தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் ராதாமோகன் தனக்கென ஒரு தனி இடத்தை நிர்ணயித்து கொண்டவர். வித்தியாசமான கதை களம் மூலமாகவும், அந்த படங்களின் வித்தியாசமான தலைப்பு மூலமாகவும் அவருக்கென்று ஒரு பிரத்தியேக ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அவருடைய அடுத்த படமான ‘உப்பு கருவாடு’-ம் இதைத்தான் ஊர்ஜிதம் செய்கிறது.
சமீபமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள கருணாகரன் ஹீரோவாகவும், நந்திதா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் எம். எஸ்.பாஸ்கர், மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன் மற்றும் ‘டவுட்’ செந்தில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரபல கிட்டார் இசைக் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார். கதிர் கலை இயக்கம் செய்திருக்கிறார். ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் நடனம் அமைக்கும் பணியுடன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். வசனத்தை பார்த்திபன் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராதாமோகன்.
ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்த ‘உப்பு கருவாடு’ திரைப்படம் ரசிகர்களை கவரும் வித்தியாசமான கதைக் களம் கொண்ட படமாகும்.
‘உப்பு கருவாடு’ பற்றி பேசிய இயக்குநர் ராதாமோகன், “கடல் சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் ‘உப்பு கருவாடு’ அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் படம்.
ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சிய பயணத்தை தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை பற்றியதுதான் இந்தப் படத்தின் கதை.
லட்சியம் உள்ளவர்கள் எதிலும் சமரசமாகி விடக்கூடாது. இந்த சமரசமே நமது லட்சிய பயணத்தை மேற்கொள்ள விடாமல் தடுக்கும் என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறேன்.
நகைச்சுவை படங்கள் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு தீராத மோகம் உண்டு. என்னுடைய முந்தைய படங்களில்கூட நகைச்சுவை பிரதானமாக தெரியும். இந்த ‘உப்பு கருவாடு’ படத்தில் அதற்கேற்ற சரியான கதைக் களம் அமைந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..” என்றார் ராதாமோகன்.
தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகையில் “ஒரு நாள் ராதாமோகனிடம் இந்தக் கதையை நான் எதேச்சையாக கேட்க நேரிட்டது. கேட்ட மாத்திரத்திலே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என உந்துதல் ஏற்பட்டது. அந்த உந்துதலே ‘உப்பு கருவாடு’ உருவாகக் காரணம், ரசிகர்களை இடைவிடாமல் சிரிக்க வைக்கும் இந்த ‘உப்பு கருவாடு’ படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்…” என்றார்.