காலம் மாறினால் ஆட்சி மாறும்.. ஆட்சி மாறினால் கோலமும் மாறும் என்பார்கள். அது நமது தமிழ்நாட்டுக்கு மிகப் பொருத்தமாகத்தான் இருக்கிறது..
சென்ற தி.மு.க. ஆட்சி இருக்கின்றவரையில் எந்தப் படத்துக்கும் இது போன்ற பிரச்சினை வந்ததே இல்லை. இப்போது அதிமுக ஆட்சியில்தான் பிரச்சினை. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் தயாரிக்கும் எந்தப் படத்திற்கும் வரிவிலக்கு அளிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறது அதிமுக அரசு..
வரிவிலக்கு பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தும் ரெட்ஜெயன்ட்ஸ் தயாரித்த படங்கள் என்ற ஒரே காரணத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, மற்றும் ‘நீர்ப்பறவை’ ஆகிய இரண்டு படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதற்கெதிராக உதயநிதி ஸ்டாலின் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். அது நிலுவையில் உள்ள நிலையில், இப்போது 3-வதாக இன்னொரு வழக்கையும் போட வேண்டிய சூழல்.
உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படம் அடுத்த வாரம் ரிலீஸாகப் போகிறது. அதற்கு வரிவிலக்கு கேட்டு ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பித்தும் இன்னும் அரசுத் தரப்பில் இருந்து ஒரு ஸ்டெப்கூட இல்லையாம்.. இது வேலைக்கு ஆகாது என்பதால் தற்போது உதயநிதி தரப்பு கோர்ட்டுக்குச் சென்றுள்ளது. இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறதாம்..
அரசியலையும் தாண்டிய கலைத்துறையில் இதனை ஒரு தொழிலாகச் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அது நேர்மையாக இருக்கும்பட்சத்தில் அதற்குரிய உரிமைகளை வழங்குவதுதான் சிறந்த நீதிபரிபாலனத்திற்கு உதாரணம். இப்போதைய அரசு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடன் இப்படி தொடர்ந்து 3 படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறி மறுப்பது ஜனநாயகமில்லையே என்று வருத்தப்படுகிறர்கள் நடுநிலையாளர்கள்..
இதனை அரசிடம் எடுத்துச் சொல்லி வரி விலக்கு வாங்கித் தர வேண்டியது திரைப்பட அமைப்புகளின் பொறுப்பு. தயாரிப்பாளர் சங்கத்திற்கு மிகப் பெரிய கடமை இதில் உண்டு. ஆனால் அவர்களோ இது பற்றி பேசவே மறுக்கிறார்களாம்..! நாளை ஆட்சி மாறி தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தயாரிப்பாளர் சங்கம் அப்போது உதயநிதியை தேடிப் போக வேண்டிய சூழல் வருமே..!? யாராவது இது பற்றி யோசித்தார்களா..?









