“ஐ’ படம் திருநங்கைகளை கேவலப்படுத்தவில்லை. போராட்டம் வேண்டாம்..” – படத்தில் நடித்த திருநங்கை ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள்..!

“ஐ’ படம் திருநங்கைகளை கேவலப்படுத்தவில்லை. போராட்டம் வேண்டாம்..” – படத்தில் நடித்த திருநங்கை ஓஜாஸ் ரஜனி வேண்டுகோள்..!

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை கேவலமாக கிண்டல் செய்திருப்பதாகக் கூறி தமிழகம் முழுவதும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் “அந்தப் படத்தில் திருநங்கைகளை எந்த விதத்திலும் தவறாக காட்டவில்லை..” என அப்படத்தில் நடித்துள்ள திருநங்கை ஓஜாஸ் ரஜனியே கூறியுள்ளார்.

ojas-rajini

இந்தியாவின் மிகச் சிறந்த மேக்கப் கலைஞர் ஓஜாஸ் ரஜனி. இவர் ஒரு திருநங்கையாவார். இவர் ஐஸ்வர்யா ராய் உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பெர்சனல் மேக்கப்மேனாக இருந்தவர்.  ‘ஐ’ படத்தில் அதே கேரக்டரில் நடித்துள்ளார்.

விக்ரமிற்கு மேக்கப் மற்றும் ஸ்டைலிஸ்டாக வரும் இந்த ஓஜாஸ் ஒரு கட்டத்தில் விக்ரமின் மீது காதல் கொள்வதும், அதை விக்ரம் உதாசினப்படுத்துவது போன்றும் காட்சிகள் நகரும். விக்ரம் தன் காதலை ஏற்க மறுத்ததால் விக்ரமனின் முக்கிய வில்லன்களில் ஒருவராக மாறுவார் ஓஜாஸ்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் போராட்டக் களத்தில் குதித்துள்ள திருநங்கைகளை சமாதானம் செய்யும் பொருட்டு ஓஜாஸ் ஒரு கடிதம் வாயிலாக தனது கருத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”ஐ படத்தினை பார்த்து யாரும் கோபப்பட வேண்டாம். இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தினை மிக அழகுடனும், செய்நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார். என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற காதல் வயப்படுதல்.. அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே படத்தில் காட்டியிருக்கிறார்.

திருநங்கைகளை எந்த விதத்திலும் ‘ஐ’ படத்தில் தவறாக காட்டவில்லை. ‘ஐ’ திரைப்படம் சிறந்த ஸ்டார் நட்சத்திரங்களைக் கொண்டு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது படம் நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திருநங்கைகள் யாரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இது படத்தினை பெரிதும் பாதிக்கும்…” எனக் கேட்டுக்கொண்டுள்ளார் ஓஜாஸ்.

ஒரு திருநங்கையாக இருந்து கொண்டு அவரே தன்னையும் அவமதித்து எங்களையும் சேர்த்தே அவமதித்திருக்கிறார் என்கிறார்கள் மற்றவர்கள். அவரோ அது வெறும் சினிமா மட்டுமே என்கிறார்.  இது சுலபத்தில் முடிகிற விஷயமில்லை..!

Our Score