசீன் அட்டகாசமான இசையில் “உசுரே உசுரே” பாடல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. படத்தின் மற்றைய பாடல்களும் அசத்தல் ரகம். டூயட்டுகளில் காதல் ஜோடியை காண்பிக்கும்போது அவ்வளவு அழகாக தெரிகிறது. இந்த ஜோடியை போய் பிரிக்கலாமா என்று வில்லி மந்த்ரா மீது நமக்கு கோபமும் வருகிறது. ஒரு எளிமையான கதைக்கான இசையை அமைத்து படத்தையும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
ஒளிப்பதிவாளர் மார்க் சாய் சித்தூர் அருகே இருக்கும் அந்தக் கிராமத்தின் அழகை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். எளிமையான வீடுகள், இயல்பான தெருக்கள், சின்ன ஊர் என்பதை காட்டிவிட்டு அந்த ஊரில் நடைபெறும் திருவிழாக்களையும், திருவிழா கொண்டாட்டத்தையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.
சாமி கும்பிடுதல். திருவிழா கொண்டாட்டம்… இதையெல்லாம் படத்தில் பார்க்கும் பொழுது நிச்சயம் இது அந்த ஊரின் ஒரு வரலாற்று ஆவணமாகவும் பதிவாகியுள்ளது.
ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான நவீன் டி.கோபால். காதல் கதையாகவே இருந்தாலும் குடும்பக் கதையாகவும், நண்பர்களின் கதையாகவும் இணைத்து ஒரு அழகான மெலோ டிராமாவாக வழங்கி இருக்கிறார்.
பாவல் நவகீதன் தனது புதிய மனைவியுடன் சித்தூர் மலையில் ஏறிக் கொண்டே இந்தப் படத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுகின்றவிதமாக திரைக்கதை அமைத்திருப்பது ஒரு புத்திசாலித்தனம். இயக்குநருக்கு இதற்காகவே நமது பாராட்டுக்கள்.
அதான் நிச்சயதார்த்தமே முடிந்து விட்டதே… பிறகென்ன என்று நாம் நினைக்கும் போதுதான் மந்த்ராவின் உண்மைக் கதையை கொஞ்சம், கொஞ்சமாக வெளிப்படுத்தி இறுதில் நாம் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்டை கொடுத்து நம்மை கண்ணீர் சிந்த வைத்துவிட்டார் இயக்குநர்.
எப்பொழுதுமே காதல் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த படம் அந்த ரசிகர்களின் புண்ணியத்தில் நிச்சயமாக ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.
RATING : 3 / 5









