‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதுபோல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்து 2016-ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘உறியடி.’
இத்திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் ‘உறியடி’யில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது ‘உறியடி-2’ திரைப்படம்.
இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.
சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு, அதற்கானத் தீர்வைச் சொல்லும் படமாக இந்த ‘உறியடி-2’ திரைப்படம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இதிலும் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும், இந்தப் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கூடவே யூ டியூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்திருக்கிறார்.
‘உறியடி’யில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் அனைவரும் இதிலும் ஒன்றிணைந்துள்ளார்கள். ‘அசுர வதம்’ படத்தில் தன் அசுர பலத்தைக் காட்டி, ‘96’ படம் மூலமாக இன்ப ராகம் ஊட்டிய கோவிந்த் வசந்தா இந்த உறியடி-2 படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் நடிகரும், இயக்குநருமான விஜய்குமார், ‘உறியடி-2’ படம் பற்றிப் பேசினார்.
“இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப் பிரிவினைதான் பெரும் பிரச்சனை. அதுதான் ‘உறியடி’, ‘உறியடி-2’ ஆகிய படங்கள் வருவதற்கான காரணம்.
எனக்கு ரொம்பவும் பிடிச்சது சினிமா. மக்களைச் சுலபமா கவர்ந்திழுக்கும் விஷயமும் சினிமாதான். அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறதுதான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. இதுவரையிலும் களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல.
‘Of all the arts, for us cinema is the most important’னு லெனின் சொல்லியிருக்கார். ‘கலைகளில் சினிமாதான் பெருசு’ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர்.
எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. சரி தவறைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப்படுத்தணும் என்கிற எண்ணமும் எனக்குள் எப்போதும் இருக்கு.
ஒரு நாள் 2-டி நிறுவனத்தின் ராஜசேகர் சாரை சந்திச்சேன். அப்போ ‘உறியடி-2’ கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடிச்சிருந்தது. உடனடியா முழுக் கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒரு சில கேள்விகள் கேட்டார். “எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா பண்ணலாம்”னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது.
காரணம், ‘உறியடி’ பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள். பொருளாதார இழப்பைவிட மன வலி அதிகமா இருந்தது. ‘உறியடி-2’ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது நிம்மதியா இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷுட்டிங் முடியுறவரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சிட்டோம். படம் கோடை கால வெளியீடாக வெளிவரவுள்ளது..” என்றார் உற்சாகமாக.