உள்ளாட்சிகளுக்கான கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கும்படி தமிழக அரசுக்கு தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான இயக்குநர் டி.ராஜேந்தர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை இது :
“ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதைவிட கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (LBT) வரி.
மத்திய அரசு போட்டுவிட்டது GST வரி.. பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது Extra வரி..? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.
மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால், இந்த தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி..? இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனி தீவா..? எங்கள் திரையுலகை கொடுக்கிறார்களா காவா..?
இதே கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கேளிக்கை வரியை ரத்து செய்தார். அதே போன்று முதல்வர் ‘அம்மா’ அவர்களும் கேளிக்கை வரியை ரத்து செய்தார்.
மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த ‘அம்மா’ அவர்கள் அமைத்து தந்த ஆட்சி, அதைதான் தற்போது வழி நடத்தி வருகிறார்கள். பேச்சுக்கு பேச்சு… மூச்சுக்கு மூச்சு… ‘அம்மா அரசு’ என்று சொல்கிறீர்களே, ‘அம்மா’ போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழக திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்…?
இயல்பாக இருக்கும்போதே சினிமா உலகம் பெரும்பாடுபட்டது. மேலும் இந்த கொரோனா காலத்தில் பெரும் பிரச்சனை.
திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8% கேளிக்கை வரியை முதலில் நீக்கிவிடுங்கள். எங்களால் இந்த இடர்களை தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சி காலம் முடிய போகிறது. எப்போது எங்கள் தமிழ் திரையுலகிற்கு பொழுது விடியப் போகிறது…?
பொறுக்க முடியாது இனி.. பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி..! இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல்.. கோட்டையில் இருப்பவர்கள் இதை சாதாரணமாக போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை…”
என்று தனது அடுக்கு மொழி வசனத்தால் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் டி.ராஜேந்தர்.









