சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்தின் பெயர் ‘தர்பார்’ என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ரஜினியும், ஏ.ஆர்.முருததாஸும் இணையும் முதலாவது படம் இதுவாகும்.

‘2.0’ படத்திற்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தின் மூலமாக மீண்டும் இணைகிறது லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. ‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்த மலையாள நடிகையான நிவேதா தாமஸ் இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. மற்றும் தற்போது தமிழ்த் திரையுகத்தில் நகைச்சுவை நடிப்பில் முன்னணியில் இருக்கும் யோகி பாபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு அனிருத் இசையமைக்கும் ரஜினியின் படம் இது. அதேபோல் ‘கத்தி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸூடன் இந்தப் படத்தின் மூலமாக இணைகிறார் அனிருத்.

தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘தளபதி’ படத்திற்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் மூலமாக ரஜினியுடன் இணைகிறார் சந்தோஷ் சிவன். இதேபோல் ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இரண்டு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கும் சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு பணியைச் செய்யவிருக்கிறார்.

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் துவங்கவிருக்கிறது. நாளைய தினம் துவங்கவுள்ள இந்த ‘தர்பார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் தேர்தல் டிரெண்ட்டையும் மீறி உடனடியாக டாப் இடத்தைப் பிடித்துவிட்டது.

அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று இப்போதே அறிவித்துவிட்டார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதால் அவரது ரசிகர்களிடையே இந்தப் படம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Our Score