full screen background image

“இயக்குநர் ஷங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் கோர்ட்டில் வழக்கு…” – திருநங்கைகள் எச்சரிக்கை..!

“இயக்குநர் ஷங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் கோர்ட்டில் வழக்கு…” – திருநங்கைகள் எச்சரிக்கை..!

‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் குறிப்பிட்ட காட்சிகளை கண்டித்து சென்சார் போர்டு அலுவலகம் அமைந்திருக்கும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு திருநங்கைகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

transgender-protest-2

மேலும் தணிக்கைத் துறை அதிகாரிகளை சந்தித்த திருநங்கைகளின் பிரதிநிதிகள், ‘ஐ’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கும்படி மனு அளித்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு பானு என்ற பொறியாளர் மாணவி தலைமை தாங்கினார். சித்தா டாக்டர் செல்வி சந்தோஷ், நடிகை ரோஸ், பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்தின்போது, திருநங்கை பானு நிருபர்களிடம் பேசும்போது, “ஐ’ திரைப்படத்தில், திருநங்கையை அறிமுகப்படுத்தும் காட்சியின்போது, ‘ஊரோரம் புளிய மரம்… உலுப்பி விட்டால் சல சலக்கும்…’ என்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளனர். இதனால், தற்போது வளர்ந்து வரும் எங்களை போன்ற திருநங்கைகள் சாலைகளில் செல்ல முடிவதில்லை. மீண்டும் எங்களை பார்த்து கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது.

transgender-protest-1

எனவே, திருநங்கைகளை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அந்த காட்சிகளை நீக்கும்வரை ‘ஐ’ திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். டைரக்டர் ஷங்கர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இனிமேல், இது போன்று திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடக்கூடாது..” என்றார்.

அதைத் தொடர்ந்து, திரைப்பட தணிக்கைத்துறை இயக்குநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்துவிட்டு திரும்பிய திருநங்கை பானு மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஐ’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக திரைப்பட தணிக்கைத் துறை இயக்குனர் எங்களிடம் உறுதி அளித்திருக்கிறார். மேலும், இது போன்று திருநங்கைகளை வைத்து தயாரிக்கப்படும் படங்களை இனிமேல் ரிலிஸூக்கு முன்பே திருநங்கைகளின் பிரதிநிதிகளுக்கு போட்டு காண்பிப்பதாகவும் கூறி உள்ளார்.

எனினும், இன்னும் இரு தினங்களுக்குள் டைரக்டர் சங்கர், நடிகர்கள் விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ பதில் சொல்ல அவர்கள் தயாராக இருக்க வேண்டும்…” என்று கொதிப்புடன் கூறினார்.

Our Score