full screen background image

“ஹீரோக்கள் மீதிருக்கும் சுமையை இந்தப் படத்தில்தான் உணர்ந்தேன்…” – நடிகை சமந்தா பேச்சு..!

“ஹீரோக்கள் மீதிருக்கும் சுமையை இந்தப் படத்தில்தான் உணர்ந்தேன்…” – நடிகை சமந்தா பேச்சு..!

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய்.கம்பைன்ஸ் மற்றும் பி.ஆர்.8. கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’.

கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக்குதான் இது.

இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமாரே இந்த ரீமேக் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

வரும் செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் அக்கார்டு மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. ‘விஸ்வாசம்’ படத்தின் இயக்குநரான சிவா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.

7H7A0364

இயக்குநர் பவன்குமார் பேசுகையில், “இந்த தமிழ் யு-டர்ன் கன்னடத்தைவிட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம்.

கடைசி 30 நிமிடங்கள் மிகவும் திரில்லாக இருக்கும். கன்னட படம் ட்ரெய்லர் வெளியானபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காகத்தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன்.

சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள் பல நல்ல சினிமாக்களை பார்த்தவர்கள், இந்த படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்…” என்றார்.

naren

நடிகர் ஆடுகளம் நரேன் பேசுகையில், “பவன் குமாரின் ‘லூசியா’வை தமிழில் ரீமேக் செய்தபோது அதிலும் நான் நடித்தேன், இன்று அவர் இயக்கத்தில் தமிழிலேயே நடித்தது மகிழ்ச்சியான விஷயம். படத்தில் சமந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தெலுங்கு  வசனங்களில் நான் தடுமாறும்போது எனக்கு ஆதி உதவியாக இருந்தார்…” என்றார்.

rahun raveendiran

நடிகர் ராகுல் ரவீந்திரன் பேசுகையில், “நான் ஒரு சென்னை பையன். தமிழில்தான் அறிமுகம் ஆனேன். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தது மகிழ்ச்சி. இயக்குநர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதை சரியாக கேட்டு வாங்குவார்.

10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதை பார்க்கிறேன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார். நிறைய ட்விஸ்ட் இருக்கு…” என்றார்.

aadhi

நடிகர் ஆதி பேசுகையில், “வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம். ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மை கேட்கும்போது நடித்துவிட வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் மிகச் சிறப்பான படத்தை கொடுப்பது என்பதுதான் மிக சவாலான விஷயம். அதனால்தான் ‘பவன் குமார் படத்தில் நடிக்கிறீங்களா..?’ என கேட்டவுடனேயே அவருக்காகவே  ஓகே சொன்னேன்.

சமீப காலங்களில் ‘காக்கா முட்டை’, ‘அருவி’ போன்ற படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அது மாதிரியான ஒரு படம்தான் இது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்து 3 தமிழ் படங்களில் நடிக்க போகிறேன், அடுத்த இரண்டு வருடங்கள் சென்னைலதான் இருக்கப் போகிறேன்..” என்றார்.

samantha

படத்தின் நாயகி சமந்தா பேசும்போது, “எனக்கு எப்போதுமே மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் ஆசை. அதுதான் இந்தப் படத்துக்குள் என்னை கொண்டு வந்தது.

‘லூசியா’ படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் அது நிறைவேறியிருக்கிறது.

இந்தப் படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதைதான் படத்தின் மிகப் பெரிய ஹீரோ. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு.

இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்தப் படத்தை முடித்தோம்.

எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில்தான் நான் உணர்ந்தேன்.

இந்தப் படத்தின் டிரெயிலர் ரிலீஸானபோது 2 மில்லியன் வியூஸ் போகும். ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்த படம் இருப்பதாக உணர்கிறேன்…” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.

dhananjayan

விநியோகஸ்தரான தனஞ்செயன் பேசும்போது, “நான் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முயற்சித்தேன். ஆனால் அதை வாங்க முடியவில்லை. எப்படியாவது இந்த படத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என நினைத்தேன். அதுதான் இந்த படத்தை நான் ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது.

சமந்தா இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. புதுவிதமான, சீரியஸான சமந்தாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள். சமந்தா நடித்த சமீபத்திய படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி வருகின்றன. இந்த படமும் நிச்சயம் நல்ல வசூலைக் கொடுக்கும்.

இந்தப் படத்தின் ஒரிஜினல் கன்னட பதிப்பை 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன், எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருந்தார். அதுதான் படத்தின் ஹைலைட். இந்தப் படத்தில் அதை விடவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார் இயக்குநர் பவன்குமார்..” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Our Score