‘எனக்கு 26 உனக்கு 36’ : புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’

‘எனக்கு 26 உனக்கு 36’ : புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன. காலம், கலாச்சார மாற்றத்திற்கேற்ற மனிதர்களிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது.

காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கணவனைவிட  வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் 26 வயது வாலிபனுக்கும், 36 வயது விவாகரத்தான மென் பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்லும் கதையில் உருவாகிறது ‘ஊர்வசி’ என்ற  வெப் சீரிஸ். இந்த வெப் சீரீஸை ஆர்.ஜி.எஸ். சினிமாஸ் தயாரிக்கிறது. 

இந்த ஊர்வசி’ இணைய தொடரில் நாயகியாக டைட்டில் ரோல் ஏற்று ரேகா நாயர் நடிக்கிறார். நாயகனாக அஸ்வின் ஜெயப்ரகாஷ் நடிக்கிறார். அஸ்வினின் நண்பர்களாக கவுதம், வினோத், சைனா ஆகியோர் நடிக்கிறார்கள். கதையில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நேத்ரா, ஜெஸிகா இருவரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சேகர் ராம் ஜெரால்டு, இசை, பாடல்கள் – ஸ்ரீசாய் தேவ், படத் தொகுப்பு – ரோஜர், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – சிவா என சிறந்த தொழில் நுட்பக் கூட்டணியினர் ஒன்றிணைந்து இத்தொடரை உருவாக்குகிறார்கள்.

இந்த இணையத் தொடரை இயக்குபவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.  இவர் ஏற்கெனவே ‘திடல்’ என்ற படத்தை இயக்கியவர். ஏராளமான குறும் படங்களை இயக்கியிருக்கிறார். இவரது  ‘நிறம்’ என்ற குறும் படம் கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதினை பெற்றது.

கேரளாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. கேரளாவில் பரவலாக பேசப்பட்டது. இதேபோல் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. கால மாற்றத்தில் ஏற்பட்டுள்ள காதலின் போக்கைச் சொல்லும்விதத்தில் இந்தத் தொடர் உருவாகிறது.

வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் வேறு காரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது. நியாயமாகவும், நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.

சென்னையில் ஒரே அறையில்  தங்கி இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவர்தான் கதாநாயகன். வாடகை டாக்சி ஓட்டும் அவனுக்கும் அடிக்கடி அந்த டாக்சியில் பயணியாக வரும் ஒருத்திக்கும் இடையே பரஸ்பரம் புரிதலும், அன்பும், காதலும் ஏற்படும் சூழல் வருகிறது.

இருவருக்குள்ளும் பூசல்கள் முரண்பாடுகள், ஏன் சண்டைகள்வரை செல்கிறது. பிரிவும் நேர்கிறது. அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டு வாழ்க்கையில் இணைகிறார்கள் என்பதைப் பற்றி சொல்லும் படம்தான் இது.

 
Our Score