K-3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாசப்பா தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘திட்டி வாசல்’.
இந்தப் படத்தில் நடிகர் நாசர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னி வினோத் நடித்துள்ளார்கள். மற்றும் தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய் ரத்னம், ஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜி.ஸ்ரீனிவாசன். இசை – ஹரீஷ், சத்தீஷ், ஜெர்மன் விஜய் பாடல்கள்- நா.முத்துக்குமார், சதீஷ், சிவ முருகன். நடனம் -‘தில்’ சத்யா, ராஜு. சண்டை பயிற்சி – ‘வயலன்ட் ‘வேலு, த்ரில்லர் மஞ்சு, எழுத்து, இயக்கம் – பிரதாப் முரளி.
படம் பற்றி இயக்குநர் பிரதாப் முரளி பேசும்போது, “திட்டி வாசல்’ என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும். இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது. அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகளை பிரதிபலிக்கும் படமாகவும் இந்த ‘திட்டி வாசல்’ உருவாகியிருக்கிறது .
சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது..?
சராசரி மனிதர்கள் நீதி வேண்டி காவல் துறையினரிடம் வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும், குறைந்தபட்ச மரியாதையும்கூட கிடைப்பதில்லை. பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர். எந்தவித நடவடிக்கையுமில்லை என்பதால் மக்களும் பலமுறை மனு தந்து கொண்டே இருக்கின்றனர்.
தமது பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என வருந்துகின்றனர். சிலர் விரக்தியடைகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் நீதி கிடைக்காத சாமானிய மக்கள் வாழ்வை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர். வேறு வழியின்றியும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்கின்றனர். உடனேயே அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் அதி தீவிரமாக செயல்படுவதுபோல பாவ்லா காட்டி அச்சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.
இப்படிப்பட்ட சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் இறந்து விடுகிறாள்.இறந்த பெண் யார்…? அவளின் பிரச்சனைகள் என்ன…? அதன் தீர்வுதான் என்ன…? என்பதே இந்த ‘திட்டிவாசல் ‘படத்தின் மையக் கதை…” என்றார் இயக்குநர்.
வரும் நவம்பர் 3-ம் தேதி இந்த ‘திட்டி வாசல்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.