ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் L.சிவபாலன் தயாரிக்கும் படம் ‘உறுமீன்’. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். இதில் ‘சூது கவ்வும்’, ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார்.
இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமா குமார், கலையரசன், ‘மூடர் கூடம்’ மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு முன்னணி கதாநாயகர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இசை : அச்சு, ஒளிப்பதிவு : ரவீந்திரநாத் குரு, இணை தயாரிப்பு : சமன்யா ரெட்டி.
இதுவொரு ஆக்ஷன், திரில்லர் வகை திரைப்படமாகும். 1990-களில் இருந்து 2014-வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளதார குற்றங்களின் விசாரணைகள், நடப்புகள் மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஹைதராபாத், பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. புறநானுற்றின் 13 வரிகளை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டுள்ளது. மும்பையிள் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
வித்தியாசமான கதைகளுக்கு, வித்தியாசமான திரைக்கதைகளுக்கு தமிழ் ரசிகர்கள் மிகப் பெரிய ஆதரவினை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் இந்தப் படமும் அந்த ஆதரவினை எதிர்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கிறது..!