full screen background image

“சென்சாரில் போராடித்தான் சான்றிதழ் பெற்றோம்…” – ‘உறுதி கொள்’ இயக்குநரின் சோக அனுபவம்..!

“சென்சாரில் போராடித்தான் சான்றிதழ் பெற்றோம்…” – ‘உறுதி கொள்’ இயக்குநரின் சோக அனுபவம்..!

APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உறுதி கொள்’.

இந்த படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகனா நடித்துள்ளார். மற்றும் ‘காளி’ வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் வினிகர், படத் தொகுப்பு – எம்.ஜே.பி., பாடல்கள் – மணிஅமுதன், சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர், தயாரிப்பு – பி.அய்யப்பன், சி.பழனி, எழுத்து, இயக்கம் – R.அய்யனார்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தச் சான்றிதழ்கூட பல போராட்டங்களை நடத்திய பிறகே கிடைத்ததாக படத்தின் இயக்குநர் அய்யனார் வருத்தத்துடன் கூறினார்.

இது பற்றி படத்தின் இயக்குநர் அய்யனார் பேசும்போது, “இன்றைய காலக்கட்டத்தில் சிறிய பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு படத்தை தயாரிப்பதைவிடவும், படத்தை வெளியிடுவதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

இத்திரைப்படம் சென்ற அக்டோபர் 6-ம் தேதியே திரைக்கு வரவிருந்தது. ஆனால் அப்போது திடீரென்று ஏற்பட்ட GST பிரச்சனையால் புதிய படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் எடுத்த திடீர் முடிவினால் படம் வெளியாகவில்லை. இப்போது நவம்பர் 3-ம் தேதியன்று திரையிட்டுக் கொள்ளலாம்  என்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று படத்தை வெளியிடவுள்ளோம்.

முதலில் படத்தின் தலைப்பை ‘எதிர் கொள்’ என்றுதான் பதிவு செய்திருந்தோம். சங்கத்தில் இதே பெயரில் எங்களுக்கு டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் குடுத்தாங்க. படத்துக்கு இதே பெயரில் பப்ளிசிட்டி செய்து வரும்போது இந்தத் தலைப்பை இன்னும் இரண்டு பேர் பதிவு செஞ்சிருக்கிறதா சங்கத்துல சொன்னாங்க. சரி நாம அவங்ககிட்ட போட்டி போட முடியாதுன்னு நினைச்சு எங்களது படத்தின் தலைப்பை ‘உறுதி கொள்’னு மாத்தி பதிவு செய்தோம்.

ஒரு வழியா படத்தை முடிச்சி சென்ஸாருக்கு  கொண்டு போனால், அங்கே முதலில் பார்த்த சென்சார்  கமிட்டி படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. வன்முறை மற்றும் ரேப் சீன்கள் நிறைய இருக்குன்னு காரணம் சொன்னாங்க.

நாங்களும் வாதிட்டோம். ‘ரேப் சீன் படத்தில் காட்சியாக இல்லை, இன்றைக்கு பெண்களுக்கு எதிராக  நடக்குற கொடுமையை விளக்கும்வகையில் ஒரு கதையாகத்தான் சொல்லியிருக்கிறோம்’ என்று முறையிட்டோம். ரீவைஸிங் கமிட்டியில் இரண்டு காட்சிகளை நீக்கியும், சில வசன திருத்தங்களுடனும் ‘U/A’ சான்றிதழ் கிடைத்தது.

பெரிய படங்களுக்கு நிறைய மோசமான காட்சிகளை அனுமதிக்குற  சென்ஸார் சின்ன படத்தைதான் ரொம்பவும் குறி வைக்கிறாங்க, இப்படி மூன்று மாதங்களாக போராடித்தான் இந்த ‘உறுதி கொள்’ படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் வாங்கினேன். அனைத்து தரப்பும் பார்க்கக் கூடிய படமாகத்தான் இந்த ‘உறுதி கொள்’ உருவாகி இருக்கிறது…” என்றார் இயக்குநர் அய்யனார்.

Our Score